விபுவின் அம்மா புலம்பிய வண்ணம் இருந்தாள். ‘ எலி தொந்தரவு ரொம்ப அதிகமாகி விட்டது. ஏதேனும் ஒரு ஏற்பாடு செய்யத் தான் வேண்டும். நேற்று துணி அலமாரிக்குள் போக இருந்தது. துணிகளை கடித்து, தூள் தூளாக குதறி போட்டிருக்கும் நல்லவேளை; நான் பார்த்தேன். ஓடிச் சென்று அலமாரியின் கதவை சார்த்தினேன்.’ என்று சொன்னதும், அப்பா அன்று ஒரு எலிப்பொறி வாங்கி வந்தார்.
அப்பா எலிப் பொறியின் தொங்கிக் கொண்டிருந்த கொக்கியில், வாங்கி வந்த மசால் வடையை மாட்டி, எலி எப்போதும் சுற்றிவரும் சமையலறை அலமாரிக்குப் பின் வைத்த பின், மூவரும் மின் விளக்கை நிறுத்தி விட்டு வந்து கட்டிலில் படுத்தனர்.
விபு’ என்னம்மா ஆகும்?’ அம்மாவிடம்‌ கேட்டான். ‘எலி மசால் வடை வாசனைக்கு , ஆசையாய் தின்னலாம்; என்று பொறியின் உள்ளே வந்து கொக்கியில் தொங்கும் வடையை இழுத்தவுடன், பொறியின் கதவு மூடிக் கொள்ளும். எலி வெளியே போகமுடியாமல், உள்ளேயே அடைபட்டுக் கிடக்கும்’ என்றாள்.

படம் – அப்பு சிவா


‘எலி பாவம் தானே; அம்மா!’ என்று விபு கேட்க; ‘ நமக்குத் தொந்தரவா இருக்கே; அது பரவாயில்லையா;’ என்று அம்மா கேட்க; அவனால் பதில் சொல்ல இயலவில்லை.
அன்று இரவு முழுவதும் விபுவுக்கு எலி பற்றிய கனவுகள் தான் வந்தது. காலையில் அவனை அழைத்த அம்மா, ‘பாருடா ! எலி சிக்கிடுச்சு’ என்று எலிப் பொறியைக் காட்டினாள். எலி பயத்தில் ‘வீச் வீச்’ என்று கத்திக் கொண்டு பொறிக்குள்ளேயே அங்கும், இங்கும் ஓடி, தப்பிக்க ஏதேனும் வழி இருக்கா; என்று பார்த்தது. விபுவுக்கு எலியைப் பார்க்க பாவமாய் இருந்தது.
‘அம்மா இப்ப என்ன செய்வீங்க?’ என்று கேட்டதற்கு, அங்கு வந்த செய்தி நாள் போடும் கோபி, ‘பக்கட் தண்ணிர் கொண்டாங்க அம்மா! அதில் மூழ்கும்படி அமுக்கினால்; அம்புட்டுத்தான். நேராக சிவலோகம் தான் என்றான் சிரித்துக் கொண்டே‌.
‘வேண்டாம்! அந்த பாவம் செய்ய வேண்டாம். ஒரு உயிரைக் கொன்ற பாவம் நமக்கு எதற்கு! ஒரு காரியம் பண்ணுடா. இதை சாக்கு பையில் போட்டுத் தருகிறேன். ஊர் கோடியில் இருக்கும், சோளக்காட்டுபக்கம் கொண்டு போய் வெளியே விட்டு விடு’ என்றபடி உர உப்பு சாக்கில் எலிப் பொறியை வைத்துக் கொடுத்தாள்.
‘ஏம்மா? கோபியண்ணன் சொல்வது போல் செய்யலாமே! நமக்கு எத்தனை பயத்தையும், தொந்தரவையும் கொடுத்தது,’ என்றான்.
‘அப்படி நினைக்காதே! அது நமக்கு தொந்தரவு கொடுத்தது என்பதால் தான் நம் வீட்டிலிருந்து அதை வெளியேற்றுகிறோம். ஒரு உயிரைக் கொல்வதற்கு நமக்கு எந்த உரிமையும் இல்லை. ‘வாழு வாழ விடு’ இது தான் நாம் செய்ய வேண்டியது.’ என்று சொன்னதும் விபுவும் அம்மா சொல்வதில் உள்ள நியாயத்தைப் புரிந்து கொண்டு தலையை ஆட்டினான்.

– சசிகலா விஸ்வநாதன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *