கிறுக்கர் – 16

ஓவியத்தொடர்-16 – கணினி ஓவியம்

ஹாய் குட்டீஸ்…

            இந்த தடவை கணினி ஓவியம் பத்தி கொஞ்சம் பேசலாம்.

            அதென்ன கணினி ஓவியம்? கம்ப்யூட்டருக்கு தமிழ் சொல்தான் கணினி.  அப்போ கணினி ஓவியம் அப்படின்னா கம்ப்யூட்டர்  தனியா வரையுமான்னு கேட்டால்… அப்படி இல்லை, அதிலும் நாம்தான் வரையணும்.

            முதன்முதலில் கம்ப்யூட்டரை பயன்படுத்தும்போது அதில் இருக்கும் மவுஸ் பயன்படுத்த கைவரவேயில்லை. நான் ஒரு பக்கம் இழுத்தால் அந்த மவுஸ் பாயிண்ட், அது ஒரு பக்கம் ஓடுவது போல கபடி ஆடியது.

            அப்புறம் கம்யூட்டர் பயிற்சியாளர்தான் சொன்னார். பெயிண்ட் பிரஷ்னு ஒரு ஆப் இருக்கும். முதலில் அதில் ஏதாவது வரைஞ்சு பாருங்க. கைக்கு மவுஸ் பழகும் என்று. எனக்கு ‘அட’ என்று ஆச்சரியமாக போச்சு. பின்ன என்ன… வரைவதற்கு இப்படி ஒரு வழி இருந்தா சந்தோஷம் வராதா என்ன?

            அப்புறம் இஷ்டப்படி வரைஞ்சு, கலர் கொடுத்து… வேற எதுவும் போகவே மனசில்லாமல் இருந்தேன். அதிலேயே விதவிதமா வரையலாம், தேவையான பிரஷ் பயன்படுத்தலாம், தேவையென்றால் கொடுத்த கலரை மாத்தலாம், ஈசியா எரேஸ் பண்ணலாம்னு அவ்வளவு வசதி.

            அதன் பின் ஃபோட்டோ ஷாப் கத்துக்கிட்டேன். பெயிண்ட் பிரஷ் ஒன்னாம் வகுப்பு என்றால், ஃபோட்டோ ஷாம் காலேஜ். ஆமா… செம்மயா பயன் ஆகும். நாம் நினைத்ததை அப்படியே கொண்டுவரலாம்.

            கணினியில் அதிலேயே வரையணுமா என்றால், அப்படி இல்லை. நான் தாளில் வரைவேன். அதை ஃபோட்டோ எடுத்து கம்யூட்டரில் பதிவேற்றி அப்புறம் கலர் கொடுப்பேன். சின்னச்சின்ன மாறுதல்களை செய்வேன். அப்படியும் பயன்படுத்தலாம்.

            நம்ம குடும்ப உறுப்பினர்கள்,  நம்ம ஃப்ரெண்ட்ஸ் ஃபோட்டோவை வைத்து அழகா க்ரீட்டிங்க்ஸ் ரெடி பண்ணலாம். எழுத்துக்களை வச்சு போஸ்டர் தயாரிக்கலாம். இன்னும் எவ்வளவோ இருக்கு.

            வரைவதற்கு இன்னும் நிறைய ஆப்கள் இருக்கு. அதை எல்லாம் வச்சுக்க வேணாம். தேவைக்கு அப்பப்போ தரவிறக்கி பயன்படுத்திப் பாருங்க.

            இப்போ ஏஐ தொழில்நுட்பத்தில் நாம் வெறுமனே கமெண்ட் கொடுத்தால் போதும். அப்படியே தேவையான படங்களை அந்த ஆப்களே வரைந்து கொடுத்திடும். அந்த அளவுக்கு டேட்டாக்கள் அதிலே இருக்கும். சில சமயம் நாம் சரியா கமெண்ட் கொடுக்கலைன்னா மனிதனுக்கு ரெண்டு தலை நாலு கால்னு வரையும். சரியான காமெடியா இருக்கும். ஜெமினி ஆப் இன்னும் ஒரு படி மேல போய், நாம் கதை விபரம் கொடுத்தால் அது அதற்கேற்ப படங்களை வரைஞ்சு ஒரு காமிக்ஸ் ரெடி பண்ணும்.

            இப்படி வருவதால் ஓவியக்கலை அழிஞ்சுசுடும்னு சொல்லுவாங்க. உண்மையில் இது எல்லாம் ஓவியர்களுக்கு உதவுபவையே.

            நீங்களே பாருங்களேன். ஒரு கட்டடம் வரைய  கணிணி படம் கொடுத்தாலும், அதற்கான விபரங்களை உள்ளீடு செய்பவர் ஒரு தேர்ந்த பொறியாளர்தான். அதில் சமையலறை இப்படி இருக்கணும், முன்னாடி செடிகள் வைக்க இடம் வேணும், புத்தக அலமாரி இங்கே இருக்கணும்னு முடிவு பண்றது நாம்தான்.

            இசை சம்மந்தமா பல கணிணி ஆப்கள் இருக்கு. யார் வேணா இசையமைக்கலாம்

            கதை எழுதக்கூட ஏஐ உதவுது. தகவல் கொடுத்தால் கதை ரெடி.

            ஆனால், மனிதனின் எல்லா உணர்வுகளையும் முழுதாக இசையில், எழுத்தில், ஓவியத்தில் கொண்டுவர மனிதனால்தான் முடியும். யார் வேண்டுமானாலும் செய்யலாம் என்பது தற்காலிக ஆசையில் செய்பவையே. நாளடைவில் போரடிக்கும். முழுதாக அந்த அந்த துறையில் ஆர்வம் இருப்பவர்களே தொடர்ந்து கற்பனையில் பயணிக்க முடியும். அதற்கு உதவி செய்யவே இந்த ஆப்கள்.

            முன்னர் எல்லாம் இயற்கை வண்ணங்களை பயன்படுத்தினாங்க. துணியில் வரைஞ்சாங்க. சில கலர்தான் கிடைச்சது. அப்புறம் செயற்கையான பலவண்ண ஓவிய கலர்கள், கேன்வாஸ், சார்ட், இப்படி கிடைச்சது. தேவையான கலர் காம்பினேஷன் கலந்து பாத்து வரைவாங்க. இப்போ கணிணி அந்த கலர் காம்பினேஷன் குடுத்திடும். விதவிதமா கலர் கொடுத்து தேவையானதை எடுத்து தாளில் வரையவும் முடிவுசெய்யலாம். 

             ரைட்…

            ஒரு தாளில் என்ன வரையலாம் என்று எழுதுங்க. அந்த ஓவியத்தில் என்ன என்ன அப்ஜெக்ட் இருக்கணும், என்ன கலரில் இருக்கணும் இப்படி எல்லாம் எழுதுங்க. உதாரணத்திற்கு ஒரு குருவியும் அதன் கூடும் அப்படின்னா, குருவிகள்… கூடு… அது இருக்கும் கிளை, கிளையில் இலைகள், அப்புறம் பின்னணியில் வானம், மேகம், தூரமா மலை இப்படி எல்லாம் எழுதுங்க. அதற்கு என்ன என்ன கலர் தேவைப்படும்னு பாருங்க.

            கணினி கிடைத்தால் அதில் வரைய உதவும் அப்ளிகேஷன்களில் இதை வரைஞ்சு பாருங்க. கலக்குங்க…

தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *