கார்த்திகா ஆறாம் வகுப்பு படிக்கிறாள். போன வருடம் வரை அவள் பக்கத்தில் இருக்கும் பள்ளியில் படித்தாள். நடந்துபோகும் தூரம்தான். அவளது அக்கா உதயப்ரியா சென்ற ஆண்டு பன்னிரண்டாம் வகுப்பு படித்தாள். அப்போது தூரமாக இருக்கும் பள்ளிக்கு அவளது அக்கா தினமும் பள்ளியின் பேருந்து மூலம் செல்வாள். கார்த்திகாவுக்கும் பேருந்துகளில் பள்ளிக்கு செல்ல ஆசையாக இருக்கும்.

            இந்த ஆண்டு அக்கா படித்த பள்ளியிலேயே கார்த்திகாவும் ஆறாம் வகுப்பு சேர்ந்தாள். பேருந்தில் செல்வதை ஆவலாக எதிர்பார்த்தாள்.

            முதல்நாளில், பேருந்து ஏறி டிரைவரின் பின்னால் இருந்த சீட்டில் ஜன்னலோரம் இடம்பிடித்துக் கொண்டாள் கார்த்திகா. அவளது அக்கா தினமும் அந்த இடத்தில் இருந்துதான் கைகாட்டுவாள். அதனால் அந்த இடம் அவளுக்கு மிகவும் பிடிக்கும்.

friendship
படம்: தனிஷ்கா

            கார்த்திகாவின் அருகில் நான்காம் வகுப்பு படிக்கும் ஒரு சிறுமி வந்து அமர்ந்தாள். அவள் பெயர் லட்சுமி. அந்த சிறுமி கொஞ்சம் குண்டாக அழகாக கொழுக் மொழுக் என்று இருந்தாள். பேருந்தில் ஏறியதில் இருந்து ஏதாவது கொறித்துக்கொண்டே வந்தாள். அது தீர்ந்தவுடன் கார்த்திகாவிடம் “நீ எதாவது ஸ்னாக்ஸ் வைத்திருக்கிறாயா?” என்று கேட்டாள்.

            கார்த்திகாவும் தன்னிடம் இருந்த ஸ்னாக்ஸ் பாக்ஸில்  இருந்து அந்த சிறுமிக்கு ஒன்றைக் கொடுத்தாள். அதிலிருந்து லட்சுமியும் கார்த்திகாவும் நண்பர்கள் ஆகிவிட்டனர். போகும்போதும் வரும்போதும் பேசிக்கொண்டே செல்வார்கள். தினமும் லட்சுமிக்கும் சேர்த்து கார்த்திகா ஸ்னாக்ஸ் கொண்டுவருவாள்.

            அப்படித்தான் ஒருநாள், கார்த்திகா ஸ்னாக்ஸ் எடுத்து வர மறந்துவிட்டாள். அன்று லட்சுமி ஸ்னாக்ஸ் கேட்க, கார்த்திகா, “நாளை கொண்டு வருகிறேன்” என்று சொன்னாள்.

“அப்படியானால் நீ பின்னால் போய் உட்கார். நீ இனிமேல் என்னிடம் பேசாதே” என்று லட்சுமி சொன்னவுடன் கார்த்திகாவுக்கு கோபம் வந்துவிட்டது. கார்த்திகா உடனே எழுந்து பின்னால் ஒரு சீட்டில் உட்கார்ந்துகொண்டாள். லட்சுமியின் அருகில் இருந்த காலி சீட்டில் அங்கே நின்றுகொண்டே வரும் ஒரு டீச்சர் உட்கார்ந்துகொண்டார். அவர் லட்சுமிக்கு ஸ்னாக்ஸ் ஏதோ கொடுத்தார்.

            இப்படியே சில நாட்கள் போனது. ஒருநாள் அந்த டீச்சர் வரவில்லை. லட்சுமியின் பக்கத்து சீட் காலியாகவே இருந்தது. லட்சுமி கார்த்திகாவை கூப்பிட்டாள். கார்த்திகா கோபமாக இருந்ததால் எழுந்து வரவில்லை. லட்சுமியே எழுந்து வந்து கார்த்திகாவிடம் பேசினாள்.

“அக்கா, இனிமேல் உன்னிடம் நான் ஸ்னாக்ஸ் கேட்கமாட்டேன். அந்த டீச்சர் தினமும் எதாவது திட்டிக்கொண்டே இருக்கிறார். இன்றிலிருந்து நீயே என் அருகில் உட்கார்ந்துகொள்” என்று கெஞ்சும் விதமாக சொன்னாள். கார்த்திகாவுக்கு சிரிப்பு வந்துவிட்டது. “சரி” என்று சொல்லிவிட்டு லட்சுமியின் அருகில் உட்கார்ந்துகொண்டாள். அதிலிருந்து இருவரும் இணைபிரியா நண்பர்களாக இருந்தார்கள்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments