தீப்பெட்டியும் நூலும்..

மித்து தன் குடியிருப்பு வளாகத்தில் இருந்த சிமென்ட் பெஞ்சில் அமர்ந்திருந்தான்.

முகக்கவசம் (mask) அணிந்திருந்தாலும் அவன் முகத்தின் வாட்டம் தெளிவாகத் தெரிந்தது.

பட்டாபி தாத்தா தன் மாலை நடைப்பயிற்சியை பாதியில் கைவிட்டுவிட்டு மித்து அமர்ந்திருந்த சிமென்ட் பெஞ்சில் சமூக இடைவெளி விட்டு அமர்ந்தார்.

“என்ன மித்து.. இங்க உக்காந்திருக்க.. வெளையாடப் போகலயா?” என்று கேட்டார்.

“போ பட்டு.. எல்லாம் உங்களாலதான்..” என்று அவன் கோபம் கலந்த வருத்தத்துடன் சொன்னான்.

“என்னால என்ன ஆச்சு..  என் செல்ல மித்துவுக்கு..” என்று அன்புடன் கேட்டார் தாத்தா.

“ஆமா.. நேத்தி நாம ரெண்டு பேரும் பேர்ட்ஸ் (birds) பாக்க போனோம்னு சொன்னா என் ஃப்ரண்ட்ஸ் எல்லாம் நம்பவே மாட்றாங்க.. தீப்பெட்டி டெலிபோன்ல பேசினோம்னு சொன்னா அதையும் நம்ப மாட்றாங்க..” என்றான்.

“அவனுங்க கெடக்கறானுங்க.. நாம இன்னிக்கும் பேர்ட்ஸ் பாக்கப் போலாமா..” ஆவலாகக் கேட்டார் தாத்தா.

“ம்ச்.. வேணாம்..” மித்து சொன்னான்.

“சரி.. வேற என்ன பண்ணலாம்.. நீயே சொல்லு..” தாத்தா விட்டுக் கொடுத்தார்.

“ம்.. என் ஃப்ரண்ட்ஸ்க்கு அந்த தீப்பெட்டி ஃபோன் (phone) பத்தி சொல்லுங்க.. அப்பதான் அவனுங்க நம்புவாங்க..” என்று மித்து தன் கோரிக்கையைக் கூறினான்.

“அவ்ளோதானா.. சரி.. நா போய் அத எடுத்துட்டு வரேன்.. நீ  அவனுங்கள எல்லாம் இங்க வரச் சொல்லு..” என்று சொல்லிக் கொண்டே தன் வீடு இருக்கும் ப்ளாக்கின் (block) லிஃப்ட் நோக்கி சென்றார்.

“சரி பட்டு..” என்று சொல்லிக் கொண்டே தன் நண்பர்களிடம் ஓடினான்.

சில நிமிடங்களில் எல்லா சிறுவர்களும் தாத்தாவின் முன்னால் குழுமியிருந்தனர்.

“எனக்குதான் ஃபர்ஸ்ட்டு..”

“இல்ல.. எனக்கு..”

“போடா.. எனக்கு..”

“நாந்தா மித்துக்கு பெஸ்ட் ஃப்ரண்டு.. அதனால எனக்குத்தான்..”

“பட்டாபி தாத்தா எங்கப்பாக்கு ஃப்ரண்டு.. எங்க வீட்டுக்கு பக்கத்து வீடு.. அதனால எனக்குத்தான் ஃபர்ஸ்ட்டு..” என்று ஆளாளுக்கு சண்டையிட, பட்டாபி தாத்தா எல்லாரையும் சமாதானம் செய்து சமூக இடைவெளியுடன் (socialdistance) அமர வைத்தார். அனைவரின் கைகளையும் ஹேன்ட் சேனிடைசர் (hand sanitizer) கொடுத்து துடைத்துக் கொள்ளவும் செய்தார்.

அதன் பிறகு எல்லா சிறுவர்களிடமும் ஆளுக்கு ஒரு தீப்பெட்டியைத் தந்தார்.

ஒவ்வொரு தீப்பெட்டியிலும் ஒரு நூல் கட்டப்பட்டிருக்க, சிறுவர்கள் எல்லாம் குழம்பிப் போய் அதைப் பார்த்தார்கள்.

“இது என்ன தாத்தா.. மேச் பாக்ஸ்ல நூல் கட்டியிருக்கு.. எதுக்கு..” என்று கேள்வி எழுப்பினார்கள்.

“இருங்க.. இருங்க.. நா சொல்ற மாதிரி செய்ங்க..” என்று சொல்லிவிட்டு ஒரு சிறுவனின் தீப்பெட்டி நூலுடன் மற்றொரு சிறுவனின் தீப்பெட்டி நூலினை இணைக்கும்படி கூறினார்.

எல்லாரும் தங்களிடம் இருந்த தீப்பெட்டி நூலினை மற்றொருவரின் தீப்பெட்டி நூலுடன் இணைத்து முடித்ததும், அவர்களைத் தள்ளி தள்ளி நிற்கச் சொல்லிவிட்டு ஒருவரை தீப்பெட்டியை தங்கள் வாயருகில் வைத்துப் பேசச் சொல்லியும் அதன் மறுமுனையில் இருந்த தீப்பெட்டியை வைத்திருந்த சிறுவனை தன் காதருகில் வைத்துக் கேட்கச் சொல்லியும் தாத்தா சொல்ல, சிறுவர்கள் அவ்வாறே செய்தனர்.

chittu mithu

சிறுவர்களுக்கு வியப்போ வியப்பு. குதியாட்டம் போட்டார்கள். இவர்களின் குதூகலம் அங்கிருந்த சிறுமிகளைக் கவர்ந்திழுக்க அவர்களும் இவர்களுடன் இணைந்து கொண்டனர்.

“பட்டு தாத்தா.. பட்டு தாத்தா..” என்று தாத்தாவைச் சுற்றிச் சுற்றி வந்தனர்.

“டே மித்து.. இந்த வெளையாட்டு சூப்பரா இருக்குடா.. நேத்தி நீ சொன்னப்ப நாங்க நம்பவேயில்ல.. சாரிடா..” என்றார்கள் கும்பலாய்.

“பரவால்லடா..” என்றான் மித்து பெரிய மனிதனாய்.

“அப்றம் பலூன்ல பறந்தேன்னு சொன்னியே.. அந்த வெளையாட்டு எப்டிடா வெளையாடணும்..” என்று ஒரு சிறுவன் கேட்க,

“பட்டு.. பலூன்ல எப்டி பறக்கணும்னு கேக்கறாங்க..” என்று சொல்லி சிரித்தான் மித்து.

“அந்த வெளையாட்டு நாளைக்கு.. நீங்க எல்லாரும் இந்த தீப்பெட்டிய பத்திரமா வச்சிக்கிட்டு நாளைக்கு கொண்டு வாங்க.. நாமல்லாம் பலூன் வெளையாட்டு வெளையாடலாம்.. சரியா..” என்று தாத்தா சொன்னார்.

குழந்தைகள் எல்லாம் குதூகலத்துடன் தத்தம் வீடு நோக்கிச் சென்றனர்.

சிறுவர்களை அனுப்பிவிட்டுத் தன் வீடு வந்து சேர்ந்த பட்டாபி தாத்தா, தன்னுடைய கைகளை நன்றாக சோப்பு போட்டு கழுவித் துடைத்துக் கொண்டார். பின்னர் தன்னுடைய அறையிலிருந்த பழைய மரப் பெட்டியினைத் குடையத் தொடங்கினார்.

இவர் என்ன செய்கிறார் என்று எட்டிப் பார்த்த பார்வதிப் பாட்டி, பெட்டியில் நிறைய வித விதமான பறவைகளின் இறகுகள் இருந்தது கண்டு வியந்தபடி சத்தமில்லாமல் தன் வேலையைப் பார்க்கப் போனார்.

நாளை பலூன் விளையாட்டில எல்லா பிள்ளைகளுக்கும் ஆளுக்கு ஒரு இறகு தர வேண்டுமே! அந்தக் கவலை பட்டாபித் தாத்தாவுக்கு இப்போதே வந்துவிட்டது.

எல்லா குழந்தைகளுக்கும் இறகு கிடைத்ததா என்பதை அடுத்த பாகத்தில் பார்க்கலாமா?!

— தொடரும் —

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Inline Feedbacks
View all comments