மல்லிகைத் தோட்டத்தின் மர்மம் – 6

சொக்கு தாத்தாவும் மீனுப்பாட்டியும் ஊர்க்காரர்களும் மலைக் கோயிலின் அருகில் இருந்த ஊமைச் சாமியாரின் குகைக்குள் வேகமாகச் சென்றார்கள்.

    அந்தக் குகை மிகவும் பெரியதாக இருந்தாலும் ஆங்காங்கே பாறைகளின் முனை பெரிது பெரிதாக துருத்திக் கொண்டிருந்ததால் பல இடுக்குகள் உருவாகி அவை தனித் தனி அறைகள் போல காணப்பட்டது. வெளிச்சமே இல்லாமல் இருட்டாக இருந்தது.

    வெயில் வெளிச்சமில்லாமல் வெளிக்காற்று வருவதற்கு வழியே இல்லாததால் குகைக்குள் துர்நாற்றம் வீசியது.

    அந்தக் குகைக்குள் இதுவரை சொக்கு தாத்தாவோ மீனுப்பாட்டியோ ஊர்க்காரர்களோ எவரும் போனதேயில்லை.

    “வர்ஷாக்குட்டி! அர்ஜுன்! கிரீஷ்! கிஷோர்!” என்று தன் பேரப் பிள்ளைகளின் பெயரைச் சொல்லி பயத்துடனேயே அழைத்தனர்.

    இவர்களின் சன்னமான குரலே அந்தக் குகைக்குள் பெரிதாக எதிரொலிக்க, திடீரென்று இருட்டிலிருந்து நூற்றுக்கணக்கான வௌால்கள் படபடவென்று பறந்து வந்தன.

    ஊர்க்காரர்கள் அலறியடித்துக் கொண்டு குகை வாயிலைப் பார்த்து ஓட, மீனுப்பாட்டியும் சொக்கு தாத்தாவும் சட்டென்று கீழே குந்திய நிலையில் அமர்ந்து வௌவால்களிடமிருந்து தப்பித்தனர்.

    படம் – அப்பு சிவா

    “அவங்க இங்க இல்ல போலிருக்கு.. இங்க இருந்திருந்தா குழந்தைங்க சத்தத்தில முன்னாடியே இந்த வௌவாலுங்க பறந்து போயிருக்கும்.. இல்லன்னா வௌவாலுங்கள பாத்து பயந்து அவங்க இன்னும் அழுதிட்டிருப்பாங்க. அந்த சத்தம் நமக்கு கேட்டிருக்கும்..” என்றார் சொக்குத் தாத்தா.

    “நீங்க சொல்றதும் சரிதான்.. அப்ப குழந்தைங்க எங்க போயிருப்பாங்க?” என்று கலங்கிய குரலில் கேட்டார் மீனுப்பாட்டி.

    “இந்த குகைக்குள்ள இல்ல.. ஆனா இங்கதான் எங்கியோ இருக்கணும். வா! வெளிய போய் பாக்கலாம்..” என்று கூறி பாட்டியை மெதுவாக அழைத்துக் கொண்டு வெளியே வந்தார் சொக்கு தாத்தா.

    அதற்குள் வெளியே ஓடியிருந்த ஊர்க்காரர்கள் குகையின் இடப்பக்கத்திலிருந்த பாறைக்கருகில் அதே நீல வண்ணத்தை கண்டுவிட்டு அதை சொக்குத் தாத்தாவிடம் கூறுவதற்காக ஓடி வந்தனர்.

    “அந்தப் பக்கத்தில இருக்கற பாறையில அதே நீலக் கலர் கறை தெரியிது சொக்கலிங்கம்.. வா!” என்று அழைத்தார் சொக்கு தாத்தாவின் வயதொத்த பெரியவரான சிதம்பரம்.

    சொக்கு தாத்தாவும் மீனுப் பாட்டியும் அவர்கள் காட்டிய திசையில் ஓடிச் சென்று பார்த்தனர்.

    அந்தப் பாறைக்கருகில் சற்று தூரத்தில் மீண்டும் அந்த நீல நிறக் கறை தொடர்ந்து சென்றது.

    அந்தக் கறையைத் தொடர்ந்து அவர்கள் சென்று பார்க்க அந்தப் பக்கத்தில் ஒரு சிறிய குகை ஒன்று இருந்தது தெரிந்தது.

    “ஹே! இங்க பாருங்க! இந்த பக்கத்தில ஒரு சின்ன குகை இருக்குது.. இங்க இப்டி ஒரு குகை இருக்குன்னு நமக்கு தெரியவே தெரியல பாருங்களேன்..” என்றபடியே சிதம்பரம் அந்தக் குகையை எட்டிப் பார்த்தார்.

    அது முன்னால் பார்த்த குகையை விட சிறியதாக இருந்தாலும் சுத்தமாகவும் வெளிச்சமாகவும் காற்றோட்டமாகவும் இருந்தது.

    இந்தச் சிறிய குகையிலும் பாறையின் முனைகள் சில இடங்களில் துருத்திக் கொண்டு சிறு சிறு தடுப்புகள் போனற அமைப்பினை உருவாக்கியிருந்தன.

    அப்படி ஒரு பாறைத் தடுப்பில் ஒரு மனிதர் படுத்துக் கொண்டிருப்பது போல அவருடைய கால்கள் மட்டும் தெரிய சிதம்பரம் அந்தப் பாறைத் தடுப்பின் அருகில் ஓடினார்.

    அங்கே ஊமைச் சாமியார் வாயில் துணி அடைக்கப்பட்டும் கைகள் இரண்டும் கட்டப்பட்டும் மயங்கிய நிலையில் கிடப்பதைக் கண்டு அதிர்ந்து போனார்.

    “சொக்கலிங்கம்! இங்க பாரு! ஊமச்சாமியார யாரோ கெட்டி போட்டிருக்காங்க!” என்று அலறிக் கொண்டே அவரருகில் ஓடிச் சென்று அவருடைய வாயில் திணிக்கப்பட்டிருந்த துணியை அகற்றி அவருடைய கட்டப்பட்டிருந்த கைகளை கட்டவிழ்த்தார்.

    “சாமி! சாமி! உங்களுக்கு என்னாச்சு? யார் உங்கள இப்டி கெட்டி போட்டாங்க!” என்று கேட்டு அவருடைய கன்னங்களில் லேசாகத் தட்டி அவரை எழுப்பவும் முயன்றார் சிதம்பரம்.

    காவியுடையணிந்திருந்த அந்த ஊமைச் சாமியார் மெதுவாகக் கண் விழித்து அனைவரையும் பார்த்து மலங்க மலங்க விழித்தார். அவரால் எதையும் அவர்களுக்கு விளக்க முடியவில்லை.

    “இவரே ஊமை! இவரால என்னாச்சுன்னு எப்டி சொல்ல முடியும்?” என்று வருந்திய குரலில் கூறிய மீனுப் பாட்டி,

    “ஐயோ! என் பேரக் குழந்தைங்க எங்க இருக்காங்களோ! எப்டி இருக்காங்களோ! தெரீலயே! முருகா! என் குழந்தைங்கள காப்பாத்துப்பா!” என்று வாய்விட்டு அழுது புலம்பத் தொடங்கினார்.

    ஊமைச் சாமியார் மீனுப் பாட்டியைப் பார்த்து ஏதோ சொல்லத் தொடங்கினார்.

    ஆனால் அவர் சொல்வது என்னவென்று யாருக்கும் புரியவில்லை.

    “என்ன சாமி சொல்றீங்க? எங்களுக்கு ஒண்ணும் புரீலயே!” என்றார் சொக்கு தாத்தா.

    அவர் அவசரமாகத் தன் இடுப்பிலிருந்த சுருக்குப் பையில் கைவிட்டார். அது விபூதிப் பை! அந்தப் பையில் கைவிட்டு தரையில் எதையோ வரைந்தார்.

    அது ஏதோ குறியீடு போல இருந்தது.

    “சொக்கலிங்கம்! சாமி எதையோ வரையிறாரு..” என்றார் சிதம்பரம்.

    சொக்கு தாத்தா அவர் வரைந்த குறியீட்டை கவனமாகப் பார்த்தார்.

    அது கோயிலைக் குறிக்கும் குறியீடு போல இருந்தது.

    “கோயிலா சாமி?”

    “மலைக் கோயிலா?” என்று கேட்டனர்.

    ஆமாம் என்பது போல தலையாட்டினார் அவர்.

    “நாம இப்ப மலைக்கோயில் கிட்ட தானே இருக்கோம்!” என்று மீனுப் பாட்டி கேட்க, ஊமைச் சாமியார் எழுந்து குகைக்கு வெளியே ஓட மற்றவர்களும் அவர் பின்னால் ஓடினார்கள்.

    அவர் குகைக்கு வெளியே ஓடிப்போய் மலைக்கோயில் கோபுரத்தைக் காட்ட, கோயில் கோபுரத்தின் மேலே ஒரு மயில் இருந்தது.

    அந்த மயிலைக் காட்டி எதையோ சொல்ல முயன்றார் ஊமைச் சாமியார்.

    அந்த நேரத்தில் எல்லாரும் கலவரத்துடன் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அந்த மயில் வேகமாகப் பறந்து வந்து ஊமைச் சாமியாரை தூக்கிக் கொண்டு அங்கிருந்து பறந்தது.

    சொக்குத் தாத்தாவும் மீனுப் பாட்டியும் ஊர்க்காரர்களும் அதிர்ந்து அலறினார்கள்.

    – தொடரும்….

    – அன்னபூரணி தண்டபாணி

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *