‘கல்வி’ கோபாலகிருஷ்ணன் அறிவியல் உண்மைகளை அற்புதமான சிறார் நூல்களாக எழுதியவர். குழந்தைகள் கதைகளை விரும்பிப் படிப்பார்கள், அறிவியல் கட்டுரைகளை விரும்ப மாட்டார்கள். அவர்களை விரும்பி படிக்க வைத்தவர், ‘கல்வி’ கோபாலகிருஷ்ணன்.
அறிவியல் நூல்களைக் கதை போல் எழுதினார். ‘பறக்கும் பாப்பா’ என்பது புவியியல் பற்றி, அவர் எழுதிய நூல். பல நாடுகளில் வாழும் குழந்தைகளின் பின்னணியை அறிமுகப்படுத்தும் நூல். ‘பறக்கும் பாப்பா’ என்று ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கிக் கொண்டு, மேலும் பல அறிவியல் நூல்களை எழுதினார். ‘பண்டை உலகில் பறக்கும் பாப்பா’ பரிணாமத்தின் கதையைக் கூறும் நூல். உலகில் உயிர்கள் பிறந்து வளர்ந்ததைச் சுவையாகக் கூறும் நூல் அது.
‘பாதாள உலகில் பறக்கும் பாப்பா’ கடலியல் பற்றிக் கூறும் நூல். ‘மிட்டாய் பாப்பா’ என்பது எறும்பு, தேனீக்கள் பற்றி, இனிப்பாக எழுதப்பட்ட நூல். கதைகளுக்கு வைக்கப்படுவது போல், அறிவியல் நூல்களுக்குத் தலைப்பு வைத்தவர், ‘கல்வி’ கோபாலகிருஷ்ணன். அது குழந்தைகளைக் கவர்ந்தது.
பூச்சிகளின் வாழ்க்கையைப் பற்றிக் கூறும் நூலுக்குப் பெயர், ‘மந்திரவாதியின் மகன்’. தாவரங்களின் ஒளிச்சேர்க்கையைப் பற்றிக் கூறும் நூலுக்குப் பெயர் ‘மந்திரக்கோல்’. காட்டில் வளரும் மரம், செடி, கொடிகளின் வாழ்க்கையைப் பற்றிக் கூறும் நூலுக்குப் பெயர் ‘கானகக்கன்னி’.
உடல் உறுப்புகளும், அவற்றின் செயல்களும், கொடிய நோய்களும் அவற்றைத் தவிர்ப்பதும், ‘பஞ்ச பூதங்களின் வரலாறு’, ‘நீலநெருப்பு’ என்று சமூகத்தின் அறிவியல் தேவைகளைப் பூர்த்தி செய்யும் விதமாகவும் அவர் நூல்களை எழுதினார். முழுநேர எழுத்தாளராகப் பணியாற்றினார். 250-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார்.
‘கல்வி’ கோபாலகிருஷ்ணன் ஒரு ஓவியரும் கூட. பாடப்புத்தகங்களுக்கு ஓவியம் வரைந்தவர். தொடக்கப்பள்ளி மாணவர்களுக்காகவும், ஆசிரியர்களுக்காகவும் அவர் நடத்திய இதழ், ‘கல்வி’. அதில் ஏராளமான அறிவியல் செய்திகளை எழுதினார். ‘கல்வி’ எனும் அடைமொழி அவர் பெயரோடு ஒட்டிக் கொண்டது.
‘கல்வி’ கோபாலகிருஷ்ணன் 10.10.1912ஆம் ஆண்டில் பிறந்தார். சென்னை அடையாறில் வாழ்ந்தார். ‘கல்வி’ கோபாலகிருஷ்ணன் எழுதிய நூல்கள், மத்திய, மாநில அரசுகளின் விருதுகளைப் பெற்றவை. குழந்தை எழுத்தாளர் சங்கம் வழங்கிய விருதைக் குடியரசு தலைவரிடம் பெற்றவர். 1967-69ஆம் ஆண்டுகளில் குழந்தை எழுத்தாளர் சங்கத்தின் தலைவராகவும் இருந்தார்.
‘கல்வி’ கோபாலகிருஷ்ணனின் நூல்கள், கன்னடம், தெலுங்கு,மலையாளம் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. தமிழ்க் குழந்தை இலக்கியத்திற்கு அவர் ஆற்றிய பணி மகத்தானது.
(அரசு மாணவர் இதழ் தேன்சிட்டில், வெளியான கட்டுரை)
(சுகுமாரன், சிறார் எழுத்தாளர்)