ஹாய் குட்டீஸ்…

            எப்படி இருக்கீங்க?

            ஒரு கேள்வி உங்ககிட்ட கேட்கப்போறேன், அதுக்கு உண்மையா சொல்லணும்… ஓகேவா?

            நீங்க எல்லாம் செல் பார்க்கிறது, டிவி பாக்கிறது தவிர புத்தகங்கள் படிக்கிறது உண்டா?

            அதான் தினமும் ஸ்கூலுக்கு பை நிறைய புத்தங்களை எடுத்துப்போறோமே அப்படின்னு சொல்றீங்களா. நான் கேட்டது அது இல்லை. பாடபுத்தகங்களைத் தவிர கதைப்புத்தகங்கள், பொதுவான கட்டுரைப்புத்தகங்கள், அதுபோல தினசரி செய்தித்தாள்கள் இப்படி படிக்கிறது உண்டா?

            உண்டு என்றால் வெரிகுட். இல்லையென்றால் ஒரே ஒரு அழகான அட்வைஸ்… அது போல படிக்கக் கத்துக்குங்க. நாம் வாழும் வாழ்க்கை இன்னும் அழகாக, எல்லோரையும் நேசிக்க, முக்கியமாக நம் வாழ்க்கை அமைதியாக மனிதாபிமானத்துடன், அறிவுடன், தன்னம்பிக்கையுடன் இன்னும் சொல்லணும்னா எதையும் சமாளிக்கும் துணிச்சலுடன் இருக்கவும் கற்பனை திறனை அதிகரிக்கவும் இதுபோல பலவிதமான புத்தகங்களை வாசிப்பதுதான் ஒரே வழி.

            அந்த காலத்தில் அம்புலிமாமா, பாலமித்ரா, ரத்னபாலா, கோகுலம் இப்படி பலவிதமான சிறுவர் புத்தகங்கள் படிக்கக் கிடைக்கும். வீட்டுக்கு பெரியவர்களும் அவர்களுக்கு வாங்கும்போதே சிறுவர்களுக்கும் வாங்கி வருவாங்க. ஆனால் இப்போ எல்லாம் பெரியவர்களும் வாசிப்பது குறைந்துவிட்டது. அதான் நமக்கும் வாங்கி வருவது இல்லை. இப்போதைக்கு அச்சிட்ட புத்தகங்கள் தவிர மின்னிதழ்களும் பெருகிவிட்டதால் வாங்கும் வழக்கம் குறைந்துவிட்டது.

            இருந்தாலும் நூலகம் என்பது நமக்கு ஒரு வாய்ப்பு. இன்னமும் சிறுவர்களுக்கான இதழ்கள் அங்கங்கே வந்துகொண்டுதான் இருக்கு. அரசாங்கமே இப்போ சிறார்களுக்கு என்று மாதாமாதம் புதுப்புது புத்தகங்களை வயதுக்கு ஏற்றார்போல வாசிப்பு இயக்கம் மூலமா அச்சிட்டு நூலகங்களுக்கு  கொண்டு வராங்க. உங்க பெற்றோர்களிடம் வாங்கித்தரச்சொல்லி அடம் பண்ணுங்க. நல்லதுக்கு அடம் பண்ணலாம். அடம் நல்லது.

            படமாக பார்ப்பதைவிட கதையாக படிப்பதால் நாம் அந்த நிகழ்வுகளை அப்படியே கற்பனை பண்ணமுடியும். ஒரே கதையை படிக்கும் சிலர் அதுக்கு அவங்கவங்க இஷ்டப்படி கற்பனை பண்ணுவாங்க. உதாரணமா பாட்டி வடை சுடும் கதை அப்படீன்னா, நான் இனிப்பு வடை, என் அண்ணா மெதுவடை அப்புறம் இன்னொரு ஃப்ரெண்டு போண்டா இப்படி கற்பனை பண்ணுவோம். ஹாஹா…

            புத்தகம் பற்றி பேசி நான் பேச வந்ததையே  மறந்துட்டேன்.

            அந்த கதைப்புத்தகங்களில் கதைகளுக்கு படம் வரைவதை பார்த்திருக்கிறீர்களா. ஒவ்வொரு கதைக்கும் ஒன்று இரண்டு படங்கள் வரைவாங்க. அழகாக பொருந்திப்போகும் அந்தப்படம் கதைக்கு ஒரு துணையாக இருக்கும். ரஷ்யாவில் இருந்து அப்போ எல்லாம் நிறைய சிறுவர் புத்தகங்கள் வரும். அதில் வரும் வண்ணப்படங்கள் நம்மை மீறி கதையை படிக்கத்தூண்டும். அதைப்பார்த்துதான் எனக்கு கலர் படங்கள் வரையணும்னு தோணவே ஆரம்பிச்சது.

            நம்ம ஊரில் சிறுவர் இதழ் தவிர பெரியவர்களுக்கான இதழ்களிலும் கதைகளுக்கு படம் வரைவாங்க. வரைந்து கீழே சின்னதா வரைந்தவர் கையெழுத்து போட்டிருப்பாங்க. ஜெயராஜ், மாருதி, ராமு, மணியம் செல்வன், அரஸ், ஷ்யாம், இப்படி மிகப்பிரபலமான ஓவியர்கள் தமிழ் இதழ்களில் உண்டு.

kirukkar 9 1

            இது ஒரு குறிப்பிட்ட காலத்தின் சின்ன பட்டியல்தான். உங்களுக்கு உதாரணம் சொல்ல எழுதினேன். ஆனால் தமிழின் இதழியலில் இந்த பட்டியல் மிகப்பெரியது.

            இது மிகப்பெரிய சவாலான அதே சமயம் ஜாலியான விஷயம் உதாரணமா நம் பூஞ்சிட்டு இதழுக்கு கதைக்கு படம் வரையறதை சொல்லப்போறேன்.

  1. முதலில் கதையை அனுப்புவாங்க. அதை படிக்கணும். இதழ் வரும் முன்னர் படிக்கும் முதல் வாசகர் நான். ஹிஹி…
  • அடுத்து கதையை படிச்சிட்டு வரும்போதே அதில் ஒரு காட்சி நமக்கு வரையலாம்னு தோணும். அதை குறிச்சு  வைச்சுக்கணும். உதாரணமா ஒரு சிங்கம், முயல், காடு… முயல் தைரியமா நிக்குது, சிங்கம் பயப்படுது அப்படீன்னு ஒரு காட்சி. இதை வரையலாம்னு தோணும்.
  • அடுத்து மாடல் எடுக்கணும். இப்போ கூகிள்ல ஈசியா மாடல் எடுக்கலாம். சிங்கம், முயல் காடு கார்ட்டூன் அப்படீன்னு தேடினா போதும். அதை செல்லில் எடுத்து வச்சுப்பேன்.
  • இப்போ கதையில் சொன்னது போலவும், நம் கற்பனையையும் கலந்து அந்த மாடலை வச்சு படமா வரைவேன். முதலில் பென்சில். அடுத்து ஸ்கெட்ச். அப்புறம் கதையை பொறுத்து வாட்டர் கலர் அல்லது கம்யூட்டரில் ஃபோட்டோஷாப் பயன்படுத்தி கலர் பண்ணுவேன். படம் ரெடி.

நீங்களும் அழகா ஒரு கதை எழுதுங்க. அல்லது உங்க நண்பர்களிடம் கதை எழுதச்சொல்லுங்க. அதுக்கு இதுபோல படமா வரைஞ்சு அசத்துங்க. இன்னொரு வாய்ப்பு. கதைகளுக்கு படம் வரைய ஆசை இருந்தா எனக்கு கமெண்ட்டில் சொல்லுங்க. இதே பூஞ்சிட்டில் அடுத்து வரும் கதைகளுக்கு படம் வரைய உங்களுக்கு ஒரு வாய்ப்பு, அதே சமயம் உங்க அழகான படங்களை பார்த்து ரசிக்க எங்களுக்கும் வாசகர்களுக்கும் ஒரு வாய்ப்பு. எப்படி நம்ம டீல்…

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments