வேடிக்கை விநோதக் கதைகள்

நூல்: வேடிக்கை விநோதக் கதைகள்
ஆசிரியர்: வாண்டு மாமா
பக்கம் : 300

எளிமையான எழுத்து நடை, சிறுவர்களுக்கான படைப்புகளைத் தரும்போது தானும் அதே சிறுவர்களின் மன நிலைக்கு மாறி நின்று வழங்கிய பாணி, எல்லைகளுக்குள் தன்னைச் சிறைப்படுத்திக் கொள்ளாமல் கற்பனைச் சிறகை விரித்துப் பறந்து வாசிப்போரையும் சிறகடிக்க வைத்த பாங்கு, சித்திரக் கதைகளைத் தரும்போது கரங்கோர்த்த ஓவியர்களோடு சேர்ந்து நடத்திய ஓவிய விருந்துகள் என்று ‘வாண்டு மாமா’ அந்த நாளைய ஒவ்வொரு சிறுவரது இல்லத்திலும் குடும்பத்தில் ஒருவராகவே திகழ்ந்தார்.

முதன்முதலாக கலைமகள் இதழில் ‘குல்ருக்’ என்ற கதை எழுதினார். பாரதி என்ற கையெழுத்துப் பத்திரிகை நடத்தினார். சென்னையில் நடைபெற்ற கையெழுத்துப் பத்திரிகைகள் மாநாட்டில் இவரது பத்திரிகை முதல் பரிசு பெற்றது. விளம்பரப் பலகைகள், புத்தக அட்டை, உள்பக்கப் படங்கள் வரையும் ஓவியராக திருச்சியில் பணியாற்றினார்.

கவுசிகன் என்ற புனைப்பெயரில் எழுதினார். ஆனந்தவிகடன் இதழின் ஓவியர் மாலி, இவரது திறனை அறிந்து, சிறுவர் கதைகள் எழுதுமாறு கூறினார். இவருக்கு ‘வாண்டு மாமா’ என்று பெயர் சூட்டியதும் அவர்தான். பிறகு திருச்சியில் இருந்து வெளிவந்த ‘சிவாஜி’ பத்திரிகையின் பொறுப்பாசிரியராகப் பணியாற்றினார். அதன் சிறுவர் மலர் பகுதியில் கதைகள் எழுதினார். வானவில், கிண்கிணி ஆகிய பத்திரிகைகளில் பணியாற்றினார். கல்கி இதழில் விற்பனைப் பிரிவு குமாஸ்தாவாக சேர்ந்தவர், விரைவில் ஆசிரியர் குழுவில் இணைந்தார்.

கல்கியின் ‘கோகுலம்’ குழந்தைகள் வார இதழில் பலே பாலு, சமத்து சாரு போன்ற இவரது படைப்புகள், குழந்தைகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றன. அங்கு 23 ஆண்டுகள் பணிபுரிந்தார்.

நடுகாட்டில் கதை ஒரு நாய், இரண்டு சிறுவர்கள் செய்யும் சாகசக் கதை. துப்பறியும் கதை என்றும் சொல்லலாம்.

இப்படியெல்லாம் சிந்திக்கலாம் என்று வியக்க வைத்தக் கதை எதிரொலியின் கதை. ஈகையே இன்பம் கதையில் மைக்கேல் என்கிற சிறுவனின் செயல் நம்மைக் கலங்க வைக்கும். பாட்டியின் ஆசைக்காக தன் ஆசையினைத் துறந்து அவன் செய்யும் செயல் ஒரு பாடம். மந்திரக் கதை, மாயாஜலக் கதை இது. மந்திரப் பறவை.

பலராமன் பாலம் என்ற கதையில் ஒரு சிறுவன் முற்சியால் கிராமத்திற்கு எவ்வாறு பாலம் வந்தது என்பதைப் பற்றிய கதை.

சில நெடுங்கதைகள் ஆகவும் உள்ளன. இதில் ஃபேண்டஸி வகைமை கதைகளும் உள்ளன. அதில் பென்சில் கதை சிறப்பு!

53 சிறு சிறு கதைகள் இந்த புத்தகத்தில் உள்ளது அதுபோல பல தேச விளையாட்டுக்கள் என்று ஒரு தலைப்பில் விதவிதமான விளையாட்டுகளைப் பற்றியும் எழுதியுள்ளார்.

குழந்தைகளுக்கு ஞாபக சக்தி விளையாட்டு பயிற்சி சிறப்பாக இருந்தது. ஒரு சிறிய பெட்டியில் பொருளை வைத்து குழந்தைகள் அதைப் பார்க்கச் செய்ய வேண்டும். பின்னர் அதை மறைத்துக்கொண்டு என்னென்ன பொருட்கள் பார்த்தார்கள் என்று வரிசையாக எழுத வேண்டும்.

நாடு பிரித்து விளையாடும் விளையாட்டு சிறு வயதில் நானும் விளையாடி இருக்கிறேன்.

மாண்டிசோரி பள்ளியில் சில விளையாட்டுகள் பார்த்திருப்போம். அதேபோல் பக்கெட்டில் தண்ணீர் நிரப்புதல் என்று சில விளையாட்டுகள் கூறியிருக்கிறார். புதிய விளையாட்டுகள் பலவற்றை கண்டுகொண்டேன்.

வாங்கிப் படிக்க வேண்டிய புத்தகம் இது.

– ஜெயா சிங்காரவேலு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *