காகிதம் உருவாகிய வரலாறு

காவிரி ஆற்றின் கரையோரத்தில் ஒரு அழகிய கிராமம் இருந்தது. அங்குள்ள ஆலமரம் ஒன்றில் பூஞ்சிட்டு அமர்ந்து மாலை நேர அழகை ரசித்துக் கொண்டு இருந்தது.
ஞாயிற்று கிழமை என்பதால் சில குழந்தைகள், ஆலம் விழுதுகளில் ஊஞ்சல் கட்டி விளையாட ஆவலோடு அங்கு வந்தனர்.
ஆலமரக் கிளையில் பூஞ்சிட்டைக் கண்டதும் குழந்தைகளுக்கு ஒரே மகிழ்ச்சி. அனைவரும் பூஞ்சிட்டுவிடம் தங்களை அறிமுகம் செய்து கொண்டனர்.
அவர்களோடு அமுதன் என்ற குழந்தையின் தாத்தாவும் அவர்களுக்கு துணையாக வந்திருந்தார்.
“எல்லாரும் எப்படி இருக்கீங்க?” என்றது பூஞ்சிட்டு.
(என்னது பூஞ்சிட்டு பேசுமா அப்படினு நீங்க கேட்கிறது புரியுது குட்டீஸ். நம்மளோட கற்பனை உலகத்துல பூஞ்சிட்டு பேசும். பல அரிய தகவல்களை நம்மோடு பகிர்ந்துக்கவும் செய்யும்)
“நல்லா இருக்கோம் பூஞ்சிட்டு,நீ எப்படி இருக்க?” என்றனர் குழந்தைகள்.
“நானும் நலம்.”
“என்ன குட்டீஸ் ? சிலர் கையில் செய்தி தாள் கொண்டு வந்திருக்கீங்க?” என்றது பூஞ்சிட்டு.
“காகித கப்பல் செய்வதற்கு செய்தித் தாள் எடுத்து வந்தோம் சிட்டு. அருகில் உள்ள ஓடை நீரில் காகிதக் கப்பலை விட்டு விளையாட போறோம்.” என்றனர் குட்டீஸ்.


“ஓ! நல்ல விளையாட்டு. நாம இன்றைக்கு காகிதத்தின் தோற்றம் பற்றி தெரிஞ்சுக்கலாமா?” என்றது பூஞ்சிட்டு.
“ஐ! ஜாலி! கண்டிப்பா தெரிஞ்சிக்கலாம் பூஞ்சிட்டு.” என்றனர் குழந்தைகள்.
“காகிதம் கண்டு பிடிக்கிறது முன் மனிதர்கள் எழுதப் பயன்படுத்திய பொருட்கள் எவை? யாராச்சும் சொல்லுங்க பார்ப்போம்.” என்றது பூஞ்சிட்டு.
“கற்கள் , பாறைகள். சரியா பூஞ்சிட்டு? “ என்றாள் அனு.
“சரியான விடை. ஆதி காலத்து மனிதர்கள் தங்கள் எண்ணங்களை கற்களின் மீதும் பாறைகளின் மீதும் பல்வேறு வடிவங்களில் பொறித்து வைத்தனர். விலங்குகளின் எலும்புகள், மூங்கில் தடிகள் ஆகியவற்றையும் கூட எழுதுவதற்கு பயன்படுத்தி உள்ளனர். நமது பழந்தமிழ் எழுத்தாளர்கள் கற்களையும், பனை ஓலைகளையும் எழுதப் பயன்படுத்தி உள்ளனர். அவைதான் கல்வெட்டுகளாகவும் , ஓலைச் சுவடிகளாகவும் கண்டெடுக்கப்பட்டது” என்றது பூஞ்சிட்டு.
“கேட்கவே சுவாரசியமாக இருக்கு. அவை எல்லாம் பாதுகாக்கிறது ரொம்ப கஷ்டமா இருந்திருக்குமே பூஞ்சிட்டு?” என்றான் அமுதன்.
“ஆமாம் அமுதன். அதனால் மனிதர்கள், பாதுகாப்பதற்கு எளிமையான எழுது பொருளை தேடிக்கொண்டே இருந்தனர். முதன் முதலாக எகிப்தியர்கள் கி.மு.7ஆம் நூற்றாண்டில் பாப்பிரஸ் (Cyperus Papyrus) என்னும் தாவரத்தின் தண்டுப் பகுதியை எழுதும் காகிதமாக பயன்படுத்தினர். பாப்பிரஸ் என்னும் அந்த தாவரத்தின் பெயரை வைத்து தான் காகிதத்தை(PAPER) பேப்பர் என்று அழைக்கிறோம்.” என்றது பூஞ்சிட்டு.
“ஓ அப்படியா சூப்பர்! அருமையான தகவல் சிட்டு. அப்பறம் என்னாச்சு?” என்றாள் இனியா.
“கி.பி. 105 இல் மரத்துகள்களைக் கூழாக்கி விரும்பிய வடிவத்தில் காகிதத்தைத் தயாரிக்கும் தொழில்நுட்பம் உருவானது. அதை கண்டுபிடித்தவர் கைய் லூன் (Cai Lun) என்னும் சீன விஞ்ஞானி. அவர்தான் மரநார்கள், தாவர இலைகள், மீன்பிடி வலைகள், துணிக் கழிவுகள் கொண்டு காகிதம் தயாரிக்கும் தொழில் நுட்பத்தைக் கண்டு பிடித்தவர்” என்றது சிட்டு.
“கைய் லூன் பெயரை நல்லா ஞாபகம் வச்சுக்கணும். ஆலைகளில் காகிதம் எப்படி தயாரிக்கிறாங்கனு சொல்லு சிட்டு.” என்று ஆர்வமாய் கேட்டான் எழில்.
“காகித ஆலைகளில் மூங்கில் போன்ற மரங்களை சிறுசிறு துண்டுகளாக நறுக்குகின்றனர். பின்பு மரத்துகள்களை நன்றாக அரைத்து கூழாக்கப்படுகிறது. இதுவே செல்லுலோஸ் எனப்படும் காகிதக் கூழ் ஆகும். இந்தக் கூழினை நன்கு காய்ச்சி, அதில் உள்ள நீரை வடித்து கனமான தகடு போன்ற பொருளினால் அழுத்தி காகிதம் உருவாக்கப்படுகிறது “ என்றது சிட்டு.
“வேறு என்னென்ன பொருட்கள் பயன்படுத்தி காகிதம் தயாரிக்கப்படுகிறது சிட்டு?” என்றாள் அனு.
“ஊசியிலை மரங்கள், மூங்கில், யூகலிப்டஸ், பருத்தி, சணல் கழிவு, கந்தைத் துணிகள், நார்கள், புற்கள், கரும்புச்சக்கைகள் போன்றவைகளும் பயன்படுத்தி காகிதம் தயாரிக்கப்படுகிறது” என்றது சிட்டு.
“அப்போ நிறைய மரங்களை அழிச்சுதான் காகிதம் தயாரிக்கிறார்களா சிட்டு?“ என்றான் அமுதன்.
“ஆமாம் அமுதன். அதனால் மரங்களை பாதுகாக்க வேண்டி மறுசுழற்சி முறை(Recycling process) அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் உலகத்தில் 93 சதவிகித காகிதங்கள் மறுசுழற்சி செய்யப்படுகின்றன. மறுசுழற்சி செய்யப்படும் ஒரு டன் காகிதங்கள் 17 மரங்களை காப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.” என்றது சிட்டு.
“இன்றைக்கு காகிதத்தை பற்றி நிறைய தகவல்கள் தெரிந்து கொண்டோம் சிட்டு. இனிமே காகிதத்தை வீணாக்காமல் கவனமா பயன்படுத்துவோம்.” என்றாள் இனியா.
“சூப்பர் இனியா. நிறைய மரங்களையும் நட்டு பாதுகாப்போம். சரி தானே குட்டீஸ்” என்றது சிட்டு.
“கண்டிப்பா சிட்டு” என்றனர் குழந்தைகள் ஒரே குரலில்.
“சரி செல்லங்களே! எல்லாரும் கவனமா மகிழ்ச்சியா விளையாடிவிட்டு தாத்தாவுடன் சீக்கிரம் வீட்டுக்கு கிளம்புங்க. நான் கிளம்பறேன். மறுபுடியும் சந்திப்போம். டா டா!” என்று பறந்து சென்றது பூஞ்சிட்டு.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *