ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தார். அவருக்குக் குதிரைகள் என்றால் மிகவும் பிடிக்கும். அவரிடம் எண்ணற்ற குதிரைகள் உள்ளது. அதில் அவருக்கு ஒரு கருப்பு குதிரை மீது அலாதி பிரியம். எப்போதும் அதன் மேலே சவாரி செய்வார். அதிகமான போரில் அவருடன் அந்தக் குதிரையும் கலந்து கொண்டிருந்தது.

வழக்கம் போல குதிரைகளைக் குளிக்க வைப்பதற்காக வீரர்கள் ஆற்றுக்கு அழைத்துச் சென்றார்கள். ராஜாவின் குதிரையும் அன்று நீரில் இறங்கிக் குளித்தது. திடீரெனக் காட்டாற்று வெள்ளம் சூழ்ந்தது. நிறைய குதிரைகள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டது. அதில் ராஜாவின் பிரியமானக் கருப்பு குதிரையும் ஒன்று. வீரர்கள் என்ன செய்வதென்று  அறியாமல் தவித்தார்கள். வெகு தூரம் கரையோரம் நடந்துச் சென்றுத் தேடினார்கள். ராஜாவுக்கு என்ன பதில் சொல்வது என்று பயந்துப் போனார்கள்.

raajavin kudhirai
படம்: அப்புசிவா

ரொம்ப நேரம் கழித்து அரண்மனைக்குச் சென்று ராஜாவிடம் நடந்ததைச் சொன்னார்கள். ராஜா கோபம் கொண்டு கத்தினார்.

“நீங்கள் என்ன செய்வீர்கள் என்று எனக்குத் தெரியாது. என் குதிரை வந்தாக வேண்டும். இது என் ஆணை. என் குதிரையைக் கண்டுபிடித்து தருபவர்களுக்குப் பொன்னும்,பொருளும் தருகிறேன்” என்று முரசு அறிவிக்கச் சொன்னார்.

அதன்படி ஊர் ஊராகச் சென்று முரசு அறிவித்து ராஜா சொன்ன செய்தியைக் கூறினார்கள்.

ராஜாவின் குதிரை வெள்ளத்தில் அடித்துச் சென்று ஒரு மனிதனின் முன்பு மோதி நின்றது. அவனும் வெள்ளத்தில் மூழ்கித் தவித்தான்.

குதிரை அவனையும் சேர்த்துக் காப்பாற்றித் தானும் கரைச் சேர்ந்தது. இது நடந்து ஒரு வாரம் ஆனது. குதிரையும்,அவனும் நல்ல தோழர்கள் ஆயினர். குதிரைக்குத் தேவையான புல்,கொள்ளு முதலியவைக் கொடுத்து அன்பாகக் கவனித்துக் கொண்டான்.

இந்தக் குதிரையைப் பார்த்தால் சாதாரண குதிரை போல இல்லை. ஏதோ பெரிய இடத்தில் வளர்க்கப்பட்டக் குதிரை என எண்ணியிருந்தான் கந்தன். அதேபோல் அவனுடைய ஊருக்கும் முரசு அறிவிப்பு வந்தது. ‘அடடா! நான் நினைத்தது சரிதான். இது ராஜாவின் குதிரையா? உடனே கொண்டுபோய் ராஜாவிடம் ஒப்படைக்க வேண்டும்’ என்று முடிவெடுத்து குதிரையை அழைத்துக் கொண்டு நடந்தான்.

இந்த அறிவிப்பைக் கேட்ட மணி என்பவன் கந்தனை அடித்துப் போட்டு குதிரையைத் தான் ஓட்டிக் கொண்டு அரண்மனை நோக்கிச் சென்றான்.

தன் குதிரை அரண்மனைக்கு வந்து விட்டது என்பதை அறிந்த ராஜா, மணியை அழைத்துப் பேசினார். இருந்தாலும் அவன் பேரில் அவருக்குச் சந்தேகம் இருந்தது.

“நீங்கள் இரண்டு நாட்கள் அரண்மனையில் தங்கி விருந்து முடித்து விட்டுச் செல்லும்போது பரிசு வாங்கிக்கலாம்”என்று அவனை விருந்தினர் மாளிகைக்கு அனுப்பி வைத்தார்.

கூடவே இரு காவலாளிகளைக் கூப்பிட்டு “மணியின் மேல் ஒரு கண் வைத்துக் கொள்ளுங்கள். அவன் பேச்சில் உண்மை இருப்பதாகத் தெரியவில்லை” என்றார்.

“அப்படியே ஆகட்டும் அரசே” என்றார்கள் அவர்கள்.

மணி விருந்தினர் மாளிகையில் இருந்த விலையுயர்ந்த பொருட்களை எப்படி எடுத்துச் செல்லலாம் என்று யோசனையுடன் இருந்தான்.

கந்தன் வலியுடன் நடந்தே அரண்மனை நோக்கிச் சென்றான். அரண்மனை வாயிலில் காவலர்கள் அவனை உள்ளே விடவில்லை. ராஜாவின் குதிரை என்னிடம் தான் இருந்தது என்று கூறினான். இந்த வாக்குவாதங்கள் ராஜாவின் காதுக்குச் சென்றது. உடனே அவர் கந்தனை அழைத்துப் பேசினார். அவனும் நடந்ததை சொன்னான். அதோடு தன்னை மணி அடித்துவிட்டு குதிரையை இங்கே கொண்டு வந்ததையும் சொன்னான்.

மணியை அழைத்து வரச் சொன்னார் ராஜா.

கந்தனைப் பார்த்ததும் மணி பயந்து, பின் சமாளித்தான். “இவனை யாரென்றே தெரியாது” என்றான்.

ராஜா சிறிது நேரம் யோசித்தார். இருவரையும் குதிரை இளைப்பாறும் இடத்திற்கு அழைத்துச் செல்லச் சொன்னார்.

மணி,கந்தன் இருவரும் எதிரெதிர் நிற்க வைக்கப்பட்டார்கள்.

ராஜாவின் கருப்பு குதிரை அங்கே அழைத்து வரப்பட்டது. வந்தவுடன் அது கந்தனின் அருகே ஓடி வந்தது. அவனும் குதிரையை வருடிக் கொடுத்தான். இதைப் பார்த்த ராஜா மணிக்குத் தகுந்த தண்டனை அளித்து அவனைச் சிறையில் அடைத்தார்.

கந்தனுக்குப் பொன்னும்,பொருளும் அளித்து அரண்மனையில் குதிரைகளைக் கவனிக்கும் பொறுப்பையும் தந்தார். கந்தனும் மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்டான்.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments