கிறுக்க’ர் – 7

ஹாய் குட்டீஸ்…

            இந்த பகுதியில் நாம கார்ட்டூன் பத்தி பேசலாமா?

“அதென்ன கார்ட்டூன், அப்படின்னா  என்ன?” ன்னு கேட்டா சிரிப்பீங்க… இல்லையா?  கார்ட்டூன் தெரியாத குட்டீஸ் எங்கயுமே இல்லைதான்.

            ஆரம்ப காலத்தில் ஓவியங்கள், இப்போ சொல்ற கார்ட்டூன் போலதான் இருந்தது. ஒரு மனிதனை அல்லது விலங்கை கொஞ்சம் கோணல்மாணலா வரைஞ்சு இருந்தாங்க. அப்புறம் நல்லா ட்ரெய்னிங் எடுத்து அழகா அப்படியே இருக்கிறமாதிரி வரைய ஆரம்பிச்சாங்க.

            மறுபடி பதினாறாம் நூற்றாண்டில் இந்த கார்ட்டூன் கலையை திரும்ப வரைய தோணுச்சு சிலருக்கு. கொஞ்சம் கொஞ்சமா முன்னேறி இப்போ கார்ட்டூன் இல்லாத இடமே இல்லை அப்படின்னு ஆச்சு.

            கார்ட்டூன்ல இரண்டு வகையா இப்போதைக்கு பிரிக்கலாம். ஒண்ணு, கருத்துப்படம்னு சொல்ற அரசியல் படங்கள். இதிலே அரசியல்வாதிகளை அவங்க முகத்தை கொஞ்சம் அப்படிஇப்படி வரைஞ்சு கூடவே அவங்க நடவடிக்கைகளை கொஞ்சம் கிண்டல் பண்ற மாதிரி வரைவாங்க. அதோடு உலக நடப்புகளை, பல பக்கங்களில் எழுதக்கூடிய விஷயங்களை ஒரு சின்ன கார்ட்டூன் மூலம் சொல்லுவாங்க. அதுபத்தி இன்னும் நீங்க பெரிசா வளர்ந்ததும் படிக்கலாம். ஒரு தகவல், தமிழில் பத்திரிக்கையில் முதலில் கார்ட்டூன்களை அறிமுகப்படுத்தியவர்,  நம்ம பாரதியார்.

            இப்போ நமக்கு பிடிச்ச கார்ட்டூனுக்கு வரலாம். 1900 வரை கொஞ்சம் சுமாரா வளர்ந்த துறை இது. அதுக்கப்புறம் வால்ட்டிஸ்னி வந்தாரு. அவரை தெரியுமில்ல?

படம்: அப்புசிவா

            உலகையே தன்பக்கம் இழுத்த மிக்கிமவுஸ், இவரது படைப்புதான். சின்ன வயசில் இருந்து தான் பார்த்த விலங்குகள், பறவைகள் எல்லாம் மனிதன் போல நடந்துகிட்டா எப்படி இருக்கும்னு கற்பனை பண்ணி வரைஞ்சார் அவர். கூடவே அதை நகரும் அனிமேஷன் படங்களா மாத்தி சூப்பரா கதைகளை சிரிக்க சிரிக்க சொன்னார்.

            அதன் பின் பலவிதமான கார்ட்டூன் கதாபாத்திரங்கள் குழந்தைகளுக்காக வர ஆரம்பிச்சது. முக்கியமா நம்மை கவர்ந்த டாம் அண்ட் ஜெர்ரி போல.

            நாமும் கார்ட்டூன் வரையலாமா?

            ரொம்ப ஈசி. நீங்க பார்க்கும், உங்களுக்கு பிடிச்ச விலங்குகளை மனிதன் நிற்பது போல வரைங்க. அதுக்கு டிரஸ் எல்லாம் கலர் கலரா வரைஞ்சு பாருங்க. அதை வச்சு சித்திரக்கதை போல கதைகள் கூட சின்னதா ரெடி பண்ணுங்க. உங்க நண்பர்கள் அதிசயமா பார்ப்பாங்க.

            அடுத்து உங்க அம்மா, அப்பா, அண்ணன் அக்கா இப்படி இவங்க ஃபோட்டோ எடுத்து கொஞ்சம் கிண்டலா வரையலாம். அவங்கதான் கோவிச்சுக்க மாட்டாங்க. அதாவது மூக்கு பெரிசா, கண்ணு சின்னதா இப்படி சொல்றேன். இதுக்கு கேரிகேச்சர்னு பேரு.

இப்போ கீழே கொடுத்திருக்க படத்தில் உங்களுக்கு தெரிஞ்ச கார்ட்டூன் கதாபாத்திரம் பேர் எல்லாம் கமெண்ட்ல சொல்றீங்களா?

            அடுத்த பகுதியில் என்ன பேசலாம்னு யோசிச்சுட்டே நான் டாம் அண்ட் ஜெர்ரி பாக்கப்போறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *