வணக்கம் குழந்தைகளே,
நான் இன்னைக்கு உங்ககிட்ட நான் சந்தித்த அரசு அதிகாரிகள்ள ஒரு சிலரை பத்தி பேச போறேன். உங்களுக்கும் வருங்காலத்துல அவங்களை சந்திக்க வேண்டிய சூழ்நிலை வரும்போது, என்கிட்ட இருந்து தெரிந்துகொள்ளும் அனுபவம் உதவலாம்.

நான் பதினேழு வருடங்களுக்கு முன்பு, கல்லூரி படிப்புக்காக விண்ணப்பிக்கும்போது குடியிருப்பு சான்றிதழ் கேட்டாங்க. அதாவது நான் சொல்ற முகவரியில்தான் நான் இருக்கேன் என்பதற்கான சான்று. இதை வாங்குவதற்காக கிராம நிர்வாக அலுவலர் (VAO – Village Administrative Officer) அவர்களை சந்தித்தேன். அவங்களும் என்னுடைய குடும்ப அட்டையை (அந்த காலத்தில் நம் ஊரில் ஆதார் பழக்கத்தில் இல்லை) பார்த்து மேலும் நான் வசிக்கும் தெருவில் உள்ள இன்னொரு அரசு அலுவலரிடம் இந்த பொண்ணு அந்த தெருதானா என்று உறுதி பண்ணிவிட்டு சான்றிதழ் கொடுத்தாங்க. படிப்புக்காக என்பதனால் விசாரணை குறைவாம், இதுவே சொத்து விற்பனை, சொத்து வாங்கல் என்றால் அந்த களத்திற்கே சென்று ஆய்வு செய்துதான் சான்றிதழ் கொடுப்பார்களாம்.
எனது நண்பர் ஒருவர் சமீபத்தில் ஒரு அறுவைசிகிச்சைக்காக அரசின் ஒப்புதல் வாங்க வேண்டிய கட்டாயம் இருந்தது. சில முக்கியமான அறுவை சிகிச்சைகளுக்கு அரசின் ஒப்புதல் கட்டாயம். அப்பொழுதும் கிராம நிர்வாக அலுவலர்(VAO), நண்பரின் வீட்டுக்கே வந்து ஆய்வு செய்தாராம். அதன் பின்னர்தான் இவர் இங்குதான் வசிக்கிறார் மற்றும் இவருடைய பெற்றோர் இவர்கள்தான் என்று சான்றிதழ் தருமாறு வருவாய் அதிகாரிக்கும் (RI – Revenue), தாசில்தாருக்கும் தகவல் கொடுத்தாராம். அதன் பின்னைர்தான் தாசில்தார் இவர் இன்னாரின் பிள்ளை, அறுவை சிகிச்சைக்காக இந்த சான்றிதழ் என்று முத்திரை குத்தி கையொப்பமிட்டு கொடுத்தாராம்.
அப்படி என்றால் கிராம நிர்வாகியின் பொறுப்புகள் என்னவெல்லாம் இருக்கும் என்று யோசிக்கிறீங்களா குழந்தைகளே? நிறைய பொறுப்புகள் இருக்கு குழந்தைகளே! சில பொறுப்புகளை நான் சொல்றேன்.
- கிராமத்தில் அரசு திட்டங்கள் திறம்பட செயல்படுத்தப்படுவதை கிராம நிர்வாக அலுவலர்கள் உறுதி செய்கிறார்கள்.
- வெள்ளம் மற்றும் தீ போன்ற இயற்கை பேரிடர்களின் போது நிவாரணப் பணிகளில் VAOக்கள் உதவுகிறார்கள்.
- ஆக்கிரமிப்புகள் மற்றும் பிற சிக்கல்களுக்காக VAOக்கள் நிலங்களை ஆய்வு செய்கிறார்கள்.
- நில வரி, மர வரி மற்றும் பிற வரிகளை வசூலிக்கிறார்கள்.
உங்களை சுற்றியுள்ள பெரியவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் குழந்தைகளே! ஒவ்வொருவரும் ஒவ்வொரு தேவைக்காக கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்றிருப்பார்கள்.