புவன் ஆறாம் வகுப்பு படிக்கும் பையன். அவனுக்கு போட்டிகளில் கலந்துகொள்ள ஆசை. எல்லா போட்டிகளிலும் கலந்துகொள்ளுவான். ஜெயித்தாலும் தோற்றாலும் கவலைப்படமாட்டான். கலந்துகொள்வதில் மட்டும்தான் அவனுக்கு விருப்பம். ஏனென்றால் போட்டிகளின்போது நிறைய நண்பர்கள் கிடைப்பார்கள். அது அவனுக்கு மிகவும் பிடிக்கும்.
தற்போது அவனது பள்ளியில் ஓவியப்போட்டி அறிவித்து இருந்தார்கள். ‘பட்டாம்பூச்சி’ என்பது தலைப்பு. அதை பார்த்தவுடனே அவனுக்கு கலர் கலராக கனவுகள் வந்தது. ஏனென்றால் அவனுக்கு வரைய பிடிக்கும். அதுவும் பட்டாம்பூச்சியின் வண்ணங்களை வரைய மிகவும் பிடிக்கும். உடனே பெயர் கொடுத்துவிட்டான்.
அப்பாவிடம் சொல்லி பட்டாம்பூச்சியின் படங்களை செல்லில் தரவிறக்கி தரச்சொல்லியிருந்தான்.
“நீ இந்த தடவை ஜெயிப்பதாக இருந்தால்தான் நான் தரவிறக்கித்தருவேன்” என்று அப்பா கண்டிப்பாக சொல்லியிருந்தார்.
வேலை அதிகமானதால் அப்பா மறந்துவிட்டார். புவனும் விளையாட்டு ஆர்வத்தில் கேட்க மறந்துபோனான். ஞாயிறு டிவி பார்க்கும்போதுதான் மறுநாள் பட்டாம்பூச்சியின் படம் தரவேண்டும் என்பதே அவனுக்கு ஞாபகம் வந்தது.
அப்பா வெளியே சென்றிருந்தார். ‘என்ன செய்யலாம்?’ என புவன் யோசித்தான். அவர்கள் வீட்டில் தோட்டம் உண்டு. சில மரங்களும் பூச்செடிகளும் இருக்கும். அங்கே பட்டாம்பூச்சிகள் வருவதை அவன் பார்த்திருக்கிறான்.
உடனே ஒரு அட்டையில் வெள்ளை பேப்பரை வைத்து, கூடவே வண்ணப் பென்சில்களையும் எடுத்துக்கொண்டான். பட்டாம்பூச்சிக்கு நிறைய வண்ணங்கள் கொடுக்கவேண்டியிருப்பதால் எல்லா பென்சில்களையும் எடுத்துக் கொண்டான்.
ஆனால், அன்று வண்ணப்பூச்சிகள் ஒன்றுகூட வரவில்லை. ஒரே ஒரு வெள்ளை நிற பட்டாம்பூச்சி மட்டுமே அங்கேயே சுற்றிக்கொண்டிருந்தது. என்ன செய்வது என புவனுக்கு குழப்பமாக இருந்தது. இன்னும் சற்று நேரத்தில் இருள் வந்துவிடும் என்பதால் உடனே வரைய ஆரம்பித்தான்.
முழுவதும் தோட்டத்து பச்சை, அதன் நடுவே வெள்ளை நிற பட்டாம்பூச்சியை வரைந்தான். பச்சை நிறத்துக்கு மட்டுமே அதிக வேலை. பட்டாம்பூச்சிக்கு தானே எதாவது வண்ணம் கொடுக்கலாம் என்று யோசிக்கும்போது அந்த வெள்ளைநிற பட்டாம்பூச்சி அவன் வரைந்த தாளின்மேல் வந்து அமர்ந்தது. அதுவும் அந்த படத்தை ரசிப்பது போல புவனுக்கு தோன்றியது.
“நீதான் இது” என்று அந்த பட்டாம்பூச்சியிடம் சொன்னான் புவன்.
அந்த ஓவியத்தின் மேல் இரண்டு தடவை சுற்றிவிட்டு அந்த பட்டாம்பூச்சி பறந்துசென்றது. தன்னை வரைந்ததற்காக அது நன்றி சொன்னதாக நினைத்தான் புவன். அதனால் அப்படியே வெள்ளை நிறமாகவே விட்டுவிட்டான்.
போட்டியில் பத்துக்கும் மேல் படங்கள் வந்திருந்தன. எல்லோரும் கலர் கலராக பூக்கள், கூடவே பலவண்ண பட்டாம்பூச்சிகள் வரைந்திருந்தார்கள். ஆனால் முதல் பரிசு புவனுக்கு கிடைத்தது.
“எல்லோர் படங்களிலும் பட்டாம்பூச்சியை தேடவேண்டியிருந்தது. ஆனால் புவனின் ஓவியத்தில் அழகாக தனியாக தெரிந்தது. அதனால்தான் அந்த படத்துக்கு பரிசு” என ஆசிரியர் சொன்னதும் எல்லோரும் கைதட்டி பாராட்டினார்கள்.
காமிக்ஸ்..இலக்கியங்களை படிக்க ஆர்வம். தற்போது கதைகளும் எழுதிவருகிறேன். ஓவிய ஆர்வமுண்டு. மூன்று குழந்தை புத்தகங்கள் உட்பட ஆறு புத்தகங்கள் kindle ல் வெளியாகியுள்ளது. தற்போது குழந்தைகள் நாவல் ஒன்று எழுதி வருகிறேன்.