எல்லாரும் பயத்துடன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே மயில் தன் தோகையை விரித்து நான்கு குழந்தைகளையும் அப்படியே தூக்கித் தன் முதுகில் அமர வைத்துக் கொண்டு மெதுவாக எழுந்து பறக்கத் தொடங்கியது.
“ஐயோ! என் பேரப் பிள்ளைங்க!” என்று சொக்கு தாத்தாவும் மீனுப்பாட்டியும் கதற, நிலாப்பாட்டி சட்டென்று முடிவெடுத்து அப்படியே எம்பிக் குதித்து பறக்கத் தொடங்கிய மயிலின் தோகையைப் பற்றிக் கொண்டார்.
மயில் அவரைக் கீழே தள்ளி விட முயன்றது.
ஆனால் நிலாப்பாட்டி தன் பிடியை விடவேயில்லை.
குழந்தைகள் நால்வருடன் நிலாப்பாட்டியையும் சேர்த்துத் தூக்கிக் கொண்டு அந்த மயில் பறந்தது.
நிலாப்பாட்டி மயிலின் குட்டி குட்டி சிறகுகளை பிய்த்து பிய்த்து கீழே போட குழந்தைகளும் அவ்வாறே செய்தனர்.
“மீனு! இதப் பாரு.. இதப் பாரு!” என்று கூவிக்கொண்டே மயிலின் சிறகுகளை கீழே அவர் வீச, மீனுப்பாட்டிக்கு நிலாப்பாட்டியும் குழந்தைகளும் என்ன செய்கிறார்கள் என்பது புரியவில்லை. ஆனால் சொக்கு தாத்தாவுக்கு நிலாப்பாட்டியின் செய்கை நன்றாகப் புரிந்தது.
“மீனு! வெண்ணிலா நமக்கு மயில் போற பாதைய காட்டறா.. வா! வா!” என்று கூறிக் கொண்டே கீழே விழுந்த சிறகுகளை பொறுக்கியபடி அதன் பின்னால் ஓடினார்.
அவர் பின்னாலேயே மீனுப் பாட்டியும் கிராமத்தினர் சிலரும் ஓடினார்கள்.
மயிலிறகுகள் காற்றில் வெவ்வேறு திசையில் பறந்ததால் சில அடி தூரங்களுக்கு மேல் அவரால் மயில் சென்ற பாதையைக் கணிக்க முடியவில்லை.
“மயிலோட சிறகு காத்துல நாலா பக்கமும் பறந்து போயிடுச்சு மீனு.. இப்ப என்ன செய்யறது.. அந்த மயில் போன பாதைய எப்டி கண்டு பிடிக்கறதுன்னு புரீலயே..” என்று வருத்தம் தோய்ந்த குரலில் கேட்டு திகைத்து நின்றார் சொக்கு தாத்தா.
ஆனால் மீனுப் பாட்டி மயிலின் சிறகுகள் தவிர வேறு ஒன்றையும் நிலாப்பாட்டி கீழே வீசியிருப்பதை கவனித்தார்.
அதுதான் வேர்க்கடலைகள்.
வழி நெடுக வேர்க்கடலைகளை போட்டுக்கொண்டே சென்றிருந்தார் நிலாப்பாட்டி.
“இங்க பாருங்க.. வெண்ணிலா தன் கையில வெச்சிருந்த வேர்கடலைங்கள கீழ வீசியிருக்கா பாருங்க..” என்றார் மீனுப்பாட்டி.
“அட! ஆமாம்.. வா.. வா..” என்றபடியே கீழே விழுந்திருந்த வேர்க்கடலைகளை கவனித்து பொறுக்கிக் கொண்டே அவர்கள் நடந்தனர்.

நடந்து நடந்து களைத்துப் போய் அவர்கள் நிமிர்ந்த போது மலைக் கோயிலுக்கு வந்து சேர்ந்திருந்தனர்.
“என்னங்க.. இது நம்ம மலைக்கோயில்ங்க.. இங்கியா அந்த மயில் நம்ம குழந்தைங்கள தூக்கிட்டு வந்திருக்கு?” என்று கேட்ட மீனுப்பாட்டி மூச்சு வாங்கியபடியே சுற்றிச் சுற்றிப் பார்த்தார்.
அவர்களுடன் ஊர்க்காரர்களும் குழந்தைகளைத் தேடினார்கள்.
“வர்ஷாக்குட்டி! அர்ஜுன்! கிரீஷ்! கிஷோர்!” என்று தன் பேரப் பிள்ளைகளின் பெயரை உரக்கச் சொல்லி அழைத்தபடியே கோயிலின் நாலா பக்கமும் தேடினார்கள்.
அவர்களுக்கு மயில் எங்கு சென்றிருக்கும் என்றும் புரிந்துகொள்ள முடியவில்லை. குழந்தைகளின் குரலும் கேட்கவில்லை.
அப்போது ஒரு இடத்தில் தரையில் நீல நிறமாக இருந்தது தெரிந்தது.
சொக்கு தாத்தா தன் கைகளைப் பார்க்க, அவருடைய கையில் மயிலின் சிறகுகள் ஒட்டியிருந்த இடமெல்லாம் நீல நிறமாக சாயம் ஒட்டியிருந்தது தெரிந்தது.
தரையில் தெரிந்த நீல நிறமும் தன் உள்ளங்கையில் இருந்த நீல நிறமும் ஒன்றே என உறுதி செய்து கொண்டார் தாத்தா.
“இங்க பாருங்க.. இங்க நீல கலர்ல என்னமோ இருக்கு.. என் கையில அந்த மயிலோட சிறகு ஒட்டியிருந்ததால நீல நிறமா மாறியிருக்கு. இந்த தரையில இருக்கற நீலமும் என் கையில இருக்கற நீலமும் ஒண்ணேதான்..” என்றார்.
“ஆமாங்க.. அப்ப அந்த மயில் இங்கதான் எங்கியாவது இருக்கணும்..” என்றார் மீனுப்பாட்டி.
அந்த நீலநிறம் சற்று தள்ளியும் தெரிந்தது.
“அங்க பாருங்க.. அங்கயும் இதே நீலக்கலர் தெரியுது..” என்றார் ஊர்க்காரர் ஒருவர்.
சீரான இடைவெளியில் அடுத்தடுத்து அந்த நீல நிறம் தெரிய அந்த நீலநிறத் தடத்தைப் பின்பற்றி அனைவரும் சென்றனர்.
“இது அந்த ஊமச்சாமியார் இருக்கற குகைக்கு போற வழியாச்சே!” என்றார் சொக்கு தாத்தா.
“அப்ப சாமியார்தான் இதுக்கெல்லாம் காரணமா?” என்று கேட்டார் ஊர்க்காரப் பெரியவர்.
“குகைக்கு போனாதான் தெரியும்..” என்று கூறிய சொக்கு தாத்தா குகையை நோக்கி வேகமாக நடந்தார். அவர் பின்னாலேயே மீனுப் பாட்டியும் ஊர்க்காரர்களும் சென்றனர்.
“நீங்க யாரு? எங்கள எங்க கூட்டிட்டு வந்திருக்கீங்க?” பயம் இருந்தாலும் சற்று துணிச்சலுடனேயே கேட்ட வர்ஷாவைப் பார்த்து அந்த மனிதர் கடகடவென்று சிரித்தார்.
“சிரிக்காம சொல்லுங்க!” என்று மிரட்டினாள் வர்ஷா.
“பரவால்ல! அந்த ஆதிபராசக்தி மாதிரி தைரியமா கேக்கறியே? நானும் உங்க சொக்கு தாத்தா மாதிரி உனக்கு ஒரு தாத்தாதான்.” என்றார் அவர்.
“உங்களப் பாத்தா வில்லன் மாதிரி இல்ல.. அப்றம் எங்கள எதுக்கு இப்டி கடத்திகிட்டு வந்தீங்க?” என்று கேட்டான் அர்ஜுன்.
“கடத்திகிட்டு வந்திருக்கேனா?” என்று கேட்டு மீண்டும் கடகடவென்று சிரித்தார் அவர்.
“பின்ன? எங்க தாத்தா பாட்டி கிட்ட சொல்லாம எங்கள மயில் மேல உக்கார வெச்சி தூக்கிட்டுதானே வந்தீங்க? அப்ப இது கடத்தல்தானே?” என்றான் கிரீஷ்.
“ஹா.. ஹா.. ஹா..” என்று கடகடவென்று சிரித்துக் கொண்டே இருந்தார் அவர்.
“நீங்க பண்றது கொஞ்சமாவது நல்லாயிருக்கா? குழந்தைங்கள வெச்சி என்ன பண்ணப் போறீங்க?” என்று கோபமாகக் கேட்டார் நிலாப்பாட்டி.
“சொல்றேன்.. சொல்றேன்.. சொல்லதானே போறேன்.. அதுக்கு முன்னால இந்த தண்ணிய குடிங்க..” என்று கூறிய அந்தப் பெரியவர் அவர்கள் அனைவரும் குடிப்பதற்கு தண்ணீர் கொடுத்தார்.
குழந்தைகள் அனைவரும் அதைக் குடிக்க நிலாப்பாட்டி மட்டும் அதைக் குடிக்காமல் குடிப்பது போல பாசாங்கு செய்தார்.
அந்தத் தண்ணீரைக் குடித்த சில நிமிடங்களில் குழந்தைகள் நால்வரும் ஆழ்ந்த உறக்கத்துக்குச் செல்ல நிலாப்பாட்டியும் தூங்குவது போல பாசாங்கு செய்து தன் கண்களை மூடிக் கொண்டார்.
அனைவரும் உறங்கிப் போனதைக் கண்ட அந்தப் பெரியவர் மீண்டும், “ஹா.. ஹா.. ஹா..” என்று வாய் விட்டு கடகடவென்று சிரித்தார்.
அவருடைய சிரிப்பொலியில் அந்த இடமே கிடுகிடுத்தது.
– தொடரும்….
– அன்னபூரணி தண்டபாணி
