ஆங்கிலத்தில் Rufous treepie என்று அழைக்கப்படும் இப்பறவை காக்கை இனத்தை சேர்ந்தது. இதன் இருசொற் பெயறீடு (அறிவியற்பெயர்) Dentrocitta vagabunda என்பதாகும். இதன் பொருள் மரங்கள் இடையே அலைபவன் என்பதாகும். சமவெளி காடுகளிலும், நகர்புற தோட்டங்களிலும், வீடுகளை சுற்றி இருக்கும் மரங்களிலும் காணலாம்.

vaal kakkai1
படம் : டாக்டர். பா. வேலாயுதம்

உருவத்தில் காக்கையின் அளவைக் கொண்டிருக்கும். நிறம், வால் மற்றும் கூவும் சத்தம் இதனைக் காக்கையிடமிருந்து வேறுபடுத்திக் காட்டும். அலகும், தலையும் கருமை நிறத்தில் காகத்தை ஒத்திருக்கும். உடலின் மேற்பகுதி சற்று அடர்த்தியான செம்பழுப்பு நிறத்திலும் ( rufous ), மார்பும் வயிற்றுப் பகுதியும் அதே சற்று மங்கலான நிறத்திலும் இருக்கும். நீண்ட வால் ஏறக்குறைய ஓரடி நீளமிருக்கும். வாலின் நுனியில் தெளிவான கறுப்புப் பட்டை காணப்படும். நீளமான இந்த வால் இதனை அடையாளம் காண உதவும். இறக்கைகளில் உள்ள வெள்ளைப் பட்டை பறக்கும் போது தெளிவாக தெரியும். ஆண், பெண் பறவைகளின் உருவத்தில் பெரிய வித்தியாசம் இருக்காது.

இவை பெரும்பாலும் மரங்களின் மேற்பகுதியில்தான் காணப்படும் (arboreal ). அரிதாகத்தான் தரைக்கு வரும். மரங்களுக்கு இடையே சிறிது தூரம் பறக்கும். மரங்களில் கிளைக்கு கிளை தத்தித் தாவும். தனியாகவும் சிறு குழுக்களாகவும் காணப்படும். தங்களின் எல்லைக்குள் மற்ற பறவைகளை வர விடாமல் ஒலியெழுப்பி சண்டையிடும். சிறு குச்சிகளைக்கொண்டு மரக் கிளைகளில் கூடு கட்டும்.

இவற்றை பார்ப்பதை விட கேட்பது எளிது. பொதுவாக குறுகிய “ர ர ர” என்று கரகரப்பாகவும், சத்தமாக வேகமாக “ கோ..கீ..லா ….கோ..கீ..லா” என்பது போலும் ஒலி எழுப்பும்.  இவ்வொலி இதன் தனி அடையாளம்.

vaal kaakkai 2
படம் : டாக்டர். பா. வேலாயுதம்

இவை அனைத்துண்ணி. பொதுவாக பழங்கள், பூச்சிகள், புழுக்கள், சிறு தவளை, பல்லி ஆகியவற்றை உண்ணும். சில சமயங்களில் மற்ற பறவைகளின் முட்டைகளை உண்ணும்.  பழங்களில் பப்பாளி, மாம்பழம், வேப்பம்பழம் ஆகியவற்றை விரும்பி உண்ணும். இதனால் இப்பறவைக்கு வட்டார வழக்கில் மாம்பழத்தான் குருவி, கொய்யாப்பழத்தான், அரிகாடை, அவரைக்கண்ணி, வால் குருவி போன்ற பெயர்களும் உண்டு.

குழந்தைகளே! அடுத்த முறை வீட்டுத் தோட்டத்தில் “கோ..கீ..லா” என்ற ஒலி கேட்டால், மரக் கிளைகளில் நம் நண்பர் “வால் காக்கையார்” தென்படுகிறாரா என்று பார்ப்பீர்கள்தானே ?

What’s your Reaction?
+1
1
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
1 கருத்து
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments