அர்ஜுன் என்ற சிறுவன் ஆறாம் வகுப்பு முடித்து ஏழாம் வகுப்பு சென்றான். அப்போது அவனுடைய தந்தைக்கு சென்னை அலுவலகத்திலிருந்து திருச்சி அலுவலகத்துக்கு பணியிட மாறுதல் அதாவது டிரான்ஸ்ஃபர் வந்ததால் அவர்கள் திருச்சிக்கு குடிபெயர்ந்தனர்.
திருச்சியில் ஒரு சிறிய கிரமத்தில் அவனுடைய தந்தையின் அலுவலகம் இருந்தது.
ஆனால் அந்த கிராமத்திலோ ஐந்தாம் வகுப்பு வரையுள்ள ஒரு சிறிய ஆரம்பப் பள்ளிக்கூடம்தான் இருந்தது. ஆறாம் வகுப்புக்கு மேல் படிக்க அந்த கிராமத்துப் பிள்ளைகள் எல்லாம் பக்கத்து டவுனுக்குதான் செல்ல வேண்டும். அதனால் பக்கத்து டவுனில் அவர்கள் வீடு பார்த்து குடியேறினார்கள்.
அர்ஜுனையும் டவுனில் இருந்த பள்ளிக்கூடத்தில் சேர்த்தார் அவனுடைய அப்பா.
அந்த ஊரில் அர்ஜுனுக்கு நிறைய நண்பர்கள் கிடைத்தார்கள்.
அவர்கள் எல்லாரும் சேர்ந்து அந்த ஊரை அவனுக்கு சுற்றிக் காண்பித்தார்கள்.
அந்த ஊரில் இருந்த பிள்ளையார் கோயில், குளம், சிறுவர் பூங்கா, விளையாட்டுத் திடல் எல்லாம் அர்ஜுனுக்கு மிகவும் பிடித்துப் போனது.
அதுவும் அந்தக் குளத்தில் அவனுடைய நண்பர்கள் எல்லாரும் நீச்சலடிப்பதைப் பார்த்ததும் அவனுக்கும் நீச்சல் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது.
அர்ஜுன் அவனுடைய அப்பாவிடம் நீச்சல் கற்றுக் கொள்ள அனுமதி கேட்டான்.
அவனுடைய அப்பாவும்,
“ம்! கத்துக்கோ.. சிட்டில ஸ்விம்ங் பூல்ல கத்துக்கறத விட இந்த இயற்கையான குளத்தில நீச்சல் கத்துக்கறதும் பழகறதும் ரொம்ப நல்லது. ஆனா கத்து குடுக்க பெரியவங்க இருந்தா கத்துக்கோ.. உன் நண்பர்கள் மட்டும்தான் இருக்காங்கன்னா வெயிட் பண்ணு.. ஒவ்வொரு ஞாயிறும் நான் கத்து தரேன்.. மத்த நாள்ல என்னால வர முடியாது!” என்று கண்டிப்புடன் சொன்னார்.
“சரிங்கப்பா! அங்க பெரியவங்க யாராவது கத்து தராங்களான்னு நான் விசாரிக்கறேன்.” என்று கூறிவிட்டுத் தன் நண்பர்களிடம் அது பற்றி விசாரிக்க ஓடினான்.
அவன் கேட்டு வந்த விவரமும் சிறப்பான தகவல்தான்.
அந்தக் குளத்தில் அவனுடைய நண்பன் சங்கரின் தாத்தா பாண்டியன், அந்த ஊர் பிள்ளைகளுக்கு மட்டுமல்லாது பக்கத்து ஊர்களில் இருக்கும் பிள்ளைகளுக்கும் நீச்சல் கற்றுத் தருகிறாராம்.
அதனால் அர்ஜுன் தன் நண்பனின் தாத்தாவிடம் நீச்சல் கற்றுக் கொள்ள அவனுடைய அப்பா அனுமதித்தார்.
குழந்தைகள் அனைவரும் தாத்தாவை பாண்டி தாத்தா என்று அழைத்துக் கொண்டிருந்தார்கள். பவர் பாண்டி திரைப்படம் பார்த்த பிறகு எல்லா பிள்ளைகளும் பாண்டி தாத்தாவை பவர் பாண்டி என்று அழைக்க ஆரம்பித்து இப்போது இன்னும் சுருக்கி பவர் தாத்தா என்று அழைக்க ஆரம்பித்துவிட்டனர்.
பவர் தாத்தா மற்ற நேரங்களில் ரொம்ப ஜாலியாகப் பழகினாலும் நீச்சல் கற்றுத் தரும்போது ரொம்ப கடுமையாக நடந்து கொள்வார். அதனால் அர்ஜுனுக்கு பவர் தாத்தாவைக் கண்டாலே பிடிக்காமல் போனது.
ஆனால் நீச்சல் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாக இருந்ததால் அவன் தொடர்ந்து நீச்சல் வகுப்புக்கு சென்றான்.
அவனுடைய அதிகமான ஆர்வமே பவர் தாத்தாவை அவனிடம் அதிகம் ஈர்த்தது. அதனாலேயே அவனிடம் இன்னும் அதிகமாக ஈடுபாடு காட்டினார் பவர் தாத்தா.
அர்ஜுனும் பவர் தாத்தாவின் வழிகாட்டலில் விரைவிலேயே நீச்சல் கற்றுக்கொண்டு நன்றாக நீந்தப் பழகினான்.

அவனுடைய அப்பாவுக்கு அவன் நீச்சல் கற்றுக் கொண்டது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. தன் மகனுக்கு நீச்சல் கற்றுக் கொடுத்த பவர் தாத்தாவிடம் தன் நன்றியைத் தெரிவித்தார்.
வார விடுமுறைகளின் போதெல்லாம் அந்தக் குளத்தில் அதிக நேரம் நீந்திக் கொண்டிருப்பது அர்ஜுனுடைய வழக்கமாகவே மாறிவிட்டது.
அவனுடைய நீச்சல் ஆர்வத்தைப் பார்த்த பவர் தாத்தா அவனை பக்கத்து ஊரில் ஓடும் ஆற்றில் நீச்சல் பழக அழைத்துப் போனார்.
அர்ஜுனும் ஆற்றில் நீச்சல் பழக ஆர்வத்துடன் சென்றான். அவனுடைய ஆர்வம் அவனை சிறந்த நீச்சல் வீரனாக மாற்றிக் கொண்டிருந்தது.
அதை உணர்ந்த பவர் தாத்தா அவனுக்கு நீச்சலில் பல நுணுக்கங்களைக் கற்றுத் தந்தார்.
அதன் பிறகே அவனுக்கு பவர் தாத்தாவின் கோபங்களுக்கும் நீச்சல் கற்றுக் கொடுக்கும் போது அவர் காட்டும் கடுமைக்கும் காரணம் புரிந்தது.
பள்ளியில் அறிவிக்கப்பட்ட நீச்சல் போட்டிகளிலும் அவன் கலந்து கொண்டு பரிசு வாங்கினான்.
அவனுடைய அப்பாவுக்கும் அம்மாவுக்கும் அவனுடைய சாதனைகளைக் கண்டு மிகவும் பெருமையாக இருந்தது.
இந்த நிலையில் அந்த ஊரில் மிக அதிக கனமழை பெய்தது. ஆறு குளம் கண்மாய் எல்லாம் நிரம்பி ஊருக்குள்ளும் தண்ணீர் வந்து விட்டது. தாழ்வான பகுதியிலிருந்த வீடுகளுக்குள்ளும் தண்ணீர் வந்துவிட்டது.
ஊரே வெள்ளக் காடாக காட்சியளித்தது.
பலர் வீட்டை விட்டு, அரசாங்கம் தற்காலிகமாக தயார் செய்திருந்த பாதுகாப்பு முகாம்களில் தஞ்சம் புகுந்தார்கள். பலர் தண்ணீரில் சிக்கித் தவித்தார்கள்.
தண்ணீரில் சிக்கித் தவித்தவர்களை மீட்புப் பணியாளர்களும் தன்னார்வத் தொண்டர்களும் பத்திரமாக மீட்டு, படகு மூலம் அவர்களை பாதுகாப்பு முகாம்களுக்கு அனுப்பி வைத்தனர்.
அர்ஜுனுடைய குடும்பமும் அவனுடைய நண்பர்களின் குடும்பமும் பாதுகாப்பு முகாமுக்கு செல்லும் நிலை வந்தது. அவர்களில் பவர் தாத்தாவும் ஒருவர்.
அவருக்கு மழை காரணமாக கடுமையான காய்ச்சல் அடித்துக் கொண்டிருந்தது.
பாதுகாப்பு முகாமுக்கு அவர்களை அழைத்துச் செல்ல ஒரு கயிற்றைக் கட்டி அந்தக் கயிற்றைப் பிடித்துக் கொண்டு மெதுவாக நடத்தி அழைத்து வந்து படகில் ஏற்ற வேண்டியிருந்தது. அப்போது அவர்களுள் ஒரு பெண் கயிற்றைப் பிடித்துக் கொண்டு நடக்கும் போது அவளுடைய பேலன்ஸ் தவறி தண்ணீரில் விழுந்து விட்டாள். அவளால் தண்ணீரிலிருந்து எழுந்து கொள்ளவும் முடியவில்லை. சிலர் அவள் கையைப் பிடித்து எழுப்ப முயன்றனர். ஆனால் அவர்களாலும் அவளுக்கு உதவ முடியவில்லை. சிறிது சிறிதாக அப்பெண் அவர்களின் கையிலிருந்து வழுக்கி வேகமாக ஓடும் தண்ணீரோடு செல்லத் தொடங்கினாள்.
தண்ணீர் செல்லும் பாதை மிகக் குறுகலாக இருந்ததால் அதன் வேகம் அதிகமாக இருந்தது. என்ன செய்வது என்று பலர் செய்வதறியாது திகைத்தனர்.
காய்ச்சலடிக்கும் நிலையிலும் அவளைக் காப்பாற்ற பவர் தாத்தா முன் வந்தார். ஆனால் காய்ச்சலால் அவர் சற்று தடுமாறினார்.
அவருடைய தடுமாற்றத்தைக் கண்ட அர்ஜுன் ஒரு நொடி கூட தாமதிக்காமல் தண்ணீரில் குதித்து அவள் பின்னாலேயே நீந்திச் சென்றான். நீச்சல் தெரிந்த மீட்புப் பணியாளர்களும் பின்னாலேயே நீந்திச் சென்றனர்.
“ஐயோ! நீ சின்ன பையன்! உனக்கு அவங்கள மாதிரி நீந்த வராது.. நீ போகாத!” என்று மற்றவர்கள் கூற, பவர் தாத்தா, அவன் என்ன செய்ய வேண்டும் என்று கத்தி சொல்லிக் கொண்டிருந்தார்.
மற்றவர்கள் பேசுவது அர்ஜுன் காதிலேயே விழவில்லை. பவர் தாத்தாவின் குரல் மட்டுமே அவனை வழி நடத்தியது.
வேகமாக நீந்திச் சென்று தண்ணீரோடு செல்லும் அந்தப் பெண்ணைப் பிடித்து இழுத்துக் கொண்டு போய் அங்கிருந்த மரத்தைப் பிடித்துக் கொண்டான். மீட்புப் பணியாளர்கள் நீந்தி வந்து அவர்கள் இருவரையும் பத்திரமாக மீட்டு பாதுகாப்பு முகாமுக்கு அனுப்பி வைத்தனர்.
அனைவரும் அர்ஜுனின் வீரத்தையும் தீரத்தையும் வெகுவாகப் பாராட்டினார்கள். அவனுடைய பெற்றோருக்கும் நண்பர்களுக்கும் ஊர்க்காரர்களுக்கும் அவனை நினைத்து மிகவும் பெருமையாக இருந்தது.
“ரொம்ப அனுபவம் இருக்கற பெரியவங்களே இந்த தீரமான செயலை செய்ய யோசிச்சப்ப சின்ன பையனான நீ எப்டி இத செய்யத் துணிஞ்ச?” என்று அவனிடம் செய்தியாளர்கள் கேட்டார்கள்.
அதற்கு அவன்,
“பவர் தாத்தாதான் நா என்ன செய்யணும்.. எப்டி போய் அந்தம்மாவ காப்பாத்தணும்னு சொல்லிட்டே இருந்தாரு.. அவரு குரலை ஃபாலோ பண்ணினதாலதான் என்னால அவங்கள காப்பாத்த முடிஞ்சது.. பவர் தாதத்தாதான் எனக்கு நீச்சல் கத்து குடுத்தாரு.. எனக்கு மட்டுமில்ல.. எங்க ஊர்ல இருக்கற எல்லா பிள்ளைகளுக்குமே அவர்தான் நீச்சல் சொல்லி குடுத்தாரு.. ஆல் கிரடிட் கோஸ் டு பவர் தாத்தா!” என்று அருகில் நின்று கொண்டிருந்த பவர் தாத்தாவைக் காட்டினான் அர்ஜுன்.
எல்லாரும் பவர் தாத்தாவிடம் மரியாதையுடன் கை குலுக்கி வாழ்த்து தெரிவித்தார்கள்.
பவர் தாத்தா அர்ஜுனை அன்புடன் அணைத்துக் கொண்டார்.
♥♥♥♥♥