ஓவியத்தொடர்-14 – சித்திரக்கதை (comics)
ஹாய் குட்டீஸ்…
யாருக்கெல்லாம் சித்திரக்கதை பிடிக்கும்?
என்னாது சித்திரக்கதைன்னா என்னாவா? அதாம்பா காமிக்ஸ், படம் போட்டு கதை சொல்லுவாங்களே, ஒரு பலூன் மாதிரி போட்டு அதில் பேசும் வசனம் எல்லாம் இருக்குமே, அதான் சித்திரக்கதை.
இப்போது நாம் பார்ப்பது புதிய வடிவங்களில் கதைகள். ஆனால் 50,000 வருடங்களுக்கு முன்பேயே மனிதர்கள் தங்கள் செயல்பாடுகளை கற்பாறைகளில், குகைகளில் பதிய எடுத்துக்கொண்டதும் இதே சித்திரக்கதை வடிவம்தான். ஆமாம், தங்கள் வேட்டையை, இயற்கையை அப்படியே கதை போல வரைந்தார்கள். அப்போது பேச எழுத மொழி எல்லாம் உருவாகவில்லை. ஆகவே முன்னமே சொன்னமாதிரி ஓவியம்தான் உலகமொழியா இருந்திருக்கு.
சமீபம் எனில் அச்சிடும் கருவிகள் கண்டுபிடித்த கி.பி 1700 களில் இந்த கலை புது உருவம் எடுத்தது. சொல்ல வந்த விஷயத்தை தொடர் படமாக உருவாக்கி அச்சிட்டாங்க. கார்ட்டூன், உருவப்படங்கள், நிகழ்வுகள் அப்படி இவை இருந்தன.

அதுக்கப்புறம் போன நூற்றாண்டில் படங்களுக்கு கீழே ஒரு பேனர் போல வரைந்து அதில் வசனம் எழுதினாங்க. அப்புறம்தான் பேசும் பலூன்கள் வந்தது.
சூப்பர் ஹீரோக்கள் கண்டுபிடிச்சதும் இந்த சித்திரக்கதை வடிவம் புது உத்வேகத்தில் வெகு வேகமா பரவுச்சு. சூப்பர்மேன், வேதாளர் அப்படி பல ஹீரோக்கள் வந்தாங்க.
இப்போ அமெரிக்கா, ஃப்ரான்ஸ், பெல்ஜியம், இத்தாலி போன்ற நாடுகளில் காமிக்ஸ் ஒரு உட்சபட்ச மார்க்கெட் கொண்ட தளம். இங்கே எல்லாம் காமிக்ஸ்க்கு என்றே கடைகள், சந்தைகள், விழாக்கள் எல்லாம் உண்டு.

நம் ஊரில் வாண்டுமாமாவும், ஓவியர் செல்லமும் இணைந்து அழகான பல காமிக்ஸ் கதைகளை கொண்டு வந்தாங்க.
![]() | ![]() |
இன்னும் பல வார இதழ்கள் தங்கள் இதழ்களில் காமிக்ஸ்க்கு என்றே பல பக்கங்களை ஒதுக்கினாங்க. தினத்தந்தி இதழில் தினமும் வரும் கன்னித்தீவு கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் வரும் ஒரு தொடர். கதை ஒரே மாதிரி போகும். ஒரு உலக சாதனைக்காக அதை தொடர்ந்து வரைஞ்சுட்டு வராங்க.
நாமும் காமிக்ஸ் உருவாக்கலாம் தெரியுமா?
ஒரு நோட்டுபேப்பர் எடுத்துக்கவும். அதில் ஒரு பக்கத்தில் பென்சிலால் நான்கு கட்டங்களாக பிரிக்கவும். ஒரு சின்ன கதை எதாவது எழுதுங்க. அதில் வரும் சம்பவங்களை முதல் கட்டம், அப்புறம் இரண்டாவது மூன்றாவது என தொடர்ந்து வரைங்க. பத்தலைன்னா இன்னொரு பேப்பரிலும் தொடரலாம். முக்கியமா கதையா எழுதிய எல்லாமே இங்கே போடக்கூடாது. பெரும்பாலும் படமா சொல்லிடறதால முக்கியமான வசனம் மட்டும் போட்டால் போதும்.
![]() | ![]() | ![]() |
பொதுவா சொல்ல பல விதமான வடிவத்தில பலூன்கள்..

அவ்ளோதான் சித்திரக்கதை. ட்ரை பண்ணுங்க. உலகில் இது ஒரு பெரிய வாய்ப்புள்ள மார்க்கெட்.
– தொடரும்..
– அப்பு சிவா