சோனியின் சனடோரா

ஒரு அழகிய மலைப் பிரதேசத்தின் அடிவாரத்தில் அமைந்திருந்தது “ஜுமரியா” என்ற கிராமம். அங்கே சோனி என்ற 10 வயதுச் சிறுமி தன் பெற்றோருடன் வாழ்ந்து வந்தாள். சோனியின் தந்தை ஒரு சுற்றுச்சூழல் ஆர்வலர். தந்தையைப் போலவே சோனிக்கும் மரங்கள், செடி, கொடிகள் மற்றும் மிருகங்கள் மீது அலாதி ஆர்வம். சோனி தன் பள்ளி விடுமுறை நாட்களில் வெளிப்புறங்களை ஆராய்வதையும் இயற்கை உலகத்தைப் பற்றி அறிந்து கொள்வதையும் விரும்புவாள்.

ஒரு நாள், சோனி தன் வீட்டின் பின் பக்கம் இருந்த காட்டு வழியில் சிறிது தூரம் சென்று விளையாடிக் கொண்டிருந்தாள். அங்கே ஒரு அழகிய மலர் செடியினைப் பார்த்தாள் சோனி. அந்தப் பூவின் பெயர்ச் சோனிக்குத்  தெரியவில்லை. அழகிய ஊதா வண்ணத்தில், தங்க நிற காம்புடன் இருந்த பூவினை வெகுவாக ரசித்தாள் சோனி.

சோனிக்கு எப்போதும் செடியில் இருந்து மலர்களைப் பறிக்கப் பிடிக்காது. “அழகாய் இருக்கிறதே என்று பூவைப் பறித்தால், அது ஒரே நாளில் வாடிச் செத்துப் போகும். அதுவே செடியில் இருந்தால், சில நாட்கள் அழகாய் பூத்து, உயிர்ப்புடன் இருக்கும். எனவே தேவையில்லாமல் பூக்களைப் பறிக்கக் கூடாது” என்று சோனியின் அன்னை கூறியதை நினைவில் வைத்துக் கொள்வாள் சோனி.


அதனால், அந்த அழகிய ஊதா மலரைப் பறிக்க வேண்டும் என்ற ஆசையாக இருந்தாலும், கட்டுப்படுத்திக் கொண்டு ஆர்வமாக ரசித்தாள் சோனி.
அன்றைய தினம் வீட்டிற்கு வந்ததும் தன் தந்தையிடம் தான் கண்ட அழகிய மலர்ப் பற்றி ஆர்வமாகக் கூறினாள் சோனி.


தன் அம்மாவிடம், “அந்தப் பூ ரொம்ப அழகாய் இருந்தது அம்மா. ஆனால் நீங்கள் சொன்னது போல, பூக்களைத் தேவையில்லாமல் பறிக்கக் கூடாதுன்னு நியாபகம் வந்ததும்மா” என்றாள் சோனி.


“ரொம்ப நல்லது பண்ணியிருக்கச் சோனி.” என்று சோனியின் செயலை அவள் அம்மா பாராட்டினார்.


அன்று சோனி மிகவும் மகிழ்ச்சியுடன் உறங்கினாள். மறு தினம் காலை எழுந்த போது லேசான மழைத் தூரிக் கொண்டிருந்தது.


“நேற்று இரவு ரொம்ப மழைப் பொழிவு இருந்ததா அம்மா?”என்று கவலையுடன் வினவினாள் சோனி.


“ஆமா சோனி. நேற்று இரவு பலத்த மழை பேய்ந்தது. இப்பொ தான் குறைஞ்சிருக்கு. ஏன் மா?” என்று வினவினார்.


சோனியின் மனதில் அந்த ஊதா வண்ண மலர்ச் செடி தான் நினைவில் வந்தது. “ராத்திரி ரொம்ப மழைப் பெய்திருந்தா, அந்தப் பூ இப்போ உதிர்ந்து போயிருக்குமே ” என்று கவலை கொண்டாள் சோனி.

மழை நின்றவுடன் தன் அம்மாவிடம் சென்றாள்.


“அம்மா நான் நேத்துப் பார்த்த ஊதா பூ வண்ண செடி என்னாச்சோன்னு கவலையா இருக்கும்மா, நாம போய் அந்தச் செடி எப்படி இருக்குனு பார்த்திட்டு வரலாமாம்மா?” என்று வினவினாள்.


சோனியின் இயற்கை ஆர்வம் பற்றி அவள் அம்மாவுக்கு நன்றாகத் தெரியும். சோனி அந்த ஊதா மலர்ச் செடியைப் பற்றித் தெரிந்து கொள்ளாமல் நிம்மதி அடைய மாட்டாள் என்று அம்மாவுக்குத் தெரியும்.


அதனால், சோனியுடன் காட்டிற்குள் ஊதா மலர்ச் செடியைப் பார்க்க அவள் அன்னை துணையாக வந்தார்.


சோனி முன் தினம் தான் ஊதா மலர்ச் செடியைப் பார்த்த இடத்தை நினைவில் வைத்து அன்னையை அழைத்துச் சென்றாள்.


வழியில் நிறைய செடி கொடிகள் மழையில் உடைந்து போய் மண்ணில் விழுந்திருந்தது. அவற்றைப் பார்க்கப் பாவமாக இருந்தது சோனிக்கு.


சிறிது நேரம் தேடிப்பார்த்து அந்த ஊதா வண்ண மலர்ச் செடியினைக் கண்டு பிடித்தாள் சோனி.


அவள் பயந்தது போலவே அந்தச் செடி மண்ணில் சாய்ந்திருந்தது. பூவின் தண்டு காற்றில் ஒடிந்து விட்டிருந்தது.


“இந்தச் செடி தான் அம்மா..” என்று கவலையுடன் சொன்னாள் சோனி. சோனியின் கவலையைப் புரிந்து கொண்ட அவள் அம்மா, “வருத்தப்படாத சோனி! மழையில காட்டு செடிகள் இப்படி விழுகிறது இயற்கைத் தான். வெயில் வந்ததும் செடி மீண்டும் துளிர் விட்டுடும். சரியா” என்று சமாதானம் சொன்னார்.


ஆனால், சோனியின் கவலைக் குறையவில்லை.


“இந்தச் செடியை இப்படியே விட்டுட்டுப் போனா அது நாளைக்கு வெயில் பட்டதும் வாடி போயிடும்மா.. பாருங்க இப்போவே அதோட வேர்கள் வெளிய தெரியுது.”


“அப்படியெல்லாம் ஆகாது சோனி”


“அம்மா, இந்தச் செடிய இப்படியே விட்டுட்டுப் போக எனக்கு மனசில்லம்மா… நம்ம வீட்டுக்குக் கொண்டு போய் வச்சு பாதுகாப்பா வளர்த்தலாம்மா”


“அப்படியா சொல்லற? சரி வா நான் உனக்கு உதவி செய்யறேன்” என்று சோனியின் கவலையைப் போக்க எண்ணி அவள் அம்மா ஒத்துக் கொண்டார்


இருவரும், அந்த ஊதா வண்ண மலர்ச் செடியினை வேர் பாதிக்காமல் மண்ணுடன் எடுத்து, வீட்டில் காலியாக இருந்த மண் தொட்டியில் கொண்டு வந்து நட்டனர்.
அத்தோடு அந்தச் செடியைப் பற்றிச் சோனியின் அம்மா மறந்தே போனார்.
ஆனால் சோனி அப்படி இருக்கவில்லை. மண் தொட்டியைப் பத்திரமாக அளவான சூரிய வெளிச்சம் படும் இடத்தில் கொண்டு வைத்தாள்.


மாலை வேளையில் மழை வரத் தொடங்கிவிட, செடியில் அதிகம் தண்ணீர்ச் சேராமல் இருக்கத் தொட்டியினை உள்ளே கொண்டு வந்து வைப்பாள்.
வீட்டிற்குக் கொண்ட வந்த இரு தினம் கழித்து ஊதா மலர் முழுவதுமாக உதிர்ந்து விட்டது. இதைக் காண சோனிக்குக் கவலையாக இருந்தது.


தான் ஒழுங்காகச் செடியைப் பராமரிக்க வில்லையோ என நினைத்தாள்.
“கவலைப் படாதே சோனி. பூவோட தண்டு ஏற்கனவே காற்றில் உடைந்து போயிருந்தது தானே. அதான் பூ உதிர்ந்து போச்சு. ஆனா, செடி நல்லா ஆரோக்கியமா இருக்கு பாரு” என்று சமாதானம் செய்தார்.


“நீ இப்போ பார்த்துக்கற மாதிரி செடியை நல்லா கவனிச்சுக்கோ. ஊதா பூ திரும்பவும் பூக்கும் பாரு” என்று உற்சாகப்படுத்தினார்.


சோனி மனம் தளராமல், தன் அன்னையின் சொல் கேட்டுச் சமாதானம் அடைந்தாள்.
சோனியின் பராமரிப்பில் ஊதா வண்ண மலர்ச் செடி செழிப்பாக வளர்ந்தது.
அழகாகச் சிறு அரும்பும் விட்டிருந்தது. அடுத்த தினம் அழகான ஊதா வண்ணத்தில் தங்க நிற காம்புகளுடன் மீண்டும் பூ மலர்ந்திருந்தது.


சோனி மகிழ்ச்சியாகச் செடியை தன் தாயிடமும் தந்தையிடம் காட்டினாள்.
அப்போது தான் சோனியின் தந்தை அந்த ஊதா வண்ண மலரை ஊன்றிக் கவனித்தார். ஊதா வண்ண மலரைக் குறித்து எங்கேயோ படித்த நினைவு அவருக்கு எழுந்தது.
சுற்று சூழல் ஆர்வலரான அவள் தந்தை, மலரைப் புகைப்படம் எடுத்து அதைத் தன் நண்பர் டாக்டர் அலெக்சிற்கு அனுப்பினார். டாக்டர் அலெக்ஸ் ஒரு தாவிரவியலாளர். செடி, கொடிகள், மரங்கள் பற்றி படிப்பவர்.


“என் பொண்ணு சோனி, இந்த ஊதா மலர்ச் செடியை காட்டில் இருந்து கொண்டு வந்து வீட்டில் பத்திரமா பராமரிக்கறா. இந்த மலர்கள் பத்தி எங்கேயோ படிச்ச நினைவு இருக்கு. நீங்க உதவி செய்ய முடியுமா?” என்று வினவினார் சோனியின் தந்தை.
டாக்டர் அலெக்ஸ் வியப்புடன் சோனியின் வீட்டிற்கு வந்தார். அவரைச் சோனியின் பெற்றோர் வரவேற்றனர்.


“நீங்க அனுப்பின மலர்ப் புகைப்படத்தை நான் பார்த்தேன். சோனி அந்தச் செடியைக் காட்டும்மா” என்று கேட்டார் டாக்டர் அலெக்ஸ்.


சோனிக்கும், அவள் பெற்றோருக்கும் வியப்பாக இருந்தது. ஆனாலும் சோனி, டாக்டர் அலெக்ஸிற்குத் தன் ஊதா மலர்ச் செடியினைக் காட்டினாள்.
சிறிது நேரம் செடியின் இலைகள், பூ, தண்டு என்று ஆர்வமாக ஆராய்ந்த டாக்டர் அலெக்ஸ், “சோனி இந்தச் செடி ஒரு அரிய வகையைச் சேர்ந்தது. இதோட பேர் சனடோரா. இந்தச் செடி அறிவியல் பண்புகளைக் கொண்ட ஒரு குறிப்பிடத்தக்கத் தாவரமாகும், இது மருத்துவ ஆராய்ச்சிக்கு ஒரு மதிப்புமிக்கத் தாவரம்.” என்றார்.
“ஆச்சர்யமா இருக்கே அங்கிள். இது சாதாரண செடின்னு நினைச்சு தான் நான் கொண்டு வந்தேன் அங்கிள்”


“நீ ரொம்ப பெரிய நல்லது பண்ணியிருக்கச் சோனி”
“இந்தச் சனடோரா மலர்ச் செடிகள் அழிந்து வரும் தாவிர வகை. அதுவும், இந்தச் செடியை பத்து, பதினைந்து வருஷங்களா நிறைய தாவிரவியலாளர்கள் தேடியிருக்காங்க. இது அழிஞ்சு போச்சுன்னு நினைச்சுட்டு இருந்தோம். அப்படி ஒரு மலர்ச் செடியைத் தான் நீ காப்பாத்தியிருக்க” என்று கூறினார்.
அத்தோடு, செடியைப் பற்றித் தன் தாவிரவியல் ஆராய்ச்சி செய்யும் நண்பர்களுக்குத் தெரிவித்தார்.


அதிசயச் சனடோரா மலர் மீண்டும் கண்டு பிடிக்கப்பட்ட விஷயம் பற்றிச் செய்தி தாளிலும் தொலைக்காட்சியிலும் கூறப்பட்டது.
சனடோரா செடியினை மீண்டும் கண்டு பிடித்து, அதைப் பத்திரமாகப் பராமரித்த சோனியை அனைவரும் பாராட்டினர்.
சோனியின் பள்ளியில் தலைமை ஆசிரியர், மாணவர்கள் உட்பட அனைவரும் வெகுவாகப் பாராட்டினர்.


நிறைய வருடங்கள் கழித்து கண்டுபிடிக்கப்பட்ட சனடோராவை அனைவரும், சோனியின் சனடோரா என்றே பெயர்ச் சூட்டி அழைத்தனர்.
டாக்டர் அலெக்ஸ் அரசாங்கத்தின் அனுமதி பெற்று, சனடோராவை முறையாக ஆராய்ச்சி செய்து, அதன் மருத்துவ பண்புகளை மக்களுக்குப் பயன் படும் படிக்குக் கொண்டு சேர்க்க முடிவு செய்தார்.


சோனி இயற்கை மீதும், செடிகளின் மீதும் கொண்ட ஆர்வம் காரணமாக, அவள் அறியாமலேயே ஒரு அற்புத மலரை அழிவில் இருந்து பாதுகாத்திருந்தாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *