அருணும், அனிதாவும் “கனி அத்தை!” என்று அழைத்துக்கொண்டே உள்ளே வந்தனர்.

(ஒவ்வொரு ஞாயிறு அன்றும் கனி அத்தை வீட்டுக்குக் கதைக் கேட்க வந்துவிடுவார்கள், பக்கத்து வீட்டுப் பசங்க.)

“வாங்க செல்லங்களா!”

கனி அத்தை வீட்டில் தோட்டத்தில் நிறைய பூச்செடிகள், மரங்கள்  இருக்கும். அங்கு ஊஞ்சல் போட்டிருப்பார்கள். அதில் தான் கனி அத்தையும், அருணும், அருணாவும் உட்கார்ந்து எப்போதும் கதை பேசுவார்கள்.

“இன்னிக்கு என்ன கதை சொல்லப் போறீங்க அத்தை?”

“ம்.. காமராஜர் ஐயாவைப் பற்றிச் சொல்லட்டா?”

“எனக்குத் தெரியுமே!” என்றாள் அனிதா.

“அப்படியா, சரி உனக்குத் தெரிந்ததைச் சொல்லு கேட்கலாம்”

Kamarajar

“அவர் தான் சத்துணவுத் திட்டம் கொண்டு வந்ததா எங்க டீச்சர் சொன்னாங்க. இன்று ஜூலை 15, அவர் பிறந்த நாள். அதைக்கூட இப்போ கல்வி வளர்ச்சி நாளாக ஸ்கூலில் கொண்டாடுறாங்க.”

“சூப்பர் மா. இவ்வளவு விஷயம் தெரிந்து வைச்சிருக்க!”

“எங்க டீச்சரும் சொல்லியிருக்காங்க” என்றான் அருண்.

“சரி சரி! நீயும் சொல்லு”

“அவர் விருதுநகரில் பிறந்தவர். அப்புறம் அப்புறம் ஒன்பது வருடம் முதல்வராக இருந்தார். படிக்காத மேதைன்னு சொல்லுவாங்களாம்”.

“அருமைடா தங்கம்!”

“இப்போ எனக்குத் தெரிந்ததைச் சொல்லவா?”

“அதிகமா தொழிற்சாலைகளும் நீர்ப்பாசன திட்டங்களும் அவர் ஆட்சியில் கொண்டு வந்தார். அவரைக் ‘கருப்பு காந்தி’ன்னு சொல்வார்கள்”

“அவர் முதல்வரான கதை சொல்லுங்க”-அருண்.

“ராஜாஜி குலக்கல்வித் திட்டத்தை அறிவித்தபோது கடும் எதிர்ப்பு வந்தது”

“குலக்கல்வின்னா என்ன அத்தை?”-அனிதா.

“காலையில் பள்ளியில் படிப்பு, மாலையில் அவரவர் குலத்தொழிலை செய்வது எனும் முறை. இக்கட்டான சூழலில் ராஜாஜி முதல்வர் பதவியில் இருந்து விலக,காமராஜர் முதல்வரானார். அத்துடன் குலக்கல்வி முறையை ஒழித்தார்.”

“இதெல்லாம் டீச்சர் சொல்லல?” என்றாள் அனிதா.

“அதான் நான் சொல்றேனே!”

“அவர் அமைச்சதுல முக்கியமான தொழிற்சாலைகள்ன்னு சொன்னால் திருச்சியில் உள்ள பாரத மிகு மின் நிறுவனம்(BHEL), நெய்வேலி நிலக்கரி நிறுவனம், ஒருங்கிணைந்த இரயில் பெட்டி தொழிற்சாலை(Integrated coach factory- ICF) இவற்றைச் சொல்லலாம்.

“இன்னிக்கு ஸ்கூலில் நடக்கும் அவர் பிறந்த நாள் விழாவில் சொல்ல இன்னும் கொஞ்சம் விஷயம் சொல்லுங்க அத்தை. அவரைப்பற்றி சொல்லி நானும் கைத்தட்டல் வாங்கிக்கறேன்”

“வைகை அணை கட்டும்போது சில கிராமங்களை அங்கிருந்து இடமாற்றும் நிலை  ஏற்பட்டது. அப்போது காமராஜர் அணையைப் பார்க்க வந்தபோது கிராம மக்கள் அவர் வரும்போது கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பைத் தெரிவித்தார்களாம். அதைக் கண்டு, ‘நாம நல்லது தானே செய்தோம். இந்த மக்கள் இப்படி எதிர்ப்புக் காட்டுறாங்களே?’ என்று ஒரு அதிகாரி வருத்தப்பட்டாராம்”.

அதற்கு “நாடு நல்லா இருக்க நாலு பேர் வெறுத்தா என்ன?” என்று சொன்னாராம் காமராஜர்.

“அவரோட எளிமையைப் பற்றி சொல்லுங்க அத்தை.”

“அவர் முதல்வராக இருந்த போதும் அவங்க அம்மா விவசாய வேலைப் பார்த்தாங்க. அவங்க அம்மாவைத் தன் கூடக் கூட்டி வந்தால் உறவினர்கள் சிபாரிசு செய்ய வருவார்கள் என்று சொல்லி அவங்கள ஊரில் தனியே விட்டிருந்தார் காமராஜர். ஒருமுறை பத்திரிக்கையாளர் சந்திப்பில் தோளில் துண்டை மாற்றிப் போட்டிருந்தாராம். அதைப்பற்றி நிருபர்கள் கேட்க, “ஒண்ணுமில்லை!” என்று சொன்னாராம். அவர்கள் விடாமல் கேட்க, “அந்தப் பக்கம் சட்டைக் கிழிந்து இருக்கு. அதான் மாற்றிப் போட்டிருக்கேன்!” என்று சொல்லிக் கிழிசலைக் காட்டினாராம். நிருபர்களுக்கு ஒன்றுமே சொல்ல முடியவில்லையாம். ஏன்னா அப்போ அவர் முதல்வராக இருந்தார்!”

“இப்படியும் இருந்துருக்காங்க. ஆச்சர்யமா இருக்கு அத்தை! இன்னும் சொல்லுங்க” என்றாள் அனிதா.

“கல்லூரி மாணவன் ஒருவனைக் கண்டக்டர் ஒருவர் அடித்துவிட்டதால் அவர்கள் பஸ்ஸை நிறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதை அறிந்த காமராஜர் அந்த இடத்திற்கு நேராக வந்து கண்டக்டரைக் கண்டித்தார். “உடனே உன்னை சஸ்பெண்ட் பண்றேன்!” என்று சொன்னார். அந்த மாணவனையும் கண்டித்தார். கூட்டம் கலைந்தது. அதிகாரியிடம், ‘மூன்று நாள் கழித்து வேறு ரூட்டுக்கு அவரை வேலைக்குப் போக சொல்லுங்க’ என்று சொன்னாராம். பிரச்சனைகளைத் தீர்ப்பதில் வல்லவர்”

“நீங்க சொல்லச் சொல்ல முதல்வன் படத்தில் உள்ள முதல்வராக அவர் இருந்திருக்கார்ன்னு தெரியுது அத்தை” என்றான் அருண்.

“உண்மைதாண்டா. அது நிழல். இவர் நிஜம். முதல்வர் என்பதை எல்லாம் மறந்துவிட்டு ஒருமுறை போக்குவரத்தைக் கூட சரி செய்து இருக்கிறார். அப்புறம் பயிற்சி டாக்டர்களுக்கு உதவித்தொகை அளித்தவரும் அவர்தான். தஞ்சை மருத்துவக் கல்லூரியைக் கொண்டு வந்தவரும் அவர்தான். இப்போது உள்ளதுபோல் டாக்டர் சீட்டுக்கு நுழைவுத்தேர்வு எல்லாம் அப்போது கிடையாது. டாக்டர் சீட் கேட்டு வரும் விண்ணப்பங்களை மதிப்பெண்கள் மற்றும் பிற தகுதிகளின் அடிப்படையில் தேர்ந்தெடுப்பர். பின்னர் அது முதல்வர் பார்வைக்கு வரும். அவர் இறுதிக்கட்ட விண்ணப்பங்களைப் பரிசீலிப்பார். காமராஜரிடம் 250 விண்ணப்பங்கள் வந்தது. அதிலிருந்து 100 சீட்கள் அவர் தேர்வு செய்ய வேண்டும். அவர் பத்தே நிமிடத்தில் 100 சீட் தேர்வு செய்ததைப் பார்த்த அதிகாரிகள் தயங்கியபடியே, “எப்படி அதற்குள் தேர்வு செய்தீர்கள்?” என்று கேட்டார்களாம். ‘வெளியில் அவர் தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு சீட் கொடுத்திருப்பார்’ என்று பேசிக்கொண்டார்களாம். “பெற்றோர் கையொப்பம் இடும் இடத்தில் யார் கைநாட்டு வைத்திருக்கிறார்களோ அவர்களாகப் பார்த்து தேர்வு செய்தேன்” என்றாராம். படிக்காத பெற்றோர்களின் குழந்தைகளுக்கு முன்னுரிமை அளித்து உள்ளார்”

“எங்க ஸ்கூலில் அம்மா படிக்கவில்லை என்பதால் ஒரு பையனை சேர்த்துக்கொள்ளவேயில்ல அத்தை”

“இப்போ அப்படி மாறி விட்டது. இதெல்லாம் நீங்க தான் பெரிவர்களாகிக் கேள்வி கேட்கணும்”.

“சரி அத்தை. கண்டிப்பா செய்றோம்” என்றவர்களை அணைத்துக்கொண்டார் கனி அத்தை.

“சரி வாங்க! அத்தை உங்களுக்குப் பணியாரம் செய்து தரேன்” என்றார்.

“ஐ! எனக்குப் பிடிக்கும்” என்று சந்தோசக் கூச்சல் கேட்டது.

அடுத்த மாதம் அவர்களை மீண்டும் சந்திப்போம். வேறொரு தலைவரைப் பற்றி பார்ப்போம்.

இப்படிக்கு,

கனி அத்தை.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
6 கருத்துகள்
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments