என்ன சுட்டீஸ்! இந்த மாதம் எந்தச் செடி பத்தி தெரிஞ்சுக்க போறோம்னு ஆர்வமா இருக்கீங்களா?
இந்த மாதம், துளசிச் செடியைப் பத்திதான் நாம இந்த மாசம் தெரிஞ்சிக்க போறோம்.
உங்கம்மாவோ பாட்டியோ இல்ல வீட்டுல இருக்கும் பெண்களோ வீட்டு வாசல்ல ஒரு மாடம் அமைத்து அதில துளசிச் செடியை நட்டு அதுக்கு தினமும் தண்ணீர் ஊற்றி அந்த மாடத்துக்கு முன்னால கோலம் போட்டு விளக்கேத்தி வெச்சி மாடத்த சுத்தி வந்து பூஜை செய்யறத பாத்திருப்பீங்க.
என்னடா இவங்க ஒரு செடியை சாமி மாதிரி கும்பிடறாங்களேன்னு நீங்க யோசிச்சிருக்கலாம். அதுக்கு காரணம் இருக்கு..
நாம உயிர் வாழ முக்கியமானது காற்று. அதாவது ஆக்சிஜன் (Oxygen – O2) என்று அழைக்கப்படும் பிராண வாயு.
இந்த வாயு, செடிகள் மூலமாகத்தான் நமக்கு கிடைக்கிறது. தாவரங்கள் வளிமண்டலத்தில அதாவது ஆட்மாஸ்பியரில் (Atmosphere) இருந்து கார்பன் டைஆக்சைட் (Carbon dioxide – CO2) எனப்படும் கரியமில வாயுவை உரிஞ்சிகிட்டு பிராண வாயுவை (Oxygen – O2) வெளியிடுகிறது. இதைப்பத்தி நீங்க உங்க அறிவியல் பாடத்தில படிச்சிருக்கலாம். இது வரை இந்தப் பாடம் நீங்க படிச்சதில்லைன்னா அடுத்த வகுப்புகள் போகப் போக இதைப் பற்றி கண்டிப்பா படிப்பீங்க.
என்னடா இந்த அத்தை, துளசிச் செடியப் பத்தி சொல்றேன்னு ஆரம்பிச்சிட்டு அறிவியல் பாடம் எடுத்திட்டு இருக்காங்களேன்னு நெனக்கிறீங்களா? காரணம் இல்லாம இல்ல சுட்டீஸ்!
துளசிச் செடிகள் ரொம்ப சின்ன செடியா இருந்தாலும் அதிகமான அளவு கரியமில வாயுவை தனக்குள்ள எடுத்துகிட்டு அதிகமான அளவுக்கு ஆக்சிஜனை வெளியிடற ஒரு அற்புதத் தாவரம்.
துளசிச் செடி எங்கல்லாம் இருக்கோ அங்கல்லாம் நாம சுவாசிக்கறதுக்கு நல்ல தூய்மையான காத்து கிடைக்கும்னு அர்த்தம்.
அதனாலதான் நாம உயிர் வாழத் தேவையான ஆக்சிஜனை வெளியிடற துளசிச் செடியை சாமியா நெனச்சு வழிபட ஆரம்பிச்சாங்க நம்ம முன்னோர்கள்.

Courtesy : Internet
துளசி (Ocimum tenuiflorum), லேமியேசீ (Lamiaceae) குடும்பத்தைச் சேர்ந்த தாவரம். துளசி ஒரு மூலிகைச் செடியாகும். இந்தியாவைத் தாயகமாகக் கொண்ட இச்செடி, இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் காணப்படுகிறது. ஏறத்தாழ 50 சென்டி மீட்டர் வரை வளரக் கூடிய இச்செடியின் அனைத்துப் பாகங்களும் மருத்துவக் குணம் கொண்டவை.
பயன்கள்:
* ஜலதோஷம், காய்ச்சல், ஆஸ்துமா, மன அழுத்தம், நீரிழிவு, இதய நோய், மலேரியா, கல்லீரல் நோய், வயிற்றுப்போக்கு, தூக்கமின்மை போன்றவற்றுக்கு துளசி நன்மை பயக்கும்.
* துளசி பூச்சி கடிக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது.
* டெங்கு, மலேரியா போன்ற நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கிறது.
* செரிமானத்தை மேம்படுத்தவும் உதவும்.
வகைகள்:

Courtesy : Internet
* கருந்துளசி,
* நாய்த்துளசி,
* திருநீற்றுப்பச்சை,
* ஊதா இலை துளசி (கிருஷ்ண துளசி),
* பச்சை இலை துளசி (ராம துளசி),
* காட்டு வகை ‘வன’ துளசி,

Courtesy – Internet
* கபூர் துளசி,
* கரியமால் துளசி,
* செந்துளசி,
* சிவதுளசி,
* நீலத்துளசி,
* பெருந்துளசி
என்று துளசியில பல வகைகள் இருக்கு.
குணங்கள்:
துளசியின் ஒவ்வொரு வகையும் தனித்தனியாக இருக்கும். பார்வை, நறுமணம், அண்ணம் ஆகியவற்றில் இவை வேறுபடும்.

Courtesy – Internet
ராமதுளசி என்பதுதான் நம் வீடுகளில் துளசி மாடம் அமைத்து வழிபடப்படும் சாதாரண பச்சை இலை துளசி வகையாகும்.
கருந்துதுளசி, கிருஷ்ண துளசி, நாய்த்துளசி இவற்றின் இலைகள் சற்று கரும்பச்சை அல்லது ஊதா நிறத்தில் இருக்கும். இதற்கு காரம் சற்று அதிகமாக இருக்கும்.
துளசியின் இலைகள் தின்பதற்கு சற்று காரம் நிறைந்ததாகவும் துவர்ப்பு சுவை நிறைந்ததாகவும் நல்ல மணம் கொண்டதாகவும் இருக்கும்.

Courtesy – Internet
துளசி குடும்பத்தின் மற்ற தாவரங்கள்:
ரோஸ் மேரி என்றழைக்கப்படும் தாளிச்ச பத்ரி, புதினா எனப்படும் மின்ட், ஆரிகானோ எனப்படும் கற்பூரவல்லிச் செடி போன்ற நறுமணப் பொருட்களாகக் கருதப்படும் தாவரங்கள் அனைத்துமே துளசி குடும்பத்தை அதாவது லேமியேசீ குடும்பத்தைச் சேர்ந்த தாவரங்கள்தான் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? 😁

Courtesy – Internet
என்ன சுட்டீஸ்! துளசியைப் பற்றி இன்னிக்கு நீங்க நிறைய தகவல்கள் தெரிஞ்சிகிட்டீங்கல்ல? இதில சொல்லப்படாத எதாவது தகவல் உங்களுக்கு தெரிஞ்சா, கமெண்ட்ல சொல்லுங்க. உங்க கிட்டேர்ந்து அத்தையும் புது விஷயம் கத்துக்கறேன். 😊
எல்லாரும் சமத்தா ஆண்டுத் தேர்வுக்கு தயாராகுங்க. உங்கள் தேர்வுகளுக்கு ஆல் த பெஸ்ட். 💐

Courtesy – Internet
அடுத்த இதழ்ல வேற ஒரு தாவரத்தைப் பற்றிய அரிய தகவல்களுடன் உங்கள சந்திக்கறேன்.
அதுவரைக்கும்,
டாட்டா! பை! பை!
👋👋👋👋👋👋👋
அன்னபூரணி தண்டபாணி