விருதுநகர் மாவட்டம் மண்மலை மேடு ஊரைச் சேர்ந்த சங்கரலிங்கனார், ’கர்ம வீரர்’ காமராஜர் படித்த சத்ரிய வித்யா சாலா பள்ளியில் கல்வி பயின்றார். அரசியலில் ஈடுபடாவிட்டாலும் ராஜாஜி உள்ளிட்ட தலைவர்களுடன் தொடர்பில் இருந்தார். காந்தியடிகளின் கொள்கைகளில் அதிக ஈடுபாடு கொண்டு, அவருடன் தண்டி யாத்திரையில் பங்கேற்றார்.

Sankaralinganaar

12 அம்சக் கோரிக்கை

1956ஆம் ஆண்டில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, மொழிவாரியாக மாகாணம் வேண்டும்; மெட்ராஸ் மாகாணத்துக்கு தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும்; பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட வேண்டும்; ரயிலில் ஒரே வகுப்பில் அனைவரும் சமமாகப் பயணம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்தார். இவரது கோரிக்கை ஏற்கப்படாத நிலையில் விருதுநகரில் தனது வீட்டின் முன்பு ஜூலை 27ஆம் தேதி காலவரையற்ற உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்.

76 நாள் உண்ணாவிரதம்

உண்ணாவிரதத்தைக் கைவிடும்படி, அறிஞர் அண்ணா, காமராஜர், ஜீவானந்தம் உள்ளிட்ட தலைவர்கள் கேட்டுக்கொண்டனர். இருப்பினும் கோரிக்கை நிறைவேறும் வரை உண்ணாவிரத்தைக் கைவிடப்போவதில்லை என்று திட்டவட்டமாகக் கூறிய சங்கரலிங்கனார், தொடர்ந்து 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார்.

உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் 1956ஆம் ஆண்டின் அக்டோபர் 13ஆம் தேதி தனது இன்னுயிரை நீந்தார் சங்கரலிங்கனார். சங்கரலிங்கனாரின் உடல் மதுரை தத்தனேரியில் அடக்கம் செய்யப்பட்டது.

மெட்ராஸ் டு தமிழ்நாடு

மெட்ராஸ் மாகாணத்துக்குத் தமிழ்நாடு என்று பெயர் சூட்டும் சங்கரலிங்கனாரின் கோரிக்கைக்கு அவருடைய மறைவுக்குப் பிறகு அழுத்தம் கொடுக்கப்பட்டது. 1962 மார்ச் மாதத்தில் நாடாளுமன்றத்தில் தனி மசோதா கொண்டு வரப்பட்டபோதும், 1964 ஜனவரி மாதத்தில் மாநிலச் சட்டமன்றத்தில் தமிழ்நாடு பெயர் சூட்டத் தீர்மானம் கொண்டுவரப்பட்டபோதிலும் முடிவு கிடைக்கவில்லை. 1967ஆம் ஆண்டுத் தேர்தலில் வெற்றி பெற்று அறிஞர் அண்ணா முதல்வரான பின்னர், 1968 ஜூலை 18ஆம் தேதி தமிழ்நாடு பெயர் மாற்றத் தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது.

1968 நவம்பர் 23ஆம் தேதி தமிழ்நாடு பெயர் மாற்ற மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. 1969 ஜனவரி 14ஆம் தேதி தமிழ்நாடு பெயர் மாற்றம் செய்யப்பட்டது. சங்கரலிங்கனார் மறைந்துவிட்டாலும், அண்ணா உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் தமிழ்நாடு பெயர் மாறக் காரணமாக இருந்த சங்கரலிங்கனாரின் தியாகத்தைப் போற்றினர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments