அந்த குட்டி எறும்புக்கு செமயாக போரடிச்சது. பெரிய எறும்புகள் எல்லாம் ரொம்ப பிஸியாக உணவு தேடுவதும், அதை சேர்த்து வைப்பதுமாக இருந்தன. குட்டி எறும்பின் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் இன்று விளையாட வரவில்லை. வேலை செய்யவும் பெரிய எறும்புகள் விடுவதில்லை. இன்னமும் கொஞ்சம் வளரணுமாம்.

            குட்டி எறும்பு அதன் போக்கில் நடந்து போனது. வழியில் கிடைத்த உணவு பொருட்களை கொறித்துக்கொண்டே வேடிக்கை பார்த்தபடி போனது. அதன் கண்கள் திடீரென்று ஆச்சரியத்தில் விரிந்தன. தூரமாய் மணல் திட்டில் அந்த சிவப்பு பூ தெரிந்தது. ஒரு தடவை அப்பா எறும்புடன் போனபோது அப்பா இந்த பூவை பறித்துத் தந்தார். உள்ளே நிறைய்ய தேன். குட்டி எறும்புக்கு அந்த ஞாபகம் வந்தது. உடனே அந்த பூவை பறித்து தேனை குடிக்க வேண்டும் என்று ஆசை ஏற்பட்டது.

            அந்த பூ ஒரு மணல் குன்றின் மேல் இருந்தது. அந்த மணல் குன்றுக்கு போகும் பாதை ஒரு சிறு ஒற்றையடி பாதை போல இருந்தது. அதன் பின் அந்த குன்றை ஒட்டி ஆறு ஓடிக்கொண்டிருந்தது. நேராக ஒற்றையடிப்பாதையில் போய் பூவை பறித்துக்கொண்டு  ஓடிவந்துவிடவேண்டும் என்று எறும்பு நினைத்து நடந்தது.

            மெதுவாக தண்ணீரில் விழாமல் குன்றை அடைந்தது. ஆனால் திடீரென்று காற்று வேகமாக வீச, எறும்பு பயந்து அருகில் இருந்து ஒரு குச்சியை எடுத்து கீழே ஊன்றி நன்றாக நின்றுகொண்டது. ஆனால் காற்றில் அந்த பூ பறந்துபோய்விட்டது. ஏமாந்து, திரும்பலாம் என்று நினைக்கையில் ஒரு அதிர்ச்சி.

ant

            நேற்று பெய்த மழையில் ஊற்றெடுத்து ஆற்றில் அதிக தண்ணீர் வரலாம் என்று பெரியவர்கள் பேசிக்கொண்டது ஞாபகம் வந்தது. அப்படி வந்தால் இந்த குன்றும் மூழ்கி தானும் மூழ்கிவிடுவோம் என பயம் வர, வேகமாக அங்கிருந்து கிளம்ப ஆரம்பிக்க, குட்டி எறும்பு பயந்தபடி தண்ணீர் வேகமாக வர ஆரம்பித்தது. அது வந்த ஒற்றையடி பாதை முழுவதும் மூழ்கிவிட்டது. கொஞ்சம் கொஞ்சமாக அந்த குன்றும் முழுகிக்கொண்டே வந்தது. எறும்புக்கு மனம் முழுதும் பயம் பிடித்துக்கொண்டது.

            பயந்தால் யோசிக்க முடியாது என தீர்மானித்து மெதுவாக கண்களை ஓடவிட்டது. அங்கே ஒரு காய்ந்த இலை கிடந்தது. அதை எடுத்தால் உடைந்து உடைந்து வந்தது. அதை தூக்கிப்போட்டுவிட்டு இன்னமும் தேட, ஒரு மொத்தமான இலை கிடைத்தது. வீட்டில் படகு செய்து விளையாடியது ஞாபகம் வர, அந்த இலையின் முனையில் இன்னொரு இலையை சொருகி, குச்சியை நடுவில் வைத்து படகு போல ஒருவழியாக செய்தது.

            வேகமாக தண்ணீர் வர, அந்த படகுடன் சட்டென்று உயரமாக குதித்து நேராக தண்ணீரில் விழுந்தது,. படகு ஆற்றின் போக்கில் வேகமாக ஓடியது. குச்சியை வைத்து அதன் திசையை திருப்பி திருப்பி ஓட்டியது எறும்பு. ஒரு இடத்தில் வேகம் குறைய, அங்கே அந்த குச்சியை பிடுங்கி துடுப்பு போட்டு கரை ஓரமாக  ஒதுங்கியது.

            அப்பாடா என்று நிம்மதியாக கரையில் ஏறி கொஞ்சம் நேரம் கண்மூடி படுத்தது எறும்பு. நேரமாகிவிட்டது என கண்ணை திறக்க , ஆச்சரியம், அங்கே நிறைய சிவப்பு பூக்கள் இருந்தன. ஆசை தீர பறித்து தேன் குடித்துவிட்டு, அம்மாவுக்கும் அப்பாவுக்கும் சில பூக்களை எடுத்துக்கொண்டு வீடு இருக்கும் திசையில் வேகமாக நடைபோட்டது அந்த தைரியமான குட்டி எறும்பு.

What’s your Reaction?
+1
1
+1
2
+1
1
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
2 கருத்துகள்
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments