பட்டு ரகசியம் – சீனப் பேரரசின் கதை

முன்னொரு காலத்தில் சீனா நாட்டை “மஞ்சள் பேரரசர்” என்று அழைக்கப்பட்ட ஹுவாங்டி (Huangdi) ஆட்சி செய்தார். அந்த நாடு பசுமையான வயல்கள், நீளமான நதிகள், உயர்ந்த மலைகள் கொண்ட அழகான இடம். மஞ்சள் அரசரின் ஆட்சியில் சீன மக்கள் அரிசி, கோதுமை போன்றவற்றை பயிரிட்டு விவசாயம் செய்து வாழ்ந்தார்கள்.

ஹுவாங்டி அரசரின் மனைவியின் பெயர் “லேஇஸு” (Leizu). சிலர் அவரை “சீ லிங் ஷி” என்றும் அழைத்தார்கள். ராணி லேஇஸுவிற்கு தனது அரண்மனைத் தோட்டத்தில் அமர்ந்து பொழுது போக்குவது மிகவும் பிடித்தமான ஒன்றாகும்.

ஒரு நாள், லேஇஸு அரண்மனை தோட்டத்தில் தன் தோழிகளுடன் அமர்ந்திருந்தார். அவர் அமர்ந்திருந்த இடத்தில் பல மல்பெரி(Mulberry) மரங்கள் இருந்தன. லேசான இனிமையான மாலைக்காற்று வீசிக்கொண்டிருக்க ராணி லேஇஸுக்கு தேநீர் அருந்த வேண்டும் என்ற ஆசை எழுந்தது.

தன் சேவகனை அழைத்து, “ கோப்பையில் சூடான தேநீர் கொண்டு வா” என்று கட்டளை இட்டார். அந்த காலத்தில் தேநீரில் பால் கலந்து அருந்தும் பழக்கம் இருக்கவில்லை. சூடான நீரில் தேயிலை இட்டு, கொதித்தபின் வடிகட்டி மக்கள் பருகுவது வழக்கம்.

ராணியின் சேவகன் உடனே அரண்மனைக்குள் சென்று சூடான தேநீரை கோப்பையில் ஊற்றி எடுத்து வந்தான்.

ராணி தேநீர் கோப்பையை அருகில் இருந்த அலங்கார மேஜையின் மீது வைத்து நகர்ந்து நின்றுவிட்டான். ராணி லேஇஸு தன் கோப்பையை எடுக்கும் சமயம், ராணியின் தோழி ராணியிடம் நாட்டில் அன்று நடைபெற்ற சுவாரசியமான கதை ஒன்றை சொல்லத் துவங்கியிருந்தாள்.

தோழியின் கதையில் லயித்துப் போன ராணி லேஇஸு, தனது தேநீர் கோப்பையை மேஜையின் மீது வைத்து விட்டு தோழியின் கதையைக் கேட்கத் துவங்கியிருந்தார்.

ராணி லேஇஸு அமர்ந்திருந்த இடத்தில் ஒரு பெரிய மல்பெரி மரம் நிறைய கிளைகளுடன் செழிப்பாக வளர்ந்திருந்தது. மரத்தில் இருந்த புழு ஒன்றின் கூடு ராணி வைத்திருந்த சூடான தேநீர் நிறைந்த கோப்பையில் விழுந்திருந்தது.

தன் தோழியின் கதையை சுவாரசியமாக கேட்டுக் கொண்டிருந்த ராணி லேஇஸு தன் கோப்பையில் விழுந்த புழுவின் கூட்டைக் கவனிக்கவில்லை. சிறிது நேரம் கழித்து ராணி தன் தேநீரைப் பருக கோப்பையை எடுத்தவர், “ ஐயோ என்ன இது” என்று பலமாகக் கத்தினார்.

ராணியின் சத்தம் கேட்டு பயந்து போன சேவகன் “என்ன ஆயிற்று ராணி?” என்று கேட்டுக் கொண்டே அருகில் வந்திருந்தான்.

“தேநீர் கொண்டு வரும் போது கவனிக்க மாட்டாயா??? கோப்பையில் என்னவோ மிதக்கிறது பார்!” என்று சத்தம் போட்டார்.

“மன்னிக்கவும் ராணி! நான் கோப்பையைக் கொண்டு வரும் போதும் நன்றாகத்தான் இருந்தது. இங்கே மரத்தடியில் வைத்திருந்ததால் மரத்தில் இருந்து புழுவின் கூடு விரிந்திருக்கிறது போலும். இதோ வேறு கோப்பை கொண்டு வருகிறேன்” என்று சொல்லிய படியே கோப்பையை எடுக்க விரைந்தான் சேவகன்.

அப்போது தான் ராணி தன் தேநீர் கோப்பையை நன்றாக ஊன்றி கவனித்தார். கோப்பையில் மிதந்த வெண்ணிற கூட்டில் இருந்து மெல்லிய நூல் ஒன்று பிரிந்திருந்தது.

“என்ன இது??” என்று அந்த நூலின் ஒரு முனையைப் பற்றை கோப்பையில் இருந்து மெல்ல இழுத்தார் ராணி. இழுக்க இழுக்க தேநீர் கோப்பையில் இருந்த கூட்டில் இருந்து நூல் போன்று நீளமாக வெளிப்பட்டது.

ராணிக்கு ஒரே ஆச்சர்யம். தன் தோழிகளை அழைத்து காட்டினார். “இதோ மரத்தில் மீதிருந்து விழுந்த புழுவின் கூட்டில் இருந்து நூல் வருகிறது” என்று வியப்புடன் கூறினார்.

“இந்த நூல் பார்க்க பளபளப்பாக உள்ளதே” என்று ஆச்சரியப்பட்ட ராணி லேஇஸு, தன் சேவகனை அருகே அழைத்தார்.

“ உடனடியாக பெரிய பாத்திரம் ஒன்றில் சூடான வெந்நீர் கொண்டு வா” என்று கட்டளையிட்டார். மற்றொரு சேவகனை அழைத்து,
“இந்த மல்பெரி மரத்தின் மீது ஏறி இதே போன்று இருக்கும் புழுவின் கூடுகளை சேகரித்து எடு “ என்று ஆணையிட்டார்.

சிறிது நேரத்தில் சூடான தண்ணீர் கொண்ட பாத்திரத்தில் மரத்தில் இருந்து எடுத்த மல்பெரி புழுவின் கூடுகளை உள்ளே போட்டு கவனமாக ஆராய்ந்தார் ராணி லேஇஸு.

அவர் எதிர்பார்த்தது போலவே, கூடுகளை வெந்நீரில் இட்ட சிறிது நேரத்தில் கூட்டில் இருந்து வெள்ளை வண்ணத்தில் நூல் தனியாக பிரிந்து வந்தது. அதிலும் ஒரு கூட்டில் இருந்தே பல மீட்டர் நீளமான நூல் கிடைத்தது!

“இந்த நூல் மென்மையாக இருப்பதோடு உறுதியாகவும் இருக்கிறதே “ என்று வியந்த ராணி லேஇஸு, “இதைக் கொண்டு துணி நெய்தல் என்ன?” என்று சிந்தித்தார்.

ராணி லேஇஸுவின் யோசனைப்படி அந்த நூல்களை ஒன்றாக சேர்த்து, நூற்பாவை பயன்படுத்தி நெய்தார்கள்.

சில நாட்களில் அவர்கள் ஒரு சிறிய துணியை தயாரித்தார்கள். அது மிகவும் மென்மையானதாக இருந்ததோடு சூரிய ஒளியில் மின்னவும் செய்தது. .
அந்த துணியை பார்த்த அரசர் ஹுவாங்டி பேரரசர் மிகவும் மகிழ்ந்தார். “இது நமது பேரரசின் பெருமை ஆகும்!” என்றார் கூறி ராணி லேஇஸு வை பெரிதும் பாராட்டினார்.
இவ்வாறாக சீனர்கள் “செரிகல்சர்” (Sericulture) என்று அழைக்கப்படும் பட்டுப்பூச்சி வளர்ப்பு முறையைத் துவங்கினார்கள். முல்பெரி மரங்களை அதிகமாக வளர்த்தார்கள். பட்டுப்பூச்சிகளை கவனமாக பராமரித்தார்கள். புழுவின் கூடுகளை சேகரித்து, நூலை எடுத்து, அழகான பட்டுத் துணிகளை நெய்தார்கள்.

ஆரம்பத்தில் பட்டாடைகள் அரச குடும்பத்தினர் மட்டுமே அணியும் ஆடையாக இருந்தது. பட்டு சீன பேரரசின் ரகசியமாக பாதுகாக்கப்பட்டது.
சீனர்கள் பல நூற்றாண்டுகள் வரை இந்த ரகசியத்தை மற்ற நாடுகளுக்கு தெரிவிக்காமல் மிகவும் ரகசியமாக வைத்திருந்தனர். யாராவது பட்டு நூலை வெளியே கொண்டு செல்ல முயன்றால், கடுமையான தண்டனைகள் வழங்கப்படும். அதனால் பல ஆண்டுகள் உலகில் பட்டு தயாரிக்கும் ரகசியம் சீனாவுக்கே மட்டும் தெரிந்தது.

பின்னர் “பட்டு பாதை” (Silk Road) என்ற வர்த்தக பாதை உருவானது. அது சீனாவை இந்தியா, மத்திய ஆசியா, ரோமப் பேரரசு போன்ற நாடுகளுடன் இணைத்தது. அந்த வழியாக சீன பட்டு உலகம் முழுவதும் சென்றது. மக்கள் அதைப் பார்த்து ஆச்சரியப்பட்டார்கள். “இவ்வளவு மென்மையான துணி எப்படி தயாரிக்கப்படுகிறது?” என்று அனைவரும் வியந்தார்கள்.
வரலாற்று குறிப்புகளின்படி, சில சீனர்கள் பட்டுப்பூச்சி முட்டைகளை ரகசியமாக வெளியே கொண்டு சென்றார்கள் என்று கூறப்படுகிறது. அதன்பின் பிற நாடுகளிலும் பட்டுத் தொழில் ஆரம்பமானது.

ராணி லேஇஸு, சீனா பட்டின் தேவதை என்று அடைக்கப்படுகிறார்.

இந்தக் கதை நமக்கு என்ன சொல்லுகிறது?
சில நேரங்களில் ஒரு சிறிய விஷயம் உலகையே மாற்றக்கூடிய கண்டுபிடிப்பாக மாறலாம். ராணி லேஇஸுவின் ஆர்வமும் சுற்றத்தை ஊன்றி கவனிக்கும் திறனும் இல்லையென்றால், இன்று நாம் பட்டு துணியை அறிந்திருக்க மாட்டோம்.

ஆகவே குழந்தைகளே, எப்போதும் சுற்றியுள்ள இயற்கையை கவனியுங்கள். கேள்விகள் கேளுங்கள். ஆர்வமாக இருங்கள். ஏனெனில் அடுத்த பெரிய கண்டுபிடிப்பு உங்களுடையதாகக் கூட இருக்கலாம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *