தமிழரசி, சுட்டிப் பெண். யூகேஜி படிக்கிறாள். அவளுடைய அம்மா இல்லத்தரசி. அப்பா மளிகைக் கடை வைத்திருக்கிறார்.
தமிழரசி, கொரோனா பெருந் தொற்று காரணமாக இந்த வருடம்தான் முதல் முதலாக நேரடியாக பள்ளிக்கூடம் செல்கிறாள்.
“ம்மா! ம்மா!” என்று கூவிக் கொண்டே அவளுடைய அப்பாவுடன் ஓடி வந்தாள்.
“தமிழு! டாட்டா! அப்பா வேலைக்கு போறேன்! அம்மா கூட சமத்தா இருங்க!” என்று அவளிடம் சொல்லிவிட்டு மனைவியைப் பார்த்து தலையசைத்து விடைபெற்றுக் கொண்டு கிளம்பிவிட்டார்.
“டாட்டா ப்பா!” என்று தமிழரசியும் தன் அப்பாவுக்கு சமத்தாக டாட்டா காட்டிவிட்டு அம்மாவுடன் வீட்டுக்குள் வந்தாள்.
“என்னடீ செல்லம்? இன்னிக்கு ஸ்கூல்ல என்ன சொல்லி குடுத்தாங்க?” என்று கேட்டபடி அவளை கட்டிக் கொண்டு உச்சி முகர்ந்தாள் அம்மா.
“ம்மா! இன்னிக்கு என்னாச்சு தெரியுமா?” என்று அன்றைய கதையை ஆரம்பித்தாள் தமிழரசி.
அவள் சொல்லச் சொல்ல “ம்.. ம்..” என்று சொல்லிக் கொண்டே அவளுடைய பள்ளிச் சீருடையைக் களைந்து அவளை முகம் கழுவ வைத்து வேறு உடையை அணிவித்து சிற்றுண்டி எடுத்து வந்து ஊட்டி விடத் தொடங்கினாள் அம்மா.
“நானு பார்த்திபன் மஞ்சரி எல்லாம் புது ஃப்ரண்ட்ஸ்!”
“ஓ! புது ஃப்ரண்ட்ஸ் கிடைச்சிருக்காங்களா? வெரி குட்!”
“லஞ்ச் சாப்பிடறச்சே பார்த்திபன் சட்டையில சிந்திகிட்டான்.. அவங்கம்மா அடிப்பாங்கன்னு ஒரே அழுக.. அப்றம் ஆயா ஆன்டி வந்து அவன் சட்டைய கயட்டி வாஷ் பண்ணிவிட்டாங்க.. அது வரைக்கும் அவன் வேற சட்ட போட்டுகிட்டான்.”
“அப்டியா?”
“ஆமாம்மா..”
பேசியபடி சிற்றுண்டி ஊட்டி முடித்தாள் அம்மா.
அப்போது சமையலறையில் காய்கறிக் கூடையில் மஞ்சள் நிறத்தில் ஒரு பெரிய பழத்தைக் கண்டாள் தமிழரசி.
“ஹை! அம்மா! மாம்பழம் வாங்கிருக்கீங்களா?” என்று ஆவலாகக் கேட்டாள் தமிழரசி.
“அது மாம்பழம் இல்லடா செல்லம்! அதுக்கு பேர் பப்பாளி பழம்! எங்க சொல்லு? பப்பாளி!” என்றாள் அம்மா.
“பப்பாளி!” என்று தமிழரசியும் அழகாக திருப்பிச் சொன்னாள்.
“இதும் மாம்பழம் மாதிரியே ஸ்வீட்டா இருக்குமா ம்மா?”
“ஆமாடா!”
“இது நறுக்கி தாங்கம்மா!”
“இப்பதானே டிபன் சாப்பிட்ட.. கொஞ்ச நேரம் கழிச்சி இத நறுக்கி தரேன்! சரியா?” என்று அம்மா சொல்ல, தமிழரசியும் சரியென்று தலையாட்டினாள்.
தமிழரசிக்கு மாம்பழம் என்றால் ரொம்ப பிடிக்கும். அதுவும் மாம்பழத்தின் கொட்டைப் பகுதி ரொம்ப ரொம்ப பிடிக்கும்.
மாம்பழம் போலவே தோற்றம் கொண்ட பப்பாளி என்ற பெயர் கொண்ட இந்த பெரிய பழத்தைப் பார்த்ததும் அவளுக்கு மிகவும் பிடித்துவிட்டது.
இந்தப் பெரிய பழத்தின் கொட்டையும் சுவையாக இருக்கும்; நிறைய சாப்பிடலாம் என்று நினைத்துக் கொண்டு ஆவலாகக் காத்திருந்தாள்.
அவளுடைய அம்மா தமிழரசியை வீட்டுப் பாடம் எழுத வைத்துக் கொண்டே தன் வேலைகளை கவனித்தாள்.
“அம்மா! அந்த பழம் நறுக்கி குடுங்க!”
“நீ ஹோம் வொர்க் முடி.. அதுக்குள்ள அப்பா வந்துடுவாங்க.. அவரு வந்ததும் தரேன்!” என்றாள் அம்மா.
பழம் சாப்பிடும் ஆசையில் தமிழரசியும் வீட்டுப் பாடத்தை வேக வேகமாக எழுதி முடித்தாள்.
“நோட் புக்ஸ் எல்லாம் பேக்ல எடுத்து பத்திரமா வெச்சிட்டு வா!” அம்மா சொல்ல தமிழரசியும் தன் நோட்டுப் புத்தகங்களை எல்லாம் தன் பையில் அழகாக அடுக்கி வைத்து விட்டு ஓடி வந்தாள்.
“ம்.. அந்த பழம் நறுக்கி தாங்க!” என்று மீண்டும் கேட்டாள்.
“அப்பா வருவாருடா.. வந்ததும்..” என்று அம்மா சொல்லிக் கொண்டிருக்கும்போதே அவளுடைய அப்பா வீட்டுக்கு வந்தார்.
“ம்.. சரி! வா!” என்று அம்மாவும் பப்பாளிப் பழம், கத்தி, பெரிய தட்டு சிறிய கிண்ணம் என தேவையான எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு வந்தாள்.
“ம்மா! இந்த பழத்தோட கொட்டைய எனக்கே குடுங்க?!” என்று தமிழரசி சொன்னதைக் கேட்டதும் அம்மாவும் அப்பாவும் பக்கென்று சிரித்தார்கள்.
இருவரும் கடகடவென்று சிரிப்பதைப் பார்த்த தமிழரசிக்கு ஒன்றுமே புரியவில்லை!
“ஏம்மா சிரிக்கறீங்க?” என்று மெல்லிய குரலில் கேட்டாள் தமிழரசி.
“என் செல்ல குட்டி! பப்பாளி பழத்தோட கொட்டை மாம்பழக் கொட்டை மாதிரி இருக்காதுடா செல்லம்..” என்று அப்பா சொல்ல தமிழரசி குழம்பினாள்.
“வா நா காட்டறேன்..” என்று சொல்லி பப்பாளிப் பழத்தை நறுக்கி அதனுள்ளே கருப்பு மிளகு போல குட்டி குட்டியாக இருக்கும் நூற்றுக்கணக்கான கொட்டைகளைக் காட்டினாள் அம்மா.
தமிழரசியும் அம்மா அப்பாவுடன் சேர்ந்து பப்பாளியின் குட்டி குட்டி கொட்டைகளைப் பார்த்து விழுந்து விழுந்து சிரித்தாள்.
♥♥♥♥
நான் ஒரு இல்லத்தரசி. என் மனவுளைச்சலையும் இறுக்கத்தையும் விரட்டும் முயற்சியாக என் எழுத்தார்வத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கும் சராசரிப் பெண். இணையத்தில் சிறுகதைகளும் தொடர்கதைகளும் எழுதி வருகிறேன். இரண்டு தொடர்கதைகள் புத்தகமாக வெளி வந்துள்ளன. தினமலர் வாரமலரில் என் சிறுகதைகள் வெளி வந்துள்ளன. பல இணையதளங்கள் நடத்திய பல சிறுகதைப் போட்டி, கவிதை, கட்டுரை, செய்யுள் எழுதும் போட்டிகளில் பங்கு கொண்டு முதல் பரிசினை வென்றிருக்கிறேன்.