விவசாயம் தான் மாத்தூரில் பிரதானத் தொழில் .ஊர் மக்கள் அனைவரும் தினந்தோறும் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டு, உதவி செய்து கொண்டு வாழ்ந்து வந்தனர். ஆனால், பூபாலன் மட்டும் விதிவிலக்கு.
மற்ற எல்லா விவசாயிகளும் நாற்று நட, தண்ணீர் பாய்ச்ச அல்லது கதிர் அறுக்க அக்கம்பக்கத்தில் உள்ளவர்களை உதவிக்குக் கூப்பிட்டுக் கொள்வார்கள். அது போல, ஏர் பூட்டுவதற்கு காளைகள் முதல், அரிவாள், கலப்பை, கோடாரி என ஏதாவது உதவிக்கலன்களும் ,கருவிகளும் தேவைப்பட்டாலும் ஒருவருக்கொருவர் கொடுத்து உதவிக் கொள்வார்கள். பூபாலன் மட்டும் யாருடனும் ஒட்டாமல் இருப்பான்.
”என்னப்பா, பூபாலா, நல்லாயிருக்கியா ? இன்னிக்கி என்ன வித விதைக்கப்போறியா” எனக் கேட்டால் கூட “ம்ம்” என்றோ “ஆங்” என்றோ ரத்தினச்சுருக்கமாகதான் பேசுவான்.
யாரையும் “நீங்க நல்லா இருக்கீங்களா” என மறந்து போய் கூட கேட்கமாட்டான்.
“பூபாலா, ஒரு கோடாரி இருந்தா குடு ! என் கோடாரி புடி உடஞ்சுடுச்சு” என பக்கத்தில் யாராவது கேட்டால், தன் கொடரியை எடுத்து ஒளித்து வைத்துவிட்டு தேடுவது போல நடித்து சலித்துக் கொள்வான்.
“எங்கயோ காணமே, எனக்கே தேவை இருக்கு” என்று முணுமுணுப்பான்.
நாட்கள் செல்லச்செல்ல கிராமத்தில் யாரும் அவனுடன் பேசுவதில்லை.
அவனது வயலில் வேலைக்கு அதிக ஆட்கள் தேவைப்படும் நேரத்தில் ,அவன் மனைவி பூவாயி , அண்டை கிராமங்களில் இருக்கும் அவளது அண்ணன்களை, சித்தப்பாக்களை அழைத்து வருவாள்.
“பூவாயி, மச்சான் கிட்ட சொல்லும்மா, அக்கம் பக்கத்தில அன்பா பழகினாத் தான அவங்களும் நம்மகிட்ட அன்பா பழகுவாங்க” என்றார் அவள் சித்தப்பா.
“பேசினா, பழகினா, உதவி கேப்பாங்கன்னு அவரு யாருகிட்டயும் பேசமாட்டேங்கறாரு சித்தப்பா ! “
“செஞ்சா என்ன ? மனுஷங்கன்னு எதுக்கு இருக்கோம், ஒத்தருக்கொருத்தர் உதவிக்குத் தான ! நாளக்கி நமக்கு நாலு பேரு வேணாமா? “
“சித்தப்பா ! நமக்கு உதவிக்கு நாலு பேரு வேணும் அப்புடின்னு நினைக்கிறது ஒரு விதம் ! சின்ன சின்ன உதவிகள் கூட செய்யாம இருக்கறது மனுஷ இயல்பா கூட இல்லயே , நேசத்தோடு பழகுறது தான மனுஷத்தனம்” என்றான் அவள் அண்ணன்.
“நானும் அவர்கிட்ட மெல்ல மெல்ல சொல்லிகிட்டுத் தான் இருக்கேன், அண்ணே ! கொஞ்ச நாளா நானே பாக்கி பேருகிட்ட அளவா தயங்கி தயங்கி பேசுறேன். ”
“பூபாலா, நீயும் அவசியம் மாறணும். எல்லோர்கிட்டயும் அன்பா பாசமா பழகணும்” என்று வேலை முடிந்து திரும்பும் முன் அவனிடமும் சொன்னார் சித்தப்பா.
”எவன் கிட்ட பேசினாலும், நம்ம கிட்ட ஆதாயத்துக்காகத் தான் பேசுவானுங்க ! எனக்கு ஒருத்தரும் வேணாம். என் வேலையை நானே பாத்துக்குவேன்” என வீராய்ப்பாகச் சொன்னான் பூபாலன்.
சில தினங்களுக்குப் பின், காலை வேளையிலேயே மழை பெய்ய ஆரம்பித்தது. மிக கன மழை. நடுப்பகலுக்குப் பின் சிறிது நேரம் பயங்கர சூறாவளியும் ! பூபாலன் வீட்டின் அருகே இருந்த பெரிய மரத்தின், மிகப் பெரிய கிளைகள் அவன் வீட்டுக் கூரை மேல் விழுந்தன. மரத்தின் ஒரு பகுதியும் வீட்டின் மேல் சாய்ந்தது. ஓடுகளும், சட்டங்களும், மரத்தின் கிளைகளும், துரதிர்ஷ்டவசமாக பூபாலன் மற்றும் பூவாயி மேல விழுந்தன.
இருவரும் துடியாய் துடித்தனர்.
“அய்யோ ! யாராச்சும் வாங்களேன்” என பூவாயி பெருங்குரலெடுத்து அழுதாள்.
அதற்குள்ளாகவே, மரம் விழும் சத்தம், கூரை விழுவதைப் பார்த்து அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். அப்போதும் கனமழை பெய்து கொண்டு இருந்தது.
கால்களின் மேல் மரக்கிளை விழுந்திருந்ததால், நகரக்கூட முடியாமல் இருந்த இருவரையும், மரக்கிளைகளை அகற்றி மீட்டனர் கிராமத்தினர்.
இளைஞர்கள், அவர்களைத் தூக்கி பக்கத்து வீட்டில் படுக்க வைத்தனர்.
இருள் கவியத் துவங்கியது.
மருத்துவரை அழைத்து வந்து, இரவு உணவு கொடுத்து, கூரை விழுந்த வீட்டில் முக்கிய பொருட்களைப் பாதுகாத்து என ஒவ்வொருவரும் அக்கறையாகப் பார்த்துக் கொண்டனர்.
பூபாலன் கண்களில் கண்ணீர்!
“அன்பா பழகினா உதவி கேப்பாங்கன்னு, எல்லாரையும் ஒதுக்கின என்னை, இவ்வளவு அக்கறையா பாத்துக்குறீங்க “ என அழுதான் பூபாலன்.
“அழாத பூபாலா ! மனுஷனா இருந்தா நாலு பேருகிட்ட அன்பா பழகணும் . நேசமா இருக்கணும் .பேசிச் சிரிக்கணும். முடிஞ்ச உதவியைப் பண்ணனும். அது தான் நம்ம பலம் ! “ என ஊர்ப் பெரியவர் சொன்னார்.
இப்போதெல்லாம், ஊரில் ஒரு வேலை என்றால், பூபாலன் தான் முதல் ஆளாக உதவிக்கு வருகிறான் ! நேசமாகப் பழகுவதன் பலம் அறிந்தவன் அல்லவா !
கமலா முரளி எனும் பெயரில் தமிழில் கதை, கட்டுரை, கவிதைகள் மற்றும் மொழிபெயர்ப்புப் படைப்புகளை எழுதி வரும்,இவரது இயற்பெயர் திருமதி.கே.வி.கமலசுந்தரம் ஆகும்.
ஆங்கில இலக்கியம் மற்றும் கல்வியியலில் முதுகலைப்பட்டம் பெற்ற கமலா முரளி,சென்னை, பெரம்பூர்,விவேகானந்தா பள்ளியில் சில வருடங்கள் பணியாற்றிய பின், கேந்திரிய வித்யாலயா சங்கதனில் ஆங்கில ஆசிரியையாகப் பணியேற்றார். சென்னை, மேக்ஸ்முல்லர்பவன், ஜெர்மன் கல்வியகம், கேந்திரிய வித்யாலயாவுடன் இணைந்து அளித்த திட்டத்தின் கீழ் ஜெர்மன் மொழி பயின்று, ஜெர்மனி, மேன்ஹெய்ம் நகரில் ஜெர்மன் பயின்றார்.கேந்திரிய வித்யாலயாவின் தேசிய அளவிலான “சீர்மிகு ஆசிரியர்” விருதினை 2009 ஆண்டு பெற்றார்.
தமிழில் ஆர்வமும், தேர்ச்சியும் பெற்றுள்ள கமலா முரளியின்,கதை கட்டுரை, கவிதைகள் மற்றும் மொழியாக்கப் படைப்புகள் தினசரி, மஞ்சரி, கலைமகள்,குவிகம் மின்னிதழ் நமது உரத்த சிந்தனை, சொல்வனம் போன்ற இதழ்களில் வெளிவந்துள்ளன. அவரது “மங்கை எனும் மந்திர தீபம்” (“எ லேடி வித் த மேஜிக் லேம்ப்”)எனும் மொழிபெயர்ப்பு நூல் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
சென்னை, மூத்த குடிமக்கள் மன்றம், கலைமகள் பத்திரிக்கையுடன் இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டியில் இவரது சிறுகதையும் பரிசு பெற்றது. கலைமகள் வெளியுட்டுள்ள சிறப்பு பதிப்பில் “யதார்த்த வாழ்வு” எனும் அச்சிறுகதை இடம் பெற்றுள்ளது.
குவிகம் மின்னிதழ் நடத்திய “குவிகம் குறும்புதினம் 2023-24” போட்டியில் எனது குறும்புதினம் தேர்வு செய்யப்பட்டு, குவிகம் குறும்புதினம் இதழில் வெளிவந்துள்ளது.
இவர் எழுதிய, “இந்துமதி கல்யாணம் எப்போ ?” என்ற சிறுகதைத் தொகுப்பு சமீபத்தில் வெளிவந்துள்ளது.