நூல்: யார் தாத்தா நீங்க
ஆசிரியர்: சி.சரிதா ஜோ
பக்கம்: 48
விலை:₹45
ஐந்து சிறிய கதைகள் கொண்ட நூல் இது. சிறார்களுக்கு இயற்கைப் பற்றிய புரிதல் ஏற்படுத்துவது நமது கடமை. அதைக் கதைகள் மூலம் சொல்ல நேர்ந்தால் அவர்களிடம் விரைவில் சென்று சேரும் என்ற உண்மை நமக்கும் புரிகிறது. காடு முன்பு,இப்போது, நாளை எப்படி இருக்கிறது இருக்கப் போகிறது என்ற கேள்வியும்,பதிலும் வியக்க வைக்கிறது. ஒரு விஷயம் பற்றிய நம் சிந்தனையும்,குழந்தைகளின் சிந்தனையும் வெவ்வேறானவை என்பது அவர்களைக் கவனித்தால் தெரியும். யாரோ சொன்ன செய்தியை விடாமல் பிடித்துக்கொண்டு இன்றும் குழந்தைகளும் காரணங்கள் அறியாமல் செய்வார்கள். அப்படிப்பட்ட ஒரு நிகழ்வு தான் ஓணானைக் கண்டால் அடிக்க வேண்டும் என்பது. வேண்டாம் என்று வெறுமே சொல்லாமல் அவர்கள் ஏற்றுக்கொள்ளும் வரையில் காரணங்கள் கூறி அதைத் தடுக்கிறார் கதையின் மூலம் ஆகப்பெரும் உண்மைகளை குழந்தைகளுக்குத் தெரியப்படுத்தலாம். மலைகள், மரங்கள், அருவி, ஆறுகளிடமும் கதை சொல்லலாம்! பறவைகளின் பாடலில் மகிழும் சரிதாவின் கதைகள். காடழிப்பைக்கண்டு பதறுகிறது! இருப்புக் கொள்ளாமல் தவிக்கிறது. எல்லா உயிர்களும் இன்பம் கொள்ளும் சமவெளி நோக்கி பயணிக்கிறது! மனிதர்கள் பரிமாறிக்கொள்ளும் கதைகளை மரமும், மேகமும், மழையும், பூமியும் பெற்றுக்கொள்ளும் பேரதிசயம் கதைகளின் நிகழ்ந்து விடுகின்றன! குழந்தைகள் செய்வது சத்தமா,ஒலியா என்ற கதை மூலம் “குழந்தைகளோட ஒலியை, குழந்தைகளோட அந்த மகிழ்ச்சியான தருணத்தை நாம் தடுப்பது இந்தப் பறவைகளோட ஒலியைக் கேட்காமல் அந்த கருவியைப் மாட்டிக்கொண்டு காட்டுக்குள் வருகின்றதைப் போன்றதுதான். எங்கேயோ டிவியில் கேட்கிற சத்தங்களும் செல்போனில் கேட்கிற சத்தங்களும் இனிமையான ஒலியாக நமக்குத் தெரிகிறது. இவ்வளவு ஏன்; செல்போனில் விளையாடும்போது துப்பாக்கிச் சூடுகள் கூட இனிமையாகத் தெரிகின்றது. நமக்கு குழந்தைகளோட ஒலி மட்டும் ஏன் சப்தமாகத் தெரிகிறது?’’, என்ற கேள்வியை நம் முன்னும் வைக்கிறார்.
என் பெயர் ஜெயாசிங்காரவேலு.நான் கரூரில் இருக்கிறேன்.இரண்டு வருடமாக தளங்களில் எழுதி வருகிறேன்.கணிதம்,சிறப்புக்கல்வி படித்துள்ளேன்.