தீபா மாலிக் 1970 ம் ஆண்டு செப் 30ம் தேதி ஹரியானாவில் பிறந்தார். முதுகுத் தண்டுவடப் பிரச்சினைக்கு ஆபரேஷன் செய்து இடுப்பு பகுதிக்கு கீழே செயல் இழந்ததால் சக்கர நாற்காலியின் உதவியுடன் போட்டிகளில் பங்கேற்ற அவர் 2011-ம் ஆண்டு நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டி உள்பட பல சர்வதேச போட்டிகளில் பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார்.
2016-ம் ஆண்டு ரியோடிஜெனீரோவில் நடந்த பாரா ஒலிம்பிக் போட்டியில் குண்டு எறிதலில் இந்திய தடகள வீராங்கனை தீபா மாலிக் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். அர்ஜூனா, கேல்ரத்னா, பத்மஸ்ரீ ஆகிய விருதுகளை பெற்று இருக்கும் அரியானாவை சேர்ந்த 49 வயதான தீபா மாலிக் ஒரு சாதனை நாயகி.
தேசிய அளவில் 45 தங்கம், 5 வெள்ளி, 2 வெண்கலம் என 52 பதக்கங்களை வென்ற தீபா, சர்வதேச அளவில் 13 பதக்கங்களையும் குவித்துள்ளார். அதிக தூரம் பயணம் செய்த மாற்றுத் திறனாளி பெண், இந்தியாவின் உயரமான ஒன்பது இடங்களை ஒன்பது நாளில் கடந்த முதல் மாற்றுத் திறனாளி பெண் என தீபாவின் சாதனைப்பட்டியல் மிக நீளம்.
இவர் சிறந்த நீச்சல் வீராங்கனையும் கூட. யமுனா நதியில் நீரோட்டத்தை எதிர்த்து ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு நீந்தி சென்று லிம்கா சாதனை படைத்தார். இத்தனை சாதனைகளுக்கிடையே குண்டு எறிதலிலும் மாவட்ட, மாநில அளவில் பதக்கம்வென்றார். பிறகு, சர்வதேச வீராங்கனையாக உருவெடுத்தார்.
உலகின் மிகவும் ஆபத்தான ரேஸ் என்று அழைக்கப்படும் ஹிமாலயன் மோட்டர் ரேசில் ஜம்மு, லே, சிம்லா, இமயமலை என 1,800 கிலோ மீட்டர் தூரத்திற்கு பாலைவனத்திலும் பனியிலும் தனது பயணத்தை வெற்றிகமாக நிறைவு செய்தார். பைக் ரேஸில் பங்கேற்க ஓட்டுநர் உரிமம் பெற்ற முதல் பெண் மாற்றுத்திறனாளி இவர்தான்.
என் பெயர் ஜெயாசிங்காரவேலு.நான் கரூரில் இருக்கிறேன்.இரண்டு வருடமாக தளங்களில் எழுதி வருகிறேன்.கணிதம்,சிறப்புக்கல்வி படித்துள்ளேன்.