உணவு இடைவேளைக்கான மணி அடித்தது. ஆசிரிய, ஆசிரியைகள் ஒவ்வொருவராக வகுப்பறைகளிலிருந்து வெளியேறத் தொடங்கினர். மாணவ மாணவிகளின் கலகலப்பான பேச்சுக் குரல்கள் பெரும் இரைச்சல்களாக மாறத் தொடங்கியிருந்தன. சாம்பார்,சட்னி, ஊறுகாய், பழங்கள், மசாலா வாசனைகள் காற்றில் மிதமாக தவழ்ந்து வந்து ,முன்னரே கனன்று கொண்டிருந்த பசியெனும் தீயை இன்னும் கொழுந்து விட்டு எரியச் செய்தது. எல்லோரும் அவர்களது அனுதின உணவை ஆவலாகச் சாப்பிட ஆரம்பித்தனர்.

ஆனால், நான்கு மாணவர்கள் மட்டும் உணவைப் பற்றிய சிந்தனை இல்லாமல் விவாதித்துக் கொண்டிருந்தனர்.

“டேய், பிரபு ! உன்னால் தான் இன்னிக்கு செல்வம் அடி வாங்கினான்” என்றான் கார்த்திக்.

“செல்வம் வீட்டுப்பாடம் முடிக்கல. அதனால அடி வாங்கினான். அதுக்கு, பிரபு என்னடா செய்வான் ?” இது ராமனின் கருத்து.

“ஸ்கூலுக்கு வந்தவுடன் உன்னோட நோட்புக்கை குடுன்னு கேட்டேன். ஏண்டா நீ தரல்ல? நீ மட்டும் தான் எழுதியிருக்க. நான் எழுதலன்னு ஐயாவுக்குத் தெரியணும். நான் அடி வாங்கணும்.அதான உன் திட்டம்”. என்றான் செல்வம்.

பிரபு உடனே, “ஐயா நம் இரண்டு பேருக்கும் தனியா சிறப்பு வீட்டுப்பாடம் கொடுத்திட்டு என்ன சொன்னாரு ? தனித்தனியா சிந்தித்து உங்களுடைய பதில்களை எழுதுங்கன்னு சொன்னாரு. அப்படி இருக்கும் போது, என்னுடைய பதிலப் பார்த்து நீ எழுதக் கூடாது. அதனாலத்தான் என் நோட்டைத் நான் உனக்குத் தரவில்லை” என்று சொன்னான்.

“ஆமாண்டா, இவரு பெரிய காந்தி மகான்” என்று எக்களித்தான் கார்த்திக்.

செல்வம் கோபமாகப் பேச, பிரபு அவனுக்குப் பதில் சொல்ல என நிமிடங்கள் கரைந்து போனதால் உணவு இடைவேளையின் போது உணவை உண்ணாமலேயே வகுப்பறைக்குத் திரும்பினர்.

செல்வம், பிரபு இருவருமே நன்கு படிக்கக்கூடியவர்கள், திறமைசாலிகள். ஆனால், பிரபு எப்பொழுதும் தனது வேலைகளை அப்பழுக்கில்லாமல் செய்து முடிப்பவன். அதனால், அவன் ஆழமான அறிவையும் தேர்ச்சியையும் பெற்று வந்தான். செல்வமோ, தன் திறமையைத் திறம்படப் பயன்படுத்தாமல் தேர்வு காலங்களில் மட்டும் சற்று உழைப்பவன். ஆனால், தான் திறமையானவன் என்று எல்லோருக்கும் எப்படியாவது காட்டிக் கொள்ளவேண்டும் என்றும் நினைப்பவன்.

ஆசிரியர் தன்னைக் கடிந்து கொண்டதற்குக் காரணம் தான் வீட்டுப்பாடம் எழுதாதது தான் என்று நினைக்காமல், பிரபு தனது பதிலைக் கொடுக்காததுதான் என்று செல்வம் நினைத்தான். பிரபுவைப் பழி வாங்க வேண்டுமென்று துடித்தான். பள்ளி முடிந்த பின், வகுப்பு மாணவர்களுடன் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த போதும், செல்வத்தின் மனதில் பிரபுவைப் பற்றிய எண்ணமே இருந்தது.

மற்ற மாணவர்கள் சென்றுவிட்டனர். செல்வம் மட்டும் மெதுவாக காரிடாரில் வந்து கொண்டிருந்தான். ஆசிரியர்களின் அறை பூட்டப்படவில்லை. அந்த அறையின் வாயிலுக்கு எதிராகத் தான் அறிவியல் ஆசிரியர் அமர்வார். அவர் மேசையின் மீது ஒரு கோப்பு இருந்தது. திடீரென செல்வத்தின் மனதில் ஒரு எண்ணம். தன்னை ஒருவரும் பார்க்கவில்லை என்பதைச் சரி பார்த்துவிட்டு, விடுவிடுவென உள்ளே சென்றான். அந்தக் கோப்பைத் திறந்து, சில பக்கங்களைப் புரட்டினான். அவன் தேடிய  காகிதங்கள் கிடைத்ததும், அவற்றை எடுத்து சட்டைப் பையில் வைத்துக் கொண்டான். அந்த அறையை விட்டு, அவன் வெளியே வந்த போதும், யாரும் அந்தப் பக்கம் இல்லை.

செல்வம் எடுத்து வந்த காகிதங்களில் ஒரு கட்டுரை இருந்தது. ‘இயற்கை சக்திகளின் பயன்பாடு—எண்ணங்களும், அனுபவங்களும்’ என்ற தலைப்பில், “நுகர்வோர் கழகம்’ ஏற்பாடு செய்திருந்த கட்டுரைப் போட்டிக்கான கட்டுரை அது. பிரபு அன்று ஆசிரியரிடம் தன் கட்டுரையைக் கொடுத்ததை செல்வம் பார்த்தான். பிரபுவின் கட்டுரை தான் இப்போது செல்வத்தின் கைகளில் இருந்தது.

முதலில் அக்கட்டுரையைக் கிழித்துப் போடலாம் என்று நினைத்த செல்வம், பிறகு, அதனைத் தனது ஆக்கமாக ஆசிரியரிடம் சமர்ப்பித்தால் என்ன என்று யோசித்தான். மறுநாள், அக்கட்டுரை செல்வத்தின் ஆக்கமாக அக்கட்டுரை ஆசிரியரின் கோப்பில் இருந்தது.

அடுத்த வாரத்தில், ஒரு நாள், காலைப் பிரார்த்தனை நேரத்தில், ‘நுகர்வோர் கழக’ கட்டுரைப் போட்டி முடிவு அறிவிக்கப்பட்டது. அக்கழகத்தில் இருந்து வந்த சிறப்பு விருந்தினர் முடிவினை அறிவித்து, பரிசு வழங்க  வந்திருந்தார். ”இந்நகரத்தின் அனைத்து பள்ளிகளில் இருந்து வந்திருந்த கட்டுரைகளில், உங்கள் பள்ளி மாணவனின் கட்டுரைக்கு முதலிடம் கிடைத்துள்ளது. மாநில அளவிலான போட்டிக்குத் தெரிவு செய்யப்பட்டிருக்கும் இக்கட்டுரையை எழுதியது,’செல்வம்’ என்று அறிவித்தார் சிறப்பு விருந்தினர்.

மிகுந்த கரவொலிகளுக்கிடையில் மேடையேறிய செல்வம், அங்கிருந்தோரை வணங்கினான். அவனது கைகளில் ஒரு ‘மைக்’ திணிக்கப்பட்டது. அக்கட்டுரையை அவன் எவ்வாறு எழுதினான் என்பது பற்றி ஓரிரு வார்த்தைகள் பேசுமாறு பணிக்கப்பட்டான்.

selvam

பயத்திலும் பதட்டத்திலும் உறைந்து போய், மௌனமாய் நின்றான் செல்வம். அவனைப் பேச வைப்பதற்காக, அந்தச் சிறப்பு விருந்தினர் அவனைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டார். “இயற்கை சக்தியை இப்பள்ளியில் எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது பற்றி நீ எழுதியிருக்கிறாய். அதைப் பற்றி சில வார்த்தைகள் பேசு” என்றார். செல்வத்தால் எந்த பதிலும் சொல்லமுடியவில்லை.

மேடையில் இருந்து விலகி, செல்வத்தை அருகே கூப்பிட்டு, மீண்டும் அதே கேள்வியைக் கேட்டார். பயப்படாமல் பதில் சொல்லச் சொன்னார். செல்வம் எப்படி பதில் சொல்வான்? இப்பள்ளியில் இயற்கை சக்தியை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது பற்றி பிரபு அல்லவா எழுதி இருந்தான்!

மீண்டும் அந்த விருந்தினர்,”செல்வம், உனது பாட்டியைப் பற்றிச் சொல்லேன்.” உடனே, செல்வம்,” அவர் இறந்து பல வருஷங்கள் ஆயிற்று. நான் அவரைப் பார்த்ததே இல்லை” என்று சொன்னான்.

செல்வத்தின் உடனடி பதில் அவரை மீண்டும் ஒரு கேள்வி கேட்க வைத்ததது.”செல்வம், உனது பாட்டி, இயற்கை சக்திகளான சூரிய ஒளியையும், காற்றையும் ஏன் மழையையும் பயன்படுத்துகிறார் என்று எழுதியிருக்கிறாயே ?” என்றார்.

“நான் எங்கே எழுதினேன். பிரபு அல்லவா எழுதினான்” என்று உளறிக் கொட்டினான் செல்வம்.

மீண்டும் மேடையேறிய விருந்தினர், அன்று மிக கால தாமதமாகி விட்டதால், பரிசுகள் பின்னொரு நாள் வழங்கப்படும் என அறிவித்தார்.

தலைமை ஆசிரியரின் அறையில், விருந்தினர், தலைமை ஆசிரியர், அறிவியல் ஆசிரியர் இன்னும் சில முக்கிய ஆசிரியர்கள் முன்னிலையில், செல்வம் தான் எவ்வாறு அக்கட்டுரையை தனது ஆக்கமாகக் கோப்புக்குள் கொண்ர்ந்தான் என்பதை விவரிவித்தான்.

அறிவியல் ஆசிரியர், “நீயும் திறமையானவன் தானே! நீயாகவே யோசித்து, மற்றவர்களின் உதவியுடன் உனது கட்டுரையை எழுதியிருக்கலாமே”  என்று கடிந்து கொண்டார்.

பிரபுவும் அந்த அறைக்கு வரவழைக்கப்பட்டான். அவனிடம் சிறப்பு விருந்தினர் அக்கட்டுரை பற்றிய சில நுணுக்கமான கேள்விகளைக் கேட்டார்.

கட்டுரையை பிரபு தான் எழுதினான் என்பதை உறுதி செய்தபின், பரிசு அவனுக்கு வழங்கப்பட்டது.

தவறான பாதைகள் நமக்கு என்றும் பயன் தராது. நேர்மையும் வாய்மையுமே வெல்லும்!

What’s your Reaction?
+1
5
+1
4
+1
0
+1
1
+1
0
+1
2
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments