புளூட்டோ கிரகமா இல்லையா?
நித்யா, விழுப்புரம்
பல காலமாகச் சூரியனைச் சுற்றும் கிரகங்களின் எண்ணிக்கை 9 என்றும் ஒன்பதாவது கிரகம் புளூட்டோ என்றும் சொல்லப்பட்டது.
2006 ஆம் ஆண்டு வானியல் அறிஞர்கள் புளூட்டோ கிரகமல்ல; அது ஒரு குள்ளக் கிரகம் (Dwarf planet) என்று அறிவித்தனர்.
அதற்கு அவர்கள் சொல்லும் காரணங்கள் என்ன தெரியுமா?
- கிரகம் சூரியனை மையமாக வைத்த வட்டப்பாதையில், சூரியனைச் சுற்ற வேண்டும்.
- கோள வடிவில் ஈர்ப்பு விசையுடன் இருக்க வேண்டும்.
- சூரியனைச் சுற்றும் பாதை சுத்தமாக இருக்க வேண்டும்.
ஆனால் புளூட்டோ, சூரியன் மையமாக இல்லாத ஒரு நீள்வட்டப்பாதையில் சூரியனைச் சுற்றி வருகின்றது.
மேலும், அதன் சுற்றுப் பாதையில் பனித் திவலைகளும், தூசுப் பொருட்களும் ஏராளமாக இருப்பதால் சுத்தமாக இல்லை.
எனவே புளூட்டோ குட்டிக் கிரகம் அல்லது குள்ளக் கிரகம் எனத் தற்போது அழைக்கப் படுகிறது நித்யா.
தீக்காயங்களில் ஏன் இரத்தம் கசிவதில்லை?
மித்ரன், கரூர்.
இதுதான் நம் தோலின் நுண்ணோக்கு குறுக்கு வெட்டுத் தோற்றம். கூர்முனையுள்ள பொருட்களால் தோலில் வெட்டுக்காயம் ஏற்படும்போது, உட்தோலில் உள்ள இரத்த நாளங்கள் வெட்டப்பட்டு இரத்தம் கசிகிறது. ஆனால் ஆழமான தீக்காயத்தின் போது, இந்த இரத்த நாளங்கள் வெப்பத்தினால் பொசுங்கி, மூடிவிடுவதால் இரத்தம் கசிவதில்லை. ஆழமில்லாத தீக்காயங்களில், இரத்தநாளங்கள் இல்லாத புறத்தோல் மட்டும் பாதிக்கப்படுவதால் இரத்தம் கசிவதில்லை. சரியா மித்ரன்?
சரி செல்லங்களே! உங்களுக்கு ஏதாவது கேள்விகள் இருந்தால் கமென்ட் பாக்சில் பதிவிடுங்கள். பதில்களோடு அடுத்த மாதம் பறந்து வருகிறேன்🐦🐦
உங்கள் வீட்டு சுட்டிகள் தமிழோடு வளர்ந்து விளையாட, ஒவ்வொரு மாதமும்,உங்களைத்தேடி – பூஞ்சிட்டு