சுத்தி சுத்தி வந்தீக
ஹாய் சுட்டீஸ்! எல்லாரும் எப்டி இருக்கீங்க?
இந்த மாதத்தில இருந்து ஒரு புதிய பகுதிய நாம பாக்க போறோம்! அதுக்கு பேரு, சுத்திச் சுத்தி வந்தீக!
என்னடா இந்த அத்தை பழைய சினிமா பாட்டை தலைப்பா வெச்சிருக்காங்க! பாட்டு எதுவும் கத்து குடுக்க போறாங்களான்னு பயப்படாதீங்க! இது பாட்டு பத்திலாம் எதும் இல்ல!

நீங்கல்லாம் உங்கள சுத்தி நிறைய செடி கொடிகள் மரங்கள் எல்லாம் பார்க்கறீங்கல்ல? அதப் பத்தி தான் நாம இந்தப் பகுதியில தெரிஞ்சிக்க போறோம்!
அந்த வகையில முதல்ல நாம தெரிஞ்சிக்க போறது எதப் பத்தின்னு பாக்கலாமா?
புல்! 🌾
ஆமா சுட்டீஸ்! நாம இந்த மாதம் புல் பத்திதான் தெரிஞ்சிக்க போறோம்.
நீங்க உங்க வீட்டு பக்கத்தில், பள்ளிக்கூடத்தில், தெருவில், சாலைகளின் இரு பக்கங்களில், வழியில், பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையம், ரயில் தண்டவாளங்கள் செல்லும் இடங்களில், விளையாட்டு மைதானம் மாதிரி எங்க போனாலும் நிறைய புல் வகைகளை பார்த்திருப்பீங்க!
உலகம் முழுதும் பல்வேறு சீதோஷ்ண நிலையில் வளரக் கூடிய பல தாவர வகைகளில் புல்லும் ஒன்றாகும்.
சிலர் புல்லை ரொம்ப சாதாரணமா நினைக்கலாம். அது ஏதோ வேண்டாத செடி, தேவையில்லாம வளர்ந்திருக்குன்னு நினைச்சீங்கன்னா அதுதான் தப்பு!
புல் வளரணும்னா அங்க நல்ல நீர் வளம் இருக்கணும். சரியா சொல்லணும்னா ஒரு இடத்தில புல் நிறைய வளர்ந்திருக்குன்னா அந்த இடத்தில மண் வளமும் நீர் வளமும் நிறைய இருக்குன்னு பொருள்.
புல்லின் வேர்கள் பூமியில நல்லா ஆழமா வளரும்.
ஔவைப் பாட்டி கூட,
“ஆல் போல் தழைத்து
அருகு போல் வேரோடி” ன்னு வாழ்த்தறாங்க.
பாலைவனத்தில ஏதாவது ஒரு இடத்தில காய்ந்து போன புல் தென்பட்டதுன்னா அந்த இடத்தில தோண்டினா குடிக்கறதுக்கு தண்ணீர் கிடைக்கும்.
ஒவ்வொரு புல் வகையும் நிறைய மருத்துவ குணம் கொண்டது.
வெறுங்காலோட புல்வெளியில அரை மணி நேரம் நடைப் பயிற்சி செய்தால் நம்ம நரம்பு மண்டலம் சிறப்பாகச் செயல்படும்; கால் வலிக்கு சிறப்பான நிவாரணம்; குழப்பமான மனம் தெளிவடையும்; இப்படி ல மருத்துவப் பயன் புல்லால நமக்கு கிடைக்கிறது.
அருகம்புல் நீங்க பார்த்திருக்கலாம். விநாயகர் சதுர்த்தி அன்னிக்கு நம்ம வாங்கிட்டு வர மண் பிள்ளையார் பொம்மைக்கு புல்லால மாலை செய்து போடுவோம்ல. அதுதான் அருகம்புல்.
அருகம்புல் விஷத்தை முறிக்கும் தன்மை கொண்டது. உடம்பு சூட்டையும் தணிக்க கூடியது.
இப்பல்லாம் நிறைய இடத்தில அருகம்புல் ஜூஸ் விற்பனை செய்யப்படுகிறது.
நாணல், தர்பை போன்றவை கூட புல் வகைகள்தான்.
தர்பை புல்லை பூஜை ஹோமங்கள் போன்ற காரியங்களுக்கு பயன்படுத்தறாங்க.
தர்பைப் புல்லால செய்த பாயில் உட்கார்ந்தாலும் தர்பைப் பாயில் படுத்துக் கொண்டாலும் நம்முடைய உடல் ஆரோக்கியம் மேம்படும்.
பூ மாதிரி புசுபுசுன்னு வளரும் ஒரு வகைப் புல் வைத்துதான் நம்ம வீடுகளைச் சுத்தம் செய்ய விளக்குமாறு செய்யறாங்க!
நாம சாப்பிடற அரிசி அதாவது நெல், கோதுமை மாதிரியான தானிய வகைகளும் சோளம், கம்பு, கேழ்வரகு மாதிரியான சிறு தானிய வகைளும் புல் குடும்பத்தைச் சேர்ந்ததுதான்.
அவ்வளவு ஏன்? நாமல்லாம் விரும்பி சாப்பிடற கரும்பு கூட புல் குடும்பத்தைச் சேர்ந்த தாவரம் தான்.
புல் குடும்பத்திலயே ரொம்ப உயரமா வளரும் தன்மை கொண்ட தாவரம் எது தெரியுமா?
மூங்கில்! ஆமாம் குழந்தைகளே! மூங்கில்தான் மிக உயரமாக வளரும் புல் வகையாகும். The tallest grass is bamboo! 👏
மூங்கில் வெச்சிதான் புல்லாங்குழல் என்ற இசைக்கருவி செய்யறாங்க.
மூங்கில் வெச்சி பல வகையான கைவினைப் பொருட்கள் செய்யலாம். வீடு கட்டுவதற்கும் நாற்காலிகள் கூடைகள் போன்றவையும் செய்ய மூங்கில் பயன்படுகிறது.
நம் வீடுகளில் பயன்படுத்தும் பாய், கோரைப் புல் என்ற ஒரு வகைப் புல் வைத்து செய்யப்படுகிறது.
ஆனால் கோரைப் புல், புல் குடும்பத்தை சேர்ந்ததில்லை என்றாலும் அதுவும் புல் போன்ற தாவரம்தான்.
சரி! புல்லோட தாவரவியல் பெயர் என்ன தெரியுமா?
பல வகைப் புற்களோட பெயர் வேற வேற இருந்தாலும் பெரும்பாலான புல் வகைகளின் தாவரவியல் பெயர், போய்யா! 🤭😁
என்ன! சிரிப்பா வருதா? அதுதான் உண்மை! புல்லோட தாவரவியல் பெயர் Poa. புல்லின் குடும்பப் பெயர், போயேசீ! Poaceae!
சாதாரண புல்தானேன்னு நெனைக்காதீங்க. புல் மாதிரி வலிமையோட வளருங்க குழந்தைகளே!
அடுத்த மாதம் வேறு ஒரு தாவரத்தைப் பற்றிய சுவாரசியமான தகவல்களுடன் வருகிறேன். அதுவரைக்கும்,
டாட்டா! பை! பை!
👋👋👋👋👋👋👋