சந்திரக்கோட்டை என்னும் வனத்தில் சீலோ என்ற குரங்கு தன் பெற்றோருடன் வசித்து வந்தது. சீலோ மிகுந்த புத்தி கூர்மை கொண்ட குரங்கு. சிறு வயது முதலே தன் பெற்றோருடன் சந்திரக்கோட்டை வனத்தில் விலங்குகளுக்காக இருக்கும் நூலகம் சென்று புத்தகம் வாசிக்கும்.
“பரவாயில்லையே நம்ம சீலோ, நிறைய புத்தகம் வாசிக்கிறாளே” எனச் சீலோவின் பெற்றோர் மகிழ்ச்சி கொண்டனர். காட்டில் மற்ற விலங்குகள் சீலோ நிறைய புத்தகம் வாசிப்பதைக் கண்டு அவ்வப்போது கிண்டல் செய்யும். ஆனால் சீலோ அதைச் சட்டை செய்யாமல் தனக்குப் பிடித்தமான புத்தக வாசிப்பைத் தொடர்ந்து செய்து வந்தது. சீலோவிற்காக அவள் தந்தை நிறைய புத்தகங்கள் வாங்கிப் பரிசளிப்பார்.
“ரொம்ப நன்றி அப்பா! இந்தப் புத்தகம்தான் நான் வாசிக்கணும்னு ரொம்ப நாள் நினைச்சேன். அதையே நீங்க வாங்கிட்டு வந்துட்டீங்களே! நன்றி அப்பா!” என சீலோ நன்றி தெரிவிக்கும்.
சீலோ வாழ்ந்த சந்திரக்கோட்டை வனத்தில் ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே பள்ளிக்கூடம் இருந்தது. சந்திரகோட்டை வனத்தின் மற்ற விலங்குகளான டிண்டூ நரி, காட்வி கரடி, டிம்பிள் சிறுத்தை என எந்த விலங்குமே தங்கள் குழந்தைகளை ஐந்தாம் வகுப்பிற்கு மேல் படிக்க வைக்கவில்லை.
“நம்ம காட்டில அஞ்சாம் வகுப்பு வரைக்கும் தானே பள்ளி இருக்கு. நம்ம குழந்தைகள் அவ்வளவு படிச்சா போதுமே!” என்ற மனநிலையில் தான் எல்லா விலங்குகளும் இருந்தன.
ஆனால் சீலோவிற்கு மேலே படிக்க வேண்டும் என்று நிறைய ஆவல். அதைத் தன் தந்தையிடம் சொன்னது. சீலோவின் தந்தை வெகுவாக யோசனை செய்தார்.
“சீலோ, நம்ம காட்டில ஐந்தாம் வகுப்பு வரை தானேம்மா பள்ளி இருக்கு. பிறகு எப்படிம்மா நீ மேலே படிக்க முடியும்?” என வினவினார்.
“அப்பா, மேகமலை காட்டில் பெரிய பள்ளி இருக்காம்பா, அங்க பெரிய வகுப்புகள் எல்லாம் இருக்காம்பா?”
“மேகமலை காட்டிலா?”
“ஆமாம்பா. எங்க வகுப்பு ஆசிரியை ரீனா புலி மேம் சொன்னாங்கப்பா. அந்த மேகமலை காட்டில பெரிய பள்ளி இருக்கு. அங்கே மேற்படிப்பு படிக்கலாம்னு சொன்னாங்கப்பா. என்னை அங்கே சேர்த்தி விடுங்கப்பா” என ஆர்வமாகக் கேட்டாள் சீலோ.
மேகமலைக் காடு, இவர்கள் வாழும் சந்திரக்கோட்டை வனத்தில் இருந்து வெகு தூரத்தில் இருந்தது.
“சீலோ, மேகமலைக் காடு இங்க இருந்து ரொம்ப தூரமாச்சே மா? தினமும் எப்படி நீ அவ்ளோ தூரம் போய் படிச்சுட்டு வர முடியும்?” என்று கவலையாக வினவினார் சீலோவின் தந்தை.
“பாவம்ங்க நம்ம சீலோ, மேல படிக்கணும்னு ரொம்ப ஆசைப்படறா. நல்லாவும் படிக்கறா! நாம அவ கேட்கற மாதிரி மேகமலை காட்டின் பள்ளிக்கூடத்தில சேர்த்து விடலாம்” என்று சீலோ குரங்கின் தாயும் கூறினார்.
இப்படியாக, சீலோவை அவள் தாய் தந்தை மேகமலைக் காட்டின் பெரிய பள்ளியில் மேலே படிக்கச் சம்மதித்து சேர்த்து விட்டனர்.
சீலோ தினமும் அவள் வீட்டில் இருந்து மேகமலை சென்று வர ஒரு மணி நேரம் ஆகும். சீலோ குரங்கு ஆர்வமாகத் தன் புதிய பள்ளிக்குச் சென்று வந்தது.
புதிய பள்ளியில் நிறைய விஷயங்கள் சொல்லிக் கொடுத்தனர். அங்கே பெரிய நூலகம் இருந்தது. சீலோ, தினமும் நல்ல நல்ல அறிவியல், கணிதம், புவியியல் புத்தகங்களை எடுத்துப் படிக்கும்.
இப்படியே நாட்கள் நல்லபடியாகக் கழிந்தன.
சந்திரக்கோட்டைக் காட்டில் கத்திரி வெயில் காலம் துவங்கியிருந்தது. அந்த வருடம் மழையின் வரத்து குறைவாக இருந்ததால், வெயில் காலம் துவங்கிய சில தினங்களிலேயே தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டிருந்தது. அத்தோடு மரங்களும் கிளைகளும் சீக்கிரம் காய்ந்து போகத் துவங்கிவிட்டன.
சந்திரக்கோட்டைக் காட்டில் பக்லூ என்ற குட்டிமான் வாழ்ந்து வந்தது. பக்லூவும் சீலோவும் நண்பர்கள். பக்லூ ரொம்பவும் சுட்டியான மான்குட்டி. பெரியவர்கள் சொல்லும் வார்த்தைகளை என்றும் பக்லூ கேட்காது. “எல்லாம் எனக்குத் தெரியும்” என்று சொல் பேச்சு கேட்காமல் நடந்து கொள்ளும். சீலோ எவ்வளவு அறிவுரைச் சொன்னாலும் பக்லூ ஒரு போதும் கேட்காது.
“நீ புது பள்ளிக்கூடம் போய் நிறைய படிக்கறதால எனக்கு ரொம்ப அறிவுரை சொல்ற? நீ பள்ளிக்கூடம் போகாத சீலோ! காட்டில ஆனந்தமா ஊர்ச் சுத்தலாம்! பள்ளிக்கு ஏன் போற?” என்று பக்லூ, சீலோவை தினமும் கிண்டல் செய்யும்.
பக்லூ எப்போதும், தன் வீட்டில் சமையல் வேலைகள் முடித்ததும், மீதம் இருக்கும் அடுப்பு கரித்துண்டுகளைக் கொண்டு வந்து காட்டின் மூலையில் அப்படியே வீசிச் சென்றுவிடும்.
இதைக் காணும் மற்ற மிருகங்கள், “பக்லூ, கரித்துண்டுகளில் இன்னமும் தீ கங்குகள் இருக்குது பார். கரித்துண்டின் மீது தண்ணீர் தெளிக்க வேண்டும். இப்படியே கொண்டு வந்து கொட்டாதே!” என்று அறிவுரைக் கூறும்.
பக்லூ மான்குட்டி இந்த அறிவுரையெல்லாம் கேட்காது. எப்போதும் போல கரித்துண்டுகளை வெளியே வீசிவிடும்.
ஒரு நாள், பக்லூவின் வீட்டின் அருகே இருந்த மரத்தில் அமர்ந்து சீலோ குரங்கு, தன் நண்பன் பக்லூவைக் காண அவன் வீட்டிற்கு வந்தது. அப்போது பக்லூ வழக்கம் போல, கரித்துண்டுகளைக் கொண்டு வந்து மரத்தின் கீழே கொட்டிச் சென்றது. இதைப் பார்க்கவும் சீலோ, “ஏ, பக்லூ உனக்குக் கரிதுண்டின் மீது தண்ணீர் ஊற்றித் தீயினை அமிழ்த்த வேண்டும் என்று எத்தனை தடவை சொல்வது? இப்படியே விட்டால், தீக்கங்கு பட்டு, சருகுகள் தீ பிடித்துக் கொள்ளும்.” என்று கூறியது.
பக்லூ மான், சீலோவின் பேச்சைக் கேட்கவேயில்லை. “எல்லாம் எனக்குத் தெரியும். போ” என்று சொல்லிவிட்டது. சீலோ குரங்கு, வேறு வழியில்லாமல், அன்று பக்லூ கொட்டிய கரித்துண்டின் மீது தண்ணீர்த் தெளித்து தீயை அமிழ்த்தியது.
இப்படியே இரண்டு நாட்கள் சென்றுவிட்டது. தினமும் சீலோ, பக்லூ வெளியே கொட்டும் கரித்துண்டின் மீது தண்ணீர் தெளித்து நெருப்புக் கங்குகளை அமிழ்த்துவிட்டுப் போகும்.
அன்று, சீலோவிற்கு முக்கியமான வேறு வேலை இருந்ததால், பக்லூ மான் கொண்டு வந்து கொட்டிய கரித்துண்டுகள் மீது தண்ணீர்த் தெளித்து அமிழ்த்த நேரம் இருக்கவில்லை. தன் வேலைகளை முடித்துக் கொண்டு சீலோ அவசரமாக பக்லூ மானின் வீட்டிற்கு வந்து கொண்டிருந்த சமயம்,
“ஏ, சீலோ அந்தப் பக்கம் போகாதே! அங்கே காட்டுத்தீ ஆரம்பமாகியிருக்கு! போகாதே!” என சந்திரக்கோட்டைக் காட்டின் மற்ற விலங்குகள் அவசர அவசரமாகச் சொல்லிவிட்டு எதிர்த் திசையில் ஓடிக் கொண்டிருந்தன.
சீலோவிற்கும் பயம் தான். ஓடிய விலங்குகளைப் பார்த்துக் கொண்டே இருந்த சீலோ, கூட்டத்தில் பக்லூ மான் இல்லாததைக் கண்டுபிடித்தது.
“பக்லூ எங்கே? யாராவது பார்த்தீங்களா? என் நண்பன் பக்லூ எங்கே?” என மற்ற விலங்குகளிடம் கேட்டது சீலோ.
“இல்லையே சீலோ! பக்லூவோட வீட்டுகிட்ட தான் காட்டுத்தீ எரியுது. பாவம் பக்லூ! என்ன ஆச்சோ தெரியலை” என்று மற்ற மிருகங்கள் பதில் கூறின.

“அச்சோ, பக்லூ கொட்டின கரிதுண்டுகள்னால தீ பிடிச்சிருக்குமோ?” என அஞ்சிய சீலோ, அவசர அவசமாக பக்லூவின் வீட்டை நோக்கிச் சென்றது. பக்லூவின் வீட்டைச் சுற்றிலும் காட்டுத்தீ படர்ந்து கொண்டிருந்தது. ஒரு பக்கமாகக் கொஞ்சம் இடைவெளி இருக்க, அதன் வழியே சீலோ, பக்லூவின் வீட்டை அடைந்தது.
வீட்டின் மூலையில் பக்லூ பயத்துடன் அமர்ந்து அழுது கொண்டிருந்தது.
“அழாதே பக்லூ. காட்டுத்தீயில் இருந்து தப்பிக்க எங்க பள்ளியில் சொல்லிக் குடுத்திருக்காங்க. நான் சொல்றபடி கேட்கணும். சரியா?” என்று பக்லூவிற்கு ஆறுதல் சொன்ன சீலோ, வேகமாகத் தன் பள்ளியில் சொல்லிக் கொடுத்தபடி வேலைகள் செய்யத் துவங்கியது.
“பக்லூ இங்க வா, முதல்ல இந்த நிலத்தில பள்ளம் தோண்டு. ம்ம்ம் சீக்கிரம்..” என பக்லூவிற்கு கட்டளை இட்ட சீலோ, தானும் சேர்த்து பள்ளம் தோண்டியது.
“இப்போ இந்தப் பள்ளத்திற்கு உள்ள நாம உட்கார்ந்துக்கணும். நம்ம மேல, ஈரமான மண்ணைப் போட்டுகிட்டு, தீ எரிய எதுவும் நம்ம பள்ளத்தின் மேல இல்லாத மாதிரி பார்த்துக்கணும்” என்று பள்ளத்தின் மீது இருந்த சருகுகள், குப்பைகள் என அனைத்தையும் தள்ளிவிட்டுச் சுத்தம் செய்தது சீலோ.
சிறிய பள்ளம் தோண்டி, அதனுள் சென்று பக்லூவும் சீலோவும் அமர்ந்து கொண்டனர். பள்ளத்தின் வாயிலின் மீது ஈரமான மண் துவி பள்ளத்தை மூடிவிட்டனர்.
“பள்ளத்தின் உள்ளே நாம சுவாசிக்க காற்று இருக்குமா சீலோ?” எனப் பயத்துடன் கேட்டது பக்லூ.
“நாம, பள்ளத்தின் மீது ஈரமான மண்ணைத் தூவினோமே ஞாபகம் இருக்கா பக்லூ. அந்தத் தண்ணீரில் இருக்கும் ஆக்சிஜன் நாம இப்போதைக்கு உயிர் வாழப் போதுமானது, பதட்டம் கொள்ளாம இரு” என்று ஆறுதல் படுத்தியது சீலோ.
சிறிது நேரத்தில் காட்டுத்தீ தானாகவே அமிழ்ந்து போய்விட்டது. பக்லூவும், சீலோவும் பத்திரமாக வெளியே வந்தன.
சீலோவை காட்டின் மற்ற விலங்குகள் அனைத்தும் பாராட்டின. “பலே சீலோ, காட்டுத்தீயில் எப்படிச் சமாளிச்ச? உனக்கு எப்படி இந்தப் பள்ளம் தோண்டற யோசனை வந்தது?” என்று வினவின.
“அதுவா? என் பள்ளியில இக்கட்டான நிலைமை வந்தா எப்படி சமாளிக்கணும்னு எப்போதும் சொல்லிக் குடுத்துகிட்டே இருப்பாங்க. காட்டுத்தீயில் மாட்டிக் கொண்டால் எப்படி சாமர்த்தியமா தப்பிலாம்னு எங்க நூலகத்தில் புத்தகம் கூட இருக்கு” என்று தன் பள்ளியைப் பற்றிப் பெருமையாகக் கூறியது சீலோ குரங்கு.
மற்ற விலங்குகள் சீலோவின் அறிவையும் தைரியத்தையும் பாராட்டின. பக்லூவும் மனம் மாறியது. எல்லா விலங்குகளிடமும் மன்னிப்பு கேட்டது.
“சீலோ, இனி நானும் உன் கூட மேகமலைக்காட்டின் பள்ளிக்கு வர்றேன். பெரியவங்க சொன்னதை இனிமே நான் உதாசீனப்படுத்த மாட்டேன் சீலோ. எல்லாமே எனக்குத் தெரியும்னு வீம்பா இருக்க மாட்டேன். நிறைய நல்ல புத்தகங்கள் படிச்சு நானும் நிறைய தெரிந்து கொள்வேன் சீலோ. மற்றவங்களுக்கு உதவியா இருப்பேன்.” என்று பக்லூ மான்குட்டி சொன்னது.
சந்திரக்கோட்டைக் காட்டின் மற்ற விலங்குகளும், சீலோவின் அறிவைப் பாராட்டின. சீலோவைப் போல நன்றாகப் படித்து, நிறைய நல்ல விஷயங்கள் தெரிந்து கொண்டு, தங்கள் அறிவைப் பயன்படுத்தி அனைவருக்கும் உதவியான வாழ்க்கை வாழ முடிவெடுத்தன.
*****