ஹாய் சுட்டீஸ்!

எல்லாரும் எப்டி இருக்கீங்க?

நம்ம குட்டி சச்சின் இன்னிக்கு என்ன கத்துகிட்டான்னு பாக்கலாமா?

போன வாரம் அவன் அவனோட அத்தை வீட்டுக்குப் போயிருந்தான். அவங்க அத்தை வீடு சென்னையில சோழிங்கநல்லூர்ல இருந்தது. அது பெரிய அபார்ட்மென்ட். அதுல அவங்க ஏழாவது தளத்தில இருந்தாங்க. அவங்க வீடு இருக்கற தளம்தான் கடைசி. அதுக்கப்றம் மொட்டை மாடிதான். அவ்ளோ உயரத்தில இருந்து சென்னையோட அழகைப் பார்க்கவே அவனுக்கு பிரமிப்பா இருந்தது.

“அத்த! உங்க வீடு ரொம்ப சூப்பரா இருக்கு அத்த!”, அப்டீன்னு அவன் சொன்னதக் கேட்டதும் அவங்க அத்தைக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது.

அவங்க வீட்டு பால்கனியில நின்னுகிட்டு அவன் வேடிக்கை பார்த்துகிட்டே இருந்தான். கீழ ரோடில போகற சைக்கிள், ஸ்கூட்டர், கார், பஸ்ஸெல்லாம் பாக்கவே அவனுக்கு ரொம்ப ஜாலியா இருந்தது.

அவ்ளோ உயரத்தில இருந்து பாக்கறப்ப அந்த வண்டியெல்லாம் குட்டிக் குட்டி எறும்பு மாதிரி தெரிஞ்சது.

கீழ பார்த்துகிட்டே இருந்தவன் தலையத் தூக்கி மேல பார்க்க, வானத்தில மிதக்கற வெள்ளை மேகங்கள் பார்த்துக் கண்ணை விரிச்சான்.

“ஹை! அம்மா! அந்த மேகங்கள் எல்லாம் கை கிட்டக்க இருக்கற மாதிரி இருக்கு மா!”, அப்டீன்னு குஷியா சொன்னான்.

வானத்தில பறக்கற பறவைகள் எல்லாம் அவனோட கவனத்தை ஈர்த்துச்சு.

“அம்மாம்மா! அங்க பாருங்க! எவ்ளோ பேர்ட்ஸ்?”, அப்டீன்னு சொன்னதக் கேட்ட அவங்கம்மாவுக்குச் சிரிப்பா வந்தது.

“ஆமாடா கண்ணா!” அப்டீன்னு அவன் கூடச் சேர்ந்து அவங்களும் வேடிக்கை பார்க்க ஆரம்பிச்சாங்க. அவனோட அத்தையும் வந்து அவங்களோட சேர்ந்துகிட்டாங்க.

அப்ப அவங்களோட பால்கனி பக்கத்தில இருந்த லேம்ப் போஸ்ட்ல ஒரு புறா உக்கார்ந்திருந்ததப் பார்த்தான்.

“அம்மா! இது என்ன பறவைம்மா?”.

“இதுதான் புறா! இங்க்லீஷ்ல பிஜியன்னு (pigeon) சொல்வாங்க!”, அப்டீன்னு அவங்கம்மா சொன்னாங்க.

“ஆனா இது காக்கா மாதிரி இல்லலம்மா! காக்காதான் நல்ல பேர்ட்! இல்லம்மா?”, அப்டீன்னு அவன் கேட்டான்.

“காக்கா ஏன் நல்ல பேர்ட்?”, அப்டீன்னு அவங்க அத்தை கேட்டதும்,

“ஆமா அத்த! காக்காதானே தனக்கு கிடைக்கற சாப்பாடை மற்ற காக்காயோட ஷேர் பண்ணிக்கிது. புறா பாருங்க; பக்கத்தில வர மற்ற புறாக்களை விரட்டுது!”, அப்டீன்னு அவன் சொன்னான்.

“இல்ல சச்சின்! புறாவும் நல்ல பேர்ட்தான். உனக்குத் தெரியுமா? இரண்டு நாடுகளுக்கு நடுல சண்டை வந்தா, நாங்க சண்டை போட மாட்டோம் அப்டீன்னு சொல்றதுக்கு அடையாளமா சமாதானத்துக்குப் புறாவைத் தான் பறக்க விடுவாங்க!”, அப்டீன்னு அவங்க அத்தை சொல்லிக் குடுத்தாங்க.

“அப்டியாம்மா?!”, அப்டீன்னு சச்சின் கண்ணை விரிச்சிக் கேட்டான். 

“ஆமாடா செல்லம்!”, அப்டீன்னு அம்மா சொன்னாங்க.

“அப்றம் ஏன் அந்த புறா மற்ற புறாக்களை விரட்டுது?”, சந்தேகம் கேட்டான் அவன்.

“சச்சின் கண்ணா! அங்க அந்த லேம்ப் போஸ்ட் பக்கத்தில நம்ம பால்கனியோட முனை தெரியுதா?”, அப்டீன்னு கேட்டாங்க அவனோட அத்தை.

அவன் எட்டிப் பார்த்துட்டு ஆமாம்ன்னு தலையாட்டினான்.

“அங்க இந்தப் புறா ஒரு கூடு கட்டியிருக்கு. அதுல ரெண்டு முட்டையும் போட்டிருக்கு! அந்த முட்டைய அம்மா புறா அடை காக்குது.  அதனாலதான் மற்ற புறாக்கள் வந்து அந்த முட்டைய உடைச்சிடக் கூடாதுன்னு அதோட அப்பா புறா காவல் காக்குதுப்பா!”, அப்டீன்னு அத்தை சொன்னாங்க.

birdnest
படம்: அப்புசிவா

“ம்! அப்டியா?”, அப்டீன்னு இன்னும் ஆச்சர்யமா அவன் அத திரும்பிப் பார்த்தான்.

“அடை காக்குதுன்னா?”, அப்டீன்னு அவன் கேள்வி கேட்டான்.

“அடை காக்கறதுன்னா அந்த முட்டைய ஒரே சீரான வெப்பநிலை அதாவது டெம்பரேச்சர்ல மெய்ன்டெய்ன் பண்றதுன்னு அர்த்தம்.. இங்க்லீஷ்ல இங்க்குபேஷன்னு (incubation) சொல்வாங்க!”.

குட்டி சச்சினுக்கு இன்னும் அது சரியா புரியல. அதனால அவன் திரும்பவும் கேட்டான்.

“அப்டீன்னா?”.

“அந்த முட்டை நல்லபடியா வளர்ந்து குட்டிப் புறாவா பொறக்கணும்ல.. அதுக்கு அம்மா புறா அந்த முட்டை மேல அது உடையாம உக்கார்ந்துகிட்டு தன்னுடைய உடம்பு சூட்டை அந்த முட்டைக்கு குடுக்கறது..”, அப்டீன்னு சொல்லி அவங்க அத்தை அவனை அந்தப் புறாவ டிஸ்டர்ப் பண்ணாம, புறாக் கூடு பக்கத்தில மெல்லமா கூட்டிட்டுப் போய் காமிச்சாங்க.

அந்தக் கூட்டுக்குட்ள்ள ஒரு புறா அமைதியா உக்கார்ந்துகிட்டு இருந்துச்சு. சச்சினும் அவனோட அத்தையும் பக்கத்தில வரதப் பாத்துட்ட அது பயந்து போய்ப் பறந்து போச்சு.

சச்சினுக்கு அந்தப் புறாவையும் அதோட முட்டையும் பார்த்து ரொம்ப ஆச்சர்யமா இருந்துச்சு.

“வா! நாம தள்ளிப் போயிடலாம்.. அந்தப் புறா நம்மளப் பார்த்துப் பயந்து போய்ப் பறந்துடுச்சு..”, அப்டீன்னு சொல்லி அவங்க அத்தை சச்சினை அங்கிருந்து கூட்டிட்டு வந்தாங்க.

அவங்க புறாக்கூட்ட விட்டுத் தள்ளி வந்ததும் பறந்து போன அம்மா புறா திரும்பவும் வந்து முட்டை மேல உக்கார்ந்துகிச்சு.

சச்சின் அத ரொம்ப ஆச்சர்யமாப் பார்த்தான்.

“அந்த முட்டைல இருந்து தான் குட்டிப் புறா பொறக்குமா?”.

“ஆமாடா!”.

“அந்த அம்மா புறா அந்த முட்டை மேல உக்கார்ந்தா அந்த முட்டை உடைஞ்சிடாதா?”.

“ம்ஹூம்! உடையாதுடா! உடையாத மாதிரி ரொம்பக் கவனமா அது உக்கார்ந்துக்கும்!”.

“எப்ப குட்டிப் புறா பொறக்கும்?”.

“இன்னும் நாலஞ்சு நாள் ஆகும்னு நெனக்கிறேன்!”.

“அப்றம் அந்த குட்டிப் புறா என்ன பண்ணும்?”.

“அது என்ன சாப்பிடும்? நா குட்டிப் பாப்பாவா இருக்கும் போது பால்தான குடிச்சேன்.. அது மாதிரி இதுவும் பால் மட்டும் குடிக்குமா?”.

“அது எங்க போய் விளையாடும்?”.

சச்சின் நிறைய கேள்வி கேட்டுட்டே இருந்தான்.

“நாம இப்ப சாப்பிடுவோம்! சாப்பிட்டுட்டு அப்றம் நீ கேக்கற கேள்விக்கெல்லாம் பதில் சொல்றேன் சரியா?”, அப்டீன்னு அவங்க அத்தை சொன்னாங்க.

“ம்!”

சச்சின் சமத்தா சாப்பிடப் போனான்.

நீங்களும் சமத்தா சாப்பிடுங்க. அவன் என்னென்ன கேள்வி கேட்டான். அவங்க அத்தை அவனுக்கு என்ன பதில் சொன்னாங்கன்னு நாம அடுத்த இதழ்ல பாக்கலாம். 

அது வரைக்கும் சமத்தா இருக்கணும்! சரியா சுட்டீஸ்?

டாட்டா! பை! பை!

👋👋👋👋👋👋👋👋👋

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Inline Feedbacks
View all comments