சித்திரை மாத வெயில் உச்சியை பிளக்கிறது. அடர் மரங்கள் நிறைந்த கிராமத்தில் கூட இதே நிலைதான். சென்னை போன்ற பெரு நகரங்களுக்கு சொல்லவா வேண்டும்? கௌரிக்கு தன் அம்மா அப்பாவை சென்னைக்கு அழைத்து வந்து அங்குள்ள புதிய இடங்களை அவர்கள் பார்த்து மகிழும்படி செய்ய வேண்டுமென ஆசை. எனவே கௌரியும் சங்கரும் ராமுவுடன் கிராமத்திற்குச் சென்று திரும்பி வரும் பொழுது ராமுவின் தாத்தா பாட்டியையும் அழைத்து வந்திருந்தார்கள். ராமுவிற்கு கொள்ளை இன்பம். மகிழ்ச்சியில் தலைகால் புரியவில்லை. நகரங்களில் விருந்தினர் வருகை என்பது அரிதாக இருக்கும் பொழுது அவனுக்கு தாத்தா பாட்டியே வந்து உடன் தங்கப் போகிறார்கள் என்பது எவ்வளவு மகிழ்ச்சியைக் கொடுக்குமென சொல்லவே தேவையில்லை. அவனுக்குள் ஏதேதோ கற்பனை. பாட்டி தாத்தாவை மிகப் பெரிய மாலுக்கு, பூங்காவிற்கு, ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கு, வழக்கமாகச்  செல்லும் நீச்சல் குளத்திற்கு என எல்லா இடத்திற்கும் சென்று தனது நண்பர்களையும் அறிமுகப்படுத்த வேண்டும் என்றெல்லாம் தனக்குள் கற்பனையை வளர்த்துக் கொண்டே சென்றான்.

பேரனுடன் சிறிது காலம் உடன் இருக்கப் போகிறோம் என்பது அவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தாலும், ஊரில் தான் வளர்த்து வரும் மரம் செடி கொடி கோழி மாடு ஆடு போன்றவற்றை பராமரிக்க பண்ணை ஆட்களிடம் ஒப்படைத்து வருவதும், தனது உறவுகள் மற்றும் நண்பர்களை பிரிவதும் சிறிது தயக்கத்தை கொடுத்தது. இவை எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டு பேரன் மீது வைத்திருக்கும் பிரியம் அவர்களை தற்போது சென்னைக்கு வர வைத்து விட்டது.

அங்கு அவர்களது வீட்டில்..

ராமு: பாட்டி! ஞாயிற்றுக் கிழமையானா நானும் அப்பா அம்மாவும் நீச்சல் குளத்திற்குப் போவோம். இன்றைக்கு நாம் எல்லோருமே போகலாமா?

பாட்டி: போகலாம் ராமு. ஆனா தாத்தாவும் நானும் தண்ணிக்குள்ள இறங்க முடியாது. அதுல போட்டிருக்க குளோரின் பவுடர் குளத்துல குளிக்கிற எங்களுக்கெல்லாம் ஒத்துக்காது கண்ணா.

தாத்தா: நகரத்தில் இருக்கிற நீச்சல் குளத்தை கரையோரம் உட்கார்ந்தே பார்க்கிறோம் ராமு. இயற்கையை ரசிக்க முடிகிற குளத்தில் மீன்கள் வாழும். கொக்கு அதனை கொத்திக் கொண்டு போகும். ஆடு மாடுகளெல்லாம் தண்ணீர் குடிக்கும். சிறுவர்கள் நீச்சல் அடிப்பாங்க. குளத்தைச் சுற்றி நாணல் வளர்ந்திருக்கும். தவளைகள் அதில் முட்டையிடும். ஊரில் தண்ணீருக்குப் பஞ்சமில்லை. இப்படியெல்லாம் நம்ம கிராமத்தில் இருக்கும் குளத்திற்கு உன்னை ஒரு நாள் அழைத்துக் கொண்டு போகிறேன் ராமு. இன்றைக்கு மகிழ்ச்சியாக நீச்சல் குளத்துக்குப் போகலாம் ராமு. சரியா?

ராமு: தாத்தா நீங்க சொல்வதைப் பார்த்தால் எனக்கே ஆசையாக இருக்கு. பறவைகச வந்து போகிற குளத்தில் நானும் நீச்சல் அடிக்கணும். அப்பா! சென்னையில் குளமே இல்லையா? நாம் ஏன் அங்கே போகவே இல்லை.

kadhaippoma
படம்: அப்புசிவா

கௌதம்: குளமெல்லாம் இருந்துச்சு ராமு. அப்ப அதனோட மதிப்பை உணர்வதை விட மக்கள் நெருக்கம் அதிகம் ஆக ஆக கட்டிடங்கள் கட்டுவதற்கு நிலம் முக்கியமாக தெரிந்தது. அதனால் மண்ணைக் கொட்டி குளத்தை மூடிட்டோம்.

கௌரி: அப்படி குளத்தினை மூடி மேடாக்கின இடம் எது கௌதம்?

கௌதம்: என்னோட தாத்தா சொன்ன தகவலை இப்போது சொல்கிறேன். ராமு! நீயும் கவனமாக கேள். ஆங்கிலேயன் நம் நாட்டை ஆண்ட காலத்தில் சென்னை மாகாணத்தில் இருந்த இன்றைய மாம்பலம் அன்று ஒரு கிராமமாக இருந்தது. பண்டங்களை கடத்துவதற்கு வசதி வேண்டுமென்று அங்கே ஒரு ரயில் நிலையத்தைக் கட்டினாங்க.

அதனால் அங்கு மக்கள் நெருக்கம் அதிகமாச்சு. பனகல் எனும் மன்னன் சென்னையை ஆண்ட போது, சைதாப்பேட்டையிலிருந்து நுங்கம்பாக்கம் வரை ஐந்து கிலோ மீட்டர் நீளத்துக்கும் இரண்டு கிலோமீட்டர் அகலத்துக்குமாக நெடுங்குளம் அப்படின்னு ஒரு பெரிய குளம் இருந்தது. அதில் மாமா சொன்ன மாதிரியே இயற்கையான அத்தனை உயிர்களும் வாழ்ந்து வந்தன.

காலப்போக்கில் குடியிருப்புப் பகுதி அதிகமாக தேவைப்பட்டதால் அந்த குளத்தை மண் மேடாக்கி மூடிட்டாங்க.  குளம் இருந்த அடையாளம் இப்போது எதுவுமே இல்லை. இப்படி குளங்களை மட்டுமல்ல, காடுகளாக இருந்த நிறைய நிலப்பரப்புகளை சமதளமாக்கி அதில் தான் கட்டிடங்களைக் கட்டி நாம் வாழ்ந்துகொண்டு வருகிறோம்.

ராமு! நீ கவனித்துப் பார்த்தால் ஒன்று புரியும். இந்தியாவின் முக்கிய நான்கு நகரங்களில் மூன்று கடலை ஒட்டி இருக்கும் நிலப்பரப்பில் தான் இருக்கு. அரபிக் கடலோர மும்பை. வங்காளக் கரையோரம் அமைந்த கல்கத்தா மற்றும் சென்னை. ஆங்கிலேயர்கள் கப்பல் போக்குவரத்து வசதியை முன்னிட்டு இப்படி அமைத்திருக்காங்க.

வாரன் ஹேஸ்டிங் பிரபு வாழ்ந்த காலத்தில் கல்கத்தா தான் இந்தியாவின் தலைநகரம். அங்கு வெப்பம் அதிகமாக இருந்ததால் அதனை தாங்க முடியாமல் சிம்லா பக்கத்தில் இருக்கும் டெல்லியை பிறகு தலைநகரமாக தேர்ந்தெடுத்தார்கள்.

கல்கத்தாவை சமதளமாக்கியதில் பெரும்பங்கு வாரன் ஹேஸ்டிங் பிரபுவுக்கு உண்டு. அவர் முயற்சியெடுக்காமல் இருந்திருந்தால் அங்கு சதுப்பு நிலக் காடுகளும் புலிகளும் வாழ்கிற பகுதியாக நீடித்து இருந்திருக்கும். பெருகி வந்த மக்கள் தொகைக்கு ஏற்ப குடியிருப்புப் பகுதிகள் தேவைப்பட்டது என்பதால்  இயற்கையை அழிச்சிட்டோம். இந்த குற்ற உணர்வும் நமக்கு இருந்துகொண்டு தான் இருக்கிறது.

கௌரி: ஆமாம் கௌதம். நம்ம நாடு இயற்கைவளமிக்கது.  அதன் மதிப்பை உணராமல் அதனை அழித்து நமக்கு ஏற்ற மாதிரி வடிவமைத்து வாழ்கிறோம். அயல்நாட்டில் மக்கள் நெருக்கம் அதிகமாகும் போது அவங்க பாலைவனத்தைக் கூட குடியிருப்பாக மாற்ற முயற்சி செய்றாங்க. அங்கே அவர்களால் கட்டடங்களைக் கொண்டு வர முடிகிறதே தவிர இயற்கையைக் கட்டியெழுப்ப யாராலும் முடியவில்லை. அதற்கான சக்தி மனிதனிடம் இல்லவே இல்லை.

நமது தலைமுறையினர் வளர்ச்சியெனும் பெயரில் இயற்கையின் வளர்ச்சியை குறைத்துக் கொண்டே வருகிறோம். பயன்படுத்துவதற்கு சமமாக திருப்பிக் கொடுப்பதில் குறைவாக இருக்கிறோம். ராமு குட்டி! உங்களுக்கெல்லாம் கடனாளியாக நீங்கள் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லும் குற்றவாளியாக இப்போது நின்று கொண்டு இருக்கிறோம்.

வீங்கி வெடிக்கும் மக்கள் தொகையின் அசுர வளர்ச்சிக்கு உலகம் முன்னோக்கி சென்றுகொண்டே இருக்கிறதேயொழிய ஒரு நாளும் பின்னோக்கி பழங்காலத்து நிலைக்கு இதுவரைக்கும் நம்மால் வர முடிந்ததே இல்லை. இதில் நன்மையும் தீமையுமென இரண்டுமே அடங்கியிருக்கு.

ஆனால் ஒன்று மட்டும் தெளிவானது. இவ்வுலகம் தன்னைத் தானே புதுப்பித்துக் கொள்கின்ற இயல்பு கொண்டது. நாம் அழிப்பதை நிறுத்தினால் பூமி மீண்டும் தன்னை பழைய நிலைக்கு கொண்டு செல்ல முயற்சி செய்து அதனை அடைந்து விடும். நாம் நிறுத்த வேண்டும். அதில் தான் இருக்கு.

சரி இதனை இத்தோடு இப்போதைக்கு விட்டு விடுவோம். அம்மா அப்பாவை அழைத்து வந்து ஆசையாக சந்தோஷமா ராமுவோடு இருக்க வேண்டுமென்று நினைத்தால், நமது கற்பனையிலேயே காலச் சக்கரத்தில் சுழன்று பயணம் செய்து பழைய காலத்திற்குச் சென்று விட்டோம். நாம் செய்து வரும் மாற்றங்களைப் பற்றி பேசி பூமியின் புதுப்பிக்கும் சக்தியையும் பேசிட்டோம். சமுதாயக் கடமையென்று  அனைவருக்கும் ஒன்று இருக்கு அல்லவா? அதனால் இது குறித்த விழிப்புணர்வு தேவையென்பதை மறக்காமல் அதே நேரத்தில் இன்றைய மகிழ்ச்சியையும் இழந்திடாமல் முழுப்பொழுதும் சென்னையை சுற்றிப் பார்க்கப் போகிறோம். வாங்க கிளம்பலாம்.

அனைவரும் அதற்காக தயாராகி திட்டமிட்டபடியே கடற்கரைப் பகுதியை ஒட்டியிருந்த நீச்சல் குளம், மீன் அக்வாரியம், சென்னை மாநகரத்தின் மிகப்பெரிய ஷாப்பிங் மால், என பல இடங்களுக்குச் சென்றுவிட்டு, இறுதியாக நல்ல உணவு விடுதியில் சுவையான உணவை அருந்திவிட்டு அன்றைய பொழுதினை மகிழ்ச்சியுடன் கழித்தபடி வீடு வந்து சேர்ந்தார்கள்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Inline Feedbacks
View all comments