சுத்தி சுத்தி வந்தீக – வாழை
ஹாய் சுட்டீஸ்! எல்லாரும் எப்டி இருக்கீங்க? எல்லாருக்கும் லீவு விட்டிருக்கும். இந்த லீவில ஜாலியா பொழுதை போக்க பிளான் போட்டுகிட்டு இருப்பீங்க. ஆமாம்தானே? 🤩🥳
ஓகே! ஜாலியா பொழுதை போக்கற அதே நேரத்தில நான் சென்ற மூன்று மாதங்களா சொன்ன தாவரங்களை கவனிக்க மறந்துடாதீங்க.
என்னென்ன தாவரங்கள் பத்தி சொன்னேன்னு ஞாபகம் இருக்கா? 🤔
ஆமா சுட்டீஸ்! கரெக்ட்டா சொல்லிட்டீங்களே! சமத்து பசங்க! 👏
புல், துளசி மற்றும் கறிவேப்பிலை பத்திதான் சொல்லியிருந்தேன்.
இந்த மாதம் என்ன தாவரம் பத்தி நாம தெரிஞ்சிக்க போறோம்னு பாக்கலாமா? ☺️
வாழை! 🍌
வாழை இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவை பூர்வீகமாகக் கொண்டவை. குறிப்பாக, தென்கிழக்கு ஆசியாவின் பிற பகுதிகளுடன் சேர்ந்து, வாழையின் பிறப்பிடங்களில் ஒன்றாக இந்தியா கருதப்படுகிறது. பெரும்பாலான வாழை வகைகள் முதலில் இந்தியா உட்பட தென்கிழக்கு ஆசியாவின் மழைக்காடுகளில் காணப்பட்டன.

வாழை உயரமான மரமாக வளர்ந்தாலும் அறிவியல் சொற்களில் அவை குத்துச் செடிகளின் வளர்ச்சியடைந்த வடிவமே.
வாழையின் அறிவியல் பெயர் மூசா (Musa sp.)! அதன் குடும்பம் மூசேசீ (Musaceae)!
வித்யாசமான பெயராக இருக்கிறது! அல்லவா? 😄
வாழை மற்ற தாவரங்களைப் போல விதைகளின் வழியாக இனப்பெருக்கம் செய்வதில்லை. மாறாக வாழையின் அடிக்கிழங்கிலிருந்து புதிய கன்றுகள் முளைக்கின்றன.
புதிய கன்றுகள் முளைத்து வளரத் தொடங்கும்போது தாய் மரம் விழுந்து விடும்.
வாழையில் பொட்டாசியம், வைட்டமின் பி6, வைட்டமின் சி மற்றும் மாங்கனீசு உள்ளிட்ட பல வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. மேலும் அவற்றில் கார்போஹைட்ரேட்டுகள், நார்ச்சத்து மற்றும் சில புரதங்களும் உள்ளன. கூடுதலாக, வாழைப்பழங்களில் நார்ச்சத்து நிறைந்துள்ளது, இது செரிமான ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.
பொட்டாசியம்:
வாழைப்பழங்களில் இருக்கும் பொட்டாசியம் திரவ சமநிலை, நரம்பு செயல்பாடு மற்றும் தசை சுருக்கத்தை பராமரிக்க முக்கியமானது.
வைட்டமின் பி6:
வைட்டமின் B6 மூளை செயல்பாடு, வளர்சிதை மாற்றம் மற்றும் நோயெதிர்ப்பு ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.
வைட்டமின் சி:
வைட்டமின் சி என்பது ஒரு ஆக்ஸிஜனேற்றியாகும். இது உடலை ஃப்ரீ ரேடிக்கல்களிலிருந்து சேதத்திலிருந்து பாதுகாக்க உதவுகிறது.
மாங்கனீசு:
மாங்கனீசு எலும்பு வளர்ச்சி, வளர்சிதை மாற்றம் மற்றும் கொலாஜன் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளது.
கார்போஹைட்ரேட்டுகள்:
வாழைப்பழங்கள் உடலுக்கு முதன்மையான ஆற்றலான கார்போஹைட்ரேட்டுகளை வழங்குகின்றன.
நார்ச்சத்து:
நார்ச்சத்து இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது மற்றும் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
பிற ஊட்டச்சத்துக்கள்:
வாழைப்பழங்களில் சிறிய அளவிலான பிற வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் தாவர சேர்மங்களும் உள்ளன.
வாழையின் இலை, தண்டு, பூ, காய், பழம், அதிலிருந்து கிடைக்கும் நார் என அந்தத் தாவரத்தின் அனைத்துமே மருத்துவத் துறையிலும் உணவாகவும் மற்ற அலங்கார வேலைப்பாடுகள் மற்றும் ஜவுளித்துறையிலும் பிற தேவைகளுக்கும் பயன்படுகின்றன.

வாழையின் இலைகளை தட்டு போல உணவு வைத்து சாப்பிடப் பயன்படுத்துவோம்.
வாழைப்பூ துவர்ப்பு சுவையுடன் இருக்கும். வாழைக்காய் சுவை எதுவும் பகுக்க இயலாத கடுப்பு சுவையுடன் இருக்கும். இவை இரண்டையும் நம்மால் சமைத்துதான் உண்ண முடியும். ஆனால் வாழைப்பழம் மிகுந்த இனிப்பு சுவையுடன் இருக்கும். சமைக்காமல் அப்படியே சாப்பிட முடியும்.

அதனால்தான் நமது முன்னோர், மா, பலா வாழை என்று முக்கனிகளுள் ஒன்றாக வாழையைக் குறிப்பிடுகின்றனர்.
வாழைத் தண்டு, வாழைப்பூ, வாழைக்காய், வாழைப்பழம், எல்லாமே, பொரியல், கூட்டு, குழம்பு, ஊறுகாய் என்று பல வகைகளில் உணவாகப் பயன்படுகிறது.
யாருக்கெல்லாம் வாழைக்காய் மற்றும் நேந்திரங்காய் வறுவல் (Chips) பிடிக்கும்னு கமென்ட் பண்ணுங்க சுட்டீஸ்!

வாழைத் தண்டு மற்றும் வழைப்பட்டையிலிருந்து கிடைக்கும் சாறு பாம்புக்கடி விஷத்தை முறிக்கப் பயன்படும் சிறந்த மருத்துவ குணம் கொண்ட ஒன்றாகும்.
வாழைப்பழத்தின் தோல் அழகு நிலையங்களில் பயன்படும் கிரீம்கள் உள்ளட்ட அழகு சாதனப் பொருட்கள் செய்யப் பயன்படுகின்றன.
வாழையின் நார் பூச்சரம் கட்டுவதற்கும் பூமாலை கட்டுவதற்கும் பயன்படுத்தப்படுகின்றன.
வாழை நார், விளக்கு ஏற்றும் திரியாகவும் பயன்படுகின்றன.
வாழைத் தண்டின் பட்டைகள் அலங்காரம் செய்யப் பயன்படுகிறது.
வாழையின் நார் ஜவுளித்துறையிலும் அமோகமாகப் பயன்படுகின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா? வாழை நார் பட்டுப்புடவைகள் கலைநயம் மிகுந்த வேலைப்பாடுகளுடன் கூடியதாக இருந்தாலும் உடுத்துவதற்கு மென்மையாகவும் இலகுவாகவும் இருக்கும்.
சமீபத்தில் அயோத்தியில் நிர்மாணிக்கப்பட்ட குழந்தை ராமர் கோயிலில் சீதா பிராட்டியாரின் திருவுருவச் சிலையில் கட்டுவதற்கு தமிழகத்திலிருந்து புதிதாக வாழை நார் பட்டுப் புடவைகள் தயார் செய்யப்பட்டு அனுப்பப்பட்டுள்ளன என்றால் அதன் மதிப்பை நீங்களே புரிந்து கொள்ளுங்கள்.
வாழைநார் பட்டுத்துணி உற்பத்தியின் போது வெளிவரும் கழிவுகளை வைத்து கூடை முறம் பைகள் போன்ற வீட்டு உபயோகப் பொருட்கள் செய்யவும் சங்கிலி, காதணி, வளையல், கொலுசு போன்ற ஆபரணங்கள் செய்யவும் பயன்படுகின்றன.
மொத்தத்தில் வாழையின் அடி முதல் நுனி வரை எல்லாமே பயன்பாடு உடையவைதான்.
வாழையின் பயன்களைப் பட்டியலிட்டால் அது நீண்டு கொண்டே போகும்.
வாழைப்பழங்களில் பல வகைகள் உள்ளன.
பூவன், புள்ளிப் பச்சை, கற்பூர வாழை, ரஸ்த்தாளி, செவ்வாழை, மலை வாழை, ஏலக்கி, நேந்திரன் என பல வகைகள் உள்ளன.
![]() | ![]() | ![]() | ![]() |
நவீன உத்திகள் பயன்படுத்தி பல புதிய வகைகளும் அறிமுகம் செய்யபட்டுள்ளன.
வாழையில் பல வகைகள் உள்ளதைப் போலவே வாழையின் குடும்பம் அல்லாத சில செடிகளுக்கு வாழை என்று பெயர் வழங்கப்படுவதும் உண்டு.
எடுத்துக்காட்டாக, நாம் பல பூங்காக்களில் அழகுக்காக வைத்து வளர்க்கப்பட்டிருக்கும் விசிறி வாழை என்ற மரத்தைப் பார்த்திருப்போம்.
அதன் இலைகள் இயற்கையிலேயே விசிறி போல அழகாகவும் வரிசையாகவும் வளரக் கூடியது. அதன் இலைகள் வாழையிலை போன்றே இருக்கும். அதனால்தான் அதற்கு விசிறி வாழை என்ற பெயர் வந்தது.
அதனை ஆங்கிலத்தில் Traveller’s Palm என்று குறிப்பிடுவார்கள்.
ஆனால் உண்மையில் வாழைக் குடும்பத்துக்கும் விசிறி வாழைக்கும் எந்த ஒரு சம்மந்தமும் இல்லை. அதே போல Palm என்று அழைக்கப்பட்டாலும் பனை குடும்பத்திற்கும் அதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை.
![]() | ![]() | ![]() கல் வாழை |
வியப்பாக உள்ளது. அல்லவா!
அதே போல கானா வாழை அல்லது கல் வாழை, கன்னுக்குட்டி வாழை என்று பல செடிகள் உள்ளன. அவையும் கூட வாழை என்று அழைக்கப்பட்டாலும் வாழையுடன் அவை எந்த வகையிலும் சம்மந்தப்படாதவைதான்.
ஆனால் நம்மால் நினைத்துப் பார்க்க முடியாத இரண்டு தாவரங்கள் வாழையுடன் சம்மந்தப்பட்டுள்ளன என்றால் நீங்கள் நம்புவீர்களா?
ஆமாம் சுட்டீஸ்!
இஞ்சி மற்றும் மஞ்சள். இரண்டும் வாழையுடன் சம்பந்தப்பட்டவை! ஆச்சர்யமாக உள்ளதா?
இஞ்சி மற்றும் மஞ்சள் இரண்டும் வாழைக் குடும்பம் இல்லையென்றாலும் வாழையின் வரிசையில் வரும் தாவரங்களாகும்.
அதாவது, இஞ்சி மஞ்சள் மற்றும் வாழை ஆகிய தாவரங்கள் ஜிங்கிபெரலேஸ் (Zingiberales) என்ற தாவர வரிசைக்கு (Order) உட்பட்டவை. இந்த வரிசையில் பல தாவரக் குடும்பங்கள் (Family) உள்ளன. அவற்றில் இஞ்சியும் மஞ்சளும், ஜிங்கிபரேசீ (Zingiberaceae) என்ற குடும்பத்தையும் வாழை, மூசேசீ என்ற குடும்பத்தையும் (Musaceae) சேர்ந்தவை.
அதனால்தான் வாழையும் இஞ்சியும் மஞ்சளும் சம்மந்தப்பட்டவை என்றேன்.
என்ன சுட்டீஸ்? வாழையைப் பற்றி நிறைய புது விஷயங்கள் தெரிஞ்சிகிட்டீங்களா?
அடுத்த இதழ்ல வேற ஒரு தாவரத்தைப் பற்றிய குறிப்புகளோட வரேன்.
அது வரைக்கும் லீவில ஜாலியா சமத்தா இருங்க.
டாட்டா! பை! பை!
👋👋👋👋👋👋👋
– அன்னபூரணி தண்டபாணி