வணக்கம் குழந்தைகளே!

லாக்டவுன் முடிந்து, பள்ளி திறந்ததும் மாவட்டத் தலைநகரிலுள்ள அறிவியல் மையத்திற்குச் சென்று வருவோம், அதற்கு 50 ரூபாய் தேவைப்படும், இப்பொழுதே உண்டியலில் சேமிக்க ஆரம்பித்து விடுங்கள், என்று அறிவித்தார் ஆசிரியர் செல்வராஜ்.

குழந்தைகளுக்கு உற்சாகம் தொத்திக்கொண்டது. நண்பர்களான செழியனும், குழலியும் அந்த வகுப்பில் தான் படித்து வந்தார்கள்.

செழியனுக்கு தினமும் இரண்டு ரூபாய் அவனது தாத்தா கொடுப்பார். கொரோனாவுக்கு முன்பான காலத்தில், தினமும் அந்த இரண்டு ரூபாயில், ஒரு ரூபாய்க்கு பள்ளி வாசலில் வெள்ளரிக்காய், கடலை மிட்டாய் போன்ற பண்டங்களை ஈ மொய்க்காமல் சுத்தமாக இருக்கிறதா என்று பரிசோதித்து வாங்கிச் சாப்பிடுவான். மீதம் ஒரு ரூபாயைப் பள்ளிச் சிறுசேமிப்பு திட்டத்தில்  சேமித்து வைப்பான். அந்தச் சேமிப்புத் தொகையைப் பள்ளிச் சுற்றுலாவுக்குப் பயன்படுத்திக் கொள்ளும் வழக்கமும் அவர்கள் பள்ளியில் இருந்தது.

இப்பொழுது பள்ளிக்குச் செல்ல முடியாததால் உண்டியலில் போட்டு வைக்க ஆரம்பித்தான். ஒவ்வொரு ரூபாய் போடும் போதும் நேற்று வரை பதினைந்து ரூபாய் இன்று ஒரு ரூபாய் சேர்த்து பதினாறு ரூபாய் என்று சொல்லிப் போடுவான். இதன் மூலம் அவனது ஞாபக சக்தியும், எண்ணிக்கைப் பழக்கமும் சேர்ந்தே வளர்கிறதே என்று அவன் அம்மா அவனைப் பாராட்டுவார்.

piggy bank

குழலிக்கும் இதே போன்று சிறு சேமிப்பு பழக்கம் இருந்ததால் நண்பர்கள் இருவரும் சுற்றுலாவுக்கு எவ்வளவு பணம் சேர்ந்திருக்கிறது என்று அவ்வப்பொழுது கலந்து பேசிக் கொள்வார்கள்.

சுற்றுலாவுக்குத் தேவையான பணம் சேர்ந்ததும் தன்னுடைய குட்டித் தம்பியின் பிறந்தநாளுக்காக இன்னொரு உண்டியல் சேர்க்கப்போவதாக குழலி செழியனிடம் பேசி கொண்டிருந்தாள். இதைக் கேட்டு மகிழ்ந்த குழலியின் அம்மா குந்தவியும் இவர்களின் உரையாடலோடு இணைந்து கொண்டார்.

குந்தவி அம்மா, குழலி மற்றும் செழியனின் அருகில் உட்கார்ந்து, “இந்த பிறந்தநாள் பரிசுக்காக இப்பொழுதே சேமிக்க வேண்டும் என்ற உன் எண்ணத்தை பாராட்டுகிறேன். சிறுசேமிப்போடு தொடர்புடைய பழமொழிகள் உங்களுக்குத் தெரியுமா?”, என்று கேட்டார்.

“சிக்கனம் வீட்டைக் காக்கும், சேமிப்பு நாட்டைக் காக்கும்”, என்று எங்கள் சிறுசேமிப்பு அட்டையில் எழுதியிருக்கும் அத்தை என்றான் செழியன்.

“சிறுக கட்டிப் பெறுக வாழ்” – ஆச்சி அடிக்கடி சொல்லுவாங்களே என்றாள் குழலி துள்ளலுடன்.

“ரொம்ப சரியா சொன்னிங்க குழந்தைகளே, “பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை”, என்று வள்ளுவர் கூடச் சொல்லியிருக்கிறார். நீங்க பெரியவர்களானாலும் இந்தச் சிறு சேமிப்புப் பழக்கத்தை விடாமல் கடைப்பிடிக்க வேண்டும். நம் வீடு கட்டும்போது நிறைய பணம் தேவைப்பட்டது இல்லையா குழலி, நானும் அப்பாவும் 10 வருடமாக தொடர்ந்து வார சேமிப்பு, மாத சேமிப்பு என வங்கியிலும், அஞ்சல் அலுவலகத்திலும் சேமித்ததனால் தான் நம்முடைய கனவு இல்லத்தில் மகிழ்ச்சியாக இருக்கிறோம், இது போல் நீங்களும் வேலைக்குப் போகும் அல்லது சொந்தமாகத் தொழில் புரியும் காலத்தில் பல்வேறு சேமிப்புத் திட்டங்களைத் தெரிந்து கொண்டு உங்களின் வருமானத்திற்கேற்றவாறு உங்கள் சேமிப்பையும் திட்டமிட்டுச் செய்து செழிப்பாக இருக்கணும். வேலை பார்த்துக்கொண்டே மேற்படிப்பு படிக்க ஆசைப்பட்டால், அதற்கான பணத்தைச் சேமிக்க நீங்கள் திட்டமிடலாம். மருத்துவச் செலவுகளை கையாள்வதற்கென்று சில சேமிப்புத் திட்டங்கள் இருக்கு, அதையும் நீங்கள் தெரிந்து வைத்து கொள்ளலாம்.

என்ன குழந்தைகளே! நீங்களும் சிறுசேமிப்பு அல்லது உண்டியலில் சேமித்து வைக்கும் பழக்கம் உள்ளவர்களா? சபாஷ், அப்படி இல்லையெனில், பெற்றோரின் அனுமதியோடு உண்டியல் வாங்கிச் சேமிப்பு பழக்கத்தை ஆரம்பியுங்கள்.

மேலும், “அது எப்படி நம் சேமிப்பு நாட்டுக்கு உதவும்?”, “இதுவரை எதுவெல்லாம் சேமிப்பால் அடைந்த வெற்றி?”, என்று வீட்டுப் பெரியவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள் செல்லங்களே.

What’s your Reaction?
+1
3
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Inline Feedbacks
View all comments