ஹாய் குட்டீஸ்…
இந்த மாதம் பென்சில் ஓவியம் வரைவது பற்றி பார்க்கலாமா?
பென்சில் ஓவியம் ஈசினு சொல்லுவாங்க. ஏன்னா, அழிச்சு அழிச்சு வரையலாம். அதே சமயம் கஷ்டம்னும் சிலர் சொல்லுவாங்க. ஒரே க்ரே கலர்தான். அதை வச்சு நிழல், வெளிச்சம் இப்படி எல்லாமே கொண்டு வரணும். கிட்டத்தட்ட ஒரு கறுப்புவெள்ளை புகைப்படம் மாதிரி.
ஏற்கனவே கட்டம் போட்டு உருவம் வரைவது பற்றி இங்கே பேசியிருக்கோம், ஞாபகம் இருக்கா? அதை பயன்படுத்தி பென்சிலில் ஒரு முகத்தை, உங்க முகத்தைக்கூட… வரைங்க முதலில். அப்புறம் கீழே கொடுக்கப்பட்டுள்ள கருவிகளை பயன்படுத்தி அதை ஒரு அழகிய ஓவியமாக மாற்றலாம்.
பென்சில் ஓவியம் வரைய என்ன வேணும்?
“பென்சில்தான் வேணும்” னு சொல்லுது ஒரு வாண்டு.
“பேப்பரும் வேணும்”னு இன்னொரு சின்ன வாண்டு சொல்லுது இங்க.
ஆமாம். பென்சில், பேப்பர் வேணும். ஆனால் நாம சாதாரணமா பயன்படுத்தும் பென்சில்கள் மட்டுமே போதாது. ஆரம்பகால பயிற்சிக்கு சும்மா நீங்க வச்சிருக்கும் பென்சில் வச்சு வரையலாம். ஆனால், ஒரு நல்ல படமா, நிழல், ஒளி , உண்மைத்தன்மை போலவே வரைய விதவிதமான ‘ஷேடிங்’ல பென்சில்கள் இருக்கு. 2HB, 3HB, B, H இப்படி எல்லாம் பென்சிலில் போட்ருக்கும் பாத்திருக்கீங்களா?
அதாவது ஹார்டு, போல்டு, இதுபோல சொல்லுவதுதான் அந்த எழுத்துகள். அந்த பென்சிலின் எண்ணுக்கு ஏற்ப அதிக கறுப்பு, மென்மை, கடினம் இப்படி பலவிதங்களில் வரையலாம். இதையெல்லாம் ஒரு செட்டா வாங்கி வச்சுக்கோங்க. இப்போதைக்கு ஒரு 8HB மட்டும் வாங்கிக்கோங்க. ஆரம்ப ஓவியங்களுக்கு அது போதும்.
அதோடு ஒரு மெக்கானிக்கல் பென்சில். உருவம் வரையவும், மெல்லிய கோடுகள் வரையவும்.
அடுத்து எரேசர். இதை அழிப்பான் அப்டின்னு அழகா தமிழில் சொல்லலாம். சாதாரணமா நாம் பயன்படுத்தும் அழிப்பான். அப்புறம் kneadable eraser னு சொல்லக்கூடிய பிசையக்கூடிய தன்மை கொண்ட ஒரு அழிப்பான் இருக்கு. கொஞ்சம்கூட டஸ்ட் இல்லாமல் அழிக்கும். இது அப்புறமா வாங்கிக்குங்க.
பேப்பரை பொறுத்தவரை A4 அளவுள்ள ஜெராக்ஸ் பேப்பர் வச்சுக்குங்க. வெள்ளை கலர் சார்ட்கூட பயன்படுத்தலாம். ஷார்ப்பனர் வாங்கிக்குங்க. சில சமயங்களில் பென்சிலை கூர்மைப்படுத்த கத்தி போலவும் பயன்படுத்த நேரிடும். பெரியவர்கள் துணையுடன் அதை செய்யணும்.
அப்புறம் கிராஃபைட் பட்டைகள். இது அகலமா பட்டையா வரைய பயன்படுத்தலாம். அதிகமா இருட்டு வரைய, பட்டையடிக்க நிறைய இடங்களில் பென்சிலில் வரைவதைவிட இது எளிது.
கடைசியா blending stumps என்று சொல்லக்கூடிய உருளைகள். இது பேப்பர்ளை இறுக்கமா சுற்றிய வடிவில் இருக்கும். இதை பயன்படுத்தி, நாம் வரைந்த படங்களில் தேவையான இடங்களில் பிளெண்ட் அதாவது பரவலாக்கலாம். இணைக்கலாம். வரைந்த அடிப்படை கோடுகள் தெரியாமல் செய்யலாம்.
குட்டீஸ், இதெல்லாம் பயன்படுத்தி அழகா ஒரு படம் வரைஞ்சு www.poonchittu.comக்கு அனுப்புங்க. அடுத்த இதழில் உங்க பெயருடன் போடலாம்.
சில அட்டகாசமான பிரபலமான பென்சில் ஓவியங்களை கீழே பார்த்து ரசிங்க குட்டீஸ்.
காமிக்ஸ்..இலக்கியங்களை படிக்க ஆர்வம். தற்போது கதைகளும் எழுதிவருகிறேன். ஓவிய ஆர்வமுண்டு. மூன்று குழந்தை புத்தகங்கள் உட்பட ஆறு புத்தகங்கள் kindle ல் வெளியாகியுள்ளது. தற்போது குழந்தைகள் நாவல் ஒன்று எழுதி வருகிறேன்.