ஐந்தாவது படிக்கும் ராஜிக்கு சைக்கிள் ஓட்டுவது ரொம்ப பிடிக்கும். ஆனால் அவளுக்கென்று தனியாக சைக்கிள் இல்லை. அவளுடைய அண்ணனுக்குதான் சைக்கிள் வாங்கிக் கொடுத்திருக்கிறார் அவளுடைய அப்பா.

“அப்பா! என்னப்பா? எனக்கு சைக்கிள் வாங்காம அண்ணனுக்கு வாங்கிருக்கீங்க?” என்று கேட்டு அவள் அழுதாள்.

“அண்ணன் பள்ளிக்கூடம் போகறதுக்கு சைக்கிள் வேண்டாமா கண்ணு!?” என்றார் அவளுடைய அப்பா.

“அப்ப நா கூடதான் பள்ளிக்கூடம் போறேன்.. எனக்கு மட்டும் சைக்கிள் வேணாமா?” என்று அழுதாள் ராஜி.

“உன்ன அப்பாதானே பள்ளிக்கூடம் கூட்டிட்டு போறாங்க.. அப்றம் உனக்கெதுக்கு சைக்கிள்?” என்று கேட்டு சிரித்தான் அவளுடைய அண்ணன் சேகர்.

“ஹூம்.. எனக்கும் சைக்கிள் வேணும்..” என்று அடம் பிடித்து அழுதாள் ராஜி.

“இங்க பாரு கண்ணு! அண்ணன் எட்டாங்கிளாஸ் போயிட்டான்.. அப்பா சைக்கிள் வாங்கி குடுத்திருக்காரு.. நீயும் எட்டாங்கிளாஸ் போனதும் உனக்கும் சைக்கிள் வாங்கி தருவாரு.. புரியுதா?” என்று அவளுடைய அம்மா அவளை சமாதானம் செய்தாள்.

இப்போது இல்லை என்பதால் வருத்தம்தான் என்றாலும் வருங்காலத்தில் தனக்கும் சைக்கிள் வாங்கித் தருவார்கள் என்ற ஒன்றை நினைத்து ராஜியும் சமாதானம் அடைந்தாள்.

ஆனால் எட்டாங்கிளாஸ் வருவதற்குள் சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொண்டு விட வேண்டுமென்று நினைத்து அவள் தன் அண்ணனின் சைக்கிளை எடுத்து ஓட்டிப் பழகினாள்.

சில நாள் அவளுடைய அண்ணன் அவளுக்கு சைக்கிள் தருவான். ஆனால் பல நாள் அவள் அவனுடைய சைக்கிளை எடுக்கும்போது அவனுக்கு கோபம் வரும்.

cycling girl with grandma
படம்: அப்புசிவா

“ஏய்! நீ பாட்டுக்கு எடுத்து எடுத்து ஓட்டி சைக்கிள நாசம் பண்ணிடற.. இது என் சைக்கிள்.. போடீ!” என்று கோபப்படுவான்.

ஆனால் ராஜியின் காதில் அதெல்லாம் விழாது.

அவள் சைக்கிளை எடுத்துக் கொண்டு போய் ஒரு ரவுண்டு ஓட்டிவிட்டுதான் வீட்டில் கொண்டுவந்து விடுவாள்.

இத்தனைக்கும் அவளுக்கு கொரங்கு பெடல்தான் ஓட்டத் தெரியும்!

தனக்கு சைக்கிள் வாங்கும் முன் எப்படியாவது சரியாக ஓட்டக் கற்றுக்கொண்டுவிட வேண்டுமென்று அவள் ஆசைப்பட்டாள்.

“அண்ணா! நா சீட்டுல உக்காந்து ஓட்டணும்.. கொஞ்சம் வந்து புடிண்ணா.” என்று தன் அண்ணனைக் கெஞ்சுவாள்.

“எனக்கு ரெக்காடு நோட்டு வரைஞ்சி தரணும்.. அப்ப தான் புடிப்பேன்..” என்று அவளுடைய அண்ணன் சேகரும் அவளிடம் பேரம் பேசுவான்.

சைக்கிள் ஓட்டும் ஆவலில் அவளும் சரியென்பாள்.

சேகர் வந்து அவளுக்கு சைக்கிள் பிடிக்க அவளும் சைக்கிளின் இருக்கையில் அமர்ந்து ஓட்ட முற்படுவாள். ஆனால் அவளுக்கு கால் எட்டாது. கால் எட்டினால்தானே பெடல் செய்ய முடியும். பெடல் செய்தால்தானே சைக்கிளை ஓட்ட முடியும்.

“ஏய்! நீ இன்னும் வளரணும்டீ.. அப்பதான் சைக்கிளை சீட்டுல உக்காந்து ஓட்ட முடியும்.. அது வரைக்கும் கொரங்கு பெடல்தான்..” என்று கிண்டல் செய்வான் சேகர்.

அவன் கிண்டல் செய்வதைக் கண்ட மற்ற தெரு பிள்ளைகளும் அவளை கொரங்கு பெடல்! கொரங்கு பெடல்! என்று கிண்டல் செய்யத் தொடங்கினர்.

“அம்மா! பாரும்மா அண்ணன.. கொரங்கு பெடல் கொரங்கு பெடல்ன்னு கிண்டல் பண்றான்.. இவன் கிண்டலடிக்கறப் பாத்து மத்த பிள்ளைங்களும் என்னிய கொரங்கு பெடல்ன்னு கூப்பிடறாங்க..” என்று அழுதாள்.

“டேய்! அவள ஏண்டா வம்பு செய்யற.. கம்முன்னு இருடா..” என்று அவளுடைய அம்மா அவனைக் கண்டித்துவிட்டு,

“சரி.. சரி.. அழாத.. நீயும் வளர்ந்து சீட்டுல உக்காந்து சைக்கிள் ஓட்ட ஆரம்பிச்சுட்டன்னா இதெல்லாம் மறந்தே போயிடும்..” என்று சொல்லி அவளை சமதானம் செய்தாள்.

இப்படியே ஒரு வருடம் ஓடி விட சேகர் ஒன்பதாம் வகுப்புக்கும் ராஜி ஆறாம் வகுப்புக்கும் வந்துவிட்டார்கள். சேகர் நெகுநெகுவென்று உயரமாக வளர்ந்துவிட, ராஜி இன்னும் உயரத்தில் வளராமல் இருந்தாள். அதாவது அவளுடைய உயரம் இன்னும் சைக்கிள் பெடலை எட்டுமளவுக்கு இல்லை. அதனால் இன்னும் அவள் கொரங்கு பெடலில்தான் சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்தாள்.

ஒருநாள் அவள் பள்ளி முடிந்து வந்து அண்ணனின் சைக்கிளை ஓட்டிக் கொண்டிருக்கும் போது தெருவில் நடந்துகொண்டிருக்கும் ஒரு பாட்டி காலில் அடிபட்டுக்கொண்டு கீழே விழுவதைக் கண்டாள்.

உடனே ராஜி சைக்கிளை விட்டு கீழே இறங்கி சைக்கிளை வேகமாகத் தள்ளிக் கொண்டு ஓடி வந்து அந்தப் பாட்டியைப் பார்த்தாள்.

“ஐயியோ! பாட்டி என்னா இவ்ளோ ரத்தம்?”

“ஆ! கல் குத்திருச்சு கண்ணு.. ஆ!” என்று சொல்லிக்கொண்டே அந்தப் பாட்டி தன் அடிபட்ட காலைப் பிடித்துக் கொண்டு வலி பொறுக்க முடியாமல் துடித்தாள். பாட்டியின் காலிலிருந்து ரத்தம் வழிந்தது.

முதலில் என்ன செய்ய வேண்டுமென்று புரியாத ராஜி, சட்டென்று யோசனை வந்தவளாக,

“பாட்டி! சைக்கிள் பின்னால உக்காருங்க.. பக்கத்துலதான் டாக்டர் இருக்காரு.. நா கூட்டிட்டு போறேன்.. வாங்க..”

“வேணாம் கண்ணு.. நா அப்டியே நொண்டிகிட்டு வீட்டுக்கு போயிடுவேன்..” என்று பாட்டி மறுத்தாள்.

“அப்டியே வீட்டுக்கு போனா காயம் எப்டி ஆறும்? மருந்து வச்சி கட்டினா மூணு நாள்ல சரியாகிடும்னு எங்க மிஸ் சொல்லியிருக்காங்க.. வாங்க..” என்று கூறி வற்புறுத்தி அந்தப் பாட்டியை தன் சைக்கிளின் பின்னால் ஏற்றிக் கொண்ட ராஜி,

“கெட்டியா பிடிச்சிக்கோங்க பாட்டி.. தோ! இப்ப போயிடலாம்..” என்று கூறிக் கொண்டே சற்றும் தாமதிக்காமல் கொரங்கு பெடல் அடித்துக்கொண்டு அருகில் இருக்கும் ஆரம்ப சுகாதார மையத்துக்கு பாட்டியை அழைத்துச் சென்றாள்.

அங்கு சென்று பாட்டிக்கு காயம்பட்ட இடத்தில் மருந்து வைத்து கட்டிக் கொண்டு உள்ளுக்குச் சாப்பிட மாத்திரை மருந்துகளும் வாங்கிக் கொண்டு அடுத்த தெருவிலிருக்கும் பாட்டியின் வீட்டில் பாட்டியை கொண்டு போய் விட்டுவிட்டு அதன் பின்னர் வீடு வந்தாள் ராஜி.

அதற்குள் ராஜியைக் காணாமல் அவளுடைய அண்ணனும் பெற்றோரும் பதற்றமடைந்தனர்.

அவள் மிகவும் தாமதமாக  வருவதைக் கண்டதும்,

“எங்கடீ போன? உன்ன எங்கல்லாம் தேடுறது?” என்று கடிந்து கொண்டனர்.

“ஏய்! உண்மைய சொல்லு! சைக்கிள கீழ போட்டியா?” என்று சேகரும் அவளை மிரட்டினான்.

அதற்குள் பாட்டியின் வீட்டிலிருந்து இருவர் ராஜியைத் தேடிக் கொண்டு வந்தனர்.

அவர்கள் நடந்ததை ராஜியின் வீட்டினரிடம் சொல்லிவிட்டு ராஜிக்கு நன்றி கூறிவிட்டுச் சென்றார்கள்.

“அடேங்கப்பா! கொரங்கு பெடலடிச்சிகிட்டே அந்த பாட்டிய ஆசுபத்திரி கூட்டிட்டு போனியா? பரவால்லடீ! நீ கிரேட்தான்!” என்று சேகர் தன் தங்கையைப் பாராட்ட அவளுடைய பெற்றோரும் மகளை பாராட்டினார்கள்.

“நல்லதுதான் பண்ணியிருக்க ராஜி! இப்டிதான் எப்பவும் எல்லாருக்கும் உதவி செய்யணும்.” என்று மகளின் நெற்றியில் முத்தமிட்டார்கள்.

அன்றிலிருந்து கொரங்கு பெடல் என்று யாராவது சொன்னால் ராஜிக்கு கோபமே வருவதில்லை. மாறாக பெருமைதான் ஏற்படுகிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *