மல்லிகைத் தோட்டத்தின் மர்மம் – 1

பகுதி – 1

ஆறாம் வகுப்பு படிக்கும் அர்ஜுன் ஆண்டு விடுமுறைக்கு தன் பெற்றோரிடம் ஊட்டி அழைத்துச் செல்லச் சொல்லி அடம் பிடித்தான்.

“ஊட்டி போனா மூணு நாள்ல திரும்பி வரணும். தாத்தா பாட்டி இருக்கற நம்ம மலை கிராமத்துக்கு போனா ஒரு மாசம் ஃபுல்லா ஜாலியா இருக்கலாம்! எது வேணும்?” என்று கேட்டான் அவனுடைய அப்பா அருண்.

அர்ஜுன் என்ன சொல்வது என்று புரியாமல் நின்றான்.

“அரூ குட்டி! மூணு நாளுக்குள்ள அவசர அவசரமா போயிட்டு அவசர அவசரமா திரும்பி வர டம்மி பிக்னிக்கா? இல்ல ஒரு மாசம் முழுசும் ஜாலியா இருக்கற சூப்பர் வெகேஷன் டிரிப்பா?” என்று கேட்டாள் அம்மா வைஜெயந்தி.

அருண் வைஜெயந்தியைப் பார்த்து புன்னகை செய்தான்.

அம்மா கூறியது அர்ஜுனுக்குத் தெளிவாகப் புரிந்தது.

“ஒரு மாசம் ஜாலி டிரிப்!” என்று குதூகலமாகக் கூறினான் அர்ஜுன்.

அதன்படி தன் தாத்தா பாட்டி இருக்கும் மலைக் கிராமத்துக்கு வந்திருந்தான்.

அவனுடைய தாத்தா சொக்கலிங்கமும் பாட்டி மீனாட்சியும் அந்த கிராமத்தில் முக்கியமானவர்கள்.

அவனுடைய சித்தப்பா மகள் வர்ஷாவும் அத்தையின் மகன்கள் கிரீஷும் கிஷோரும் கூட மலைக் கிராமத்துக்கு வந்திருந்தார்கள். அவர்களுக்கும் கிட்டத்தட்ட அர்ஜுனின் வயதுதான். வர்ஷா ஐந்தம் வகுப்பும், சிரீஷும் கிஷோரும் ஆறாம் வகுப்பும் படிக்கிறார்கள்.

பூங்குளம் ஒரு அழகான மலைக்கிராமம். மதுரையிலிருந்து பழனி செல்லும் வழியில் சில மைல் தூரத்தில் இந்தக் கிராமம் இருந்தது.

இந்தக் கிராமத்தில் இருந்த பலர் படிப்பு மற்றும் வேலைக்காக வேறு வேறு ஊர்களுக்கு இடம் பெயர்ந்து விட்டனர். என்றாலும் அர்ஜுனின் தாத்தா பாட்டி போன்ற ஒரு சிலர் அக்கிராமத்தை விட்டு வேறு எங்கும் செல்லவில்லை.

தன் பேரன்கள் அர்ஜுன், கிஷோர், கிரீஷ் மற்றும் பேத்தி வர்ஷா ஆகியோரின் வரவினால் தாத்தாவும் பாட்டியும் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார்கள்.

தாத்தா அந்த ஊரில் இருக்கும் குளம், மலைக்கோவில், சமணர் குகை, மலைக்கோவிலுக்குச் செல்லும் பாதையில் இருக்கும் பூஞ்சோலை என்று ஒரு இடம் விடாமல் எல்லா இடங்களுக்கும் அழைத்துச் சென்றார். அப்படிச் செல்லும் போது அறிவுரை சொல்லி குழந்தைகளை அறுக்காமல் நிறைய நீதிக் கதைகள் சொன்னார். நீதிக்கதைகளின் வாயிலாக அவர்கள் நல்ல விஷயங்களைக் கற்றுக் கொள்ள வகை செய்தார்.

பாட்டி அவர்களுக்கு விதவிதமான சத்தான கிராமத்து உணவு வகைகளையும் தின்பண்டங்களையும் செய்து கொடுத்தார்.

முதல் இரண்டு நாள்கள் குழந்தைகளுக்கு அந்த கிராமம் மிகவும் போரடிப்பது போல இருந்தது. பாட்டியின் கிராமத்து சமையல் பிடிக்காதது போல இருந்தது. ஆனால் மூன்றாம் நாளில் இருந்து எல்லாமே உற்சாகமாக மாறிவிட்டது.

தாத்தா சொல்லும் கதைகள் அவர்களைச் சொக்க வைப்பது போல இருந்தது.

“தாத்தா! நீங்க சொல்ற கதைல்லாம் சூப்பரா இருக்கு..”

“சொக்க வெக்கற மாதிரி இருக்கு தாத்தா!”

“தாத்தா பேரே சொக்கலிங்கம்தானே? அதான் தாத்தா சொல்ற கதையும் சொக்க வெய்க்கிது..”

“இனிமே உங்கள சொக்கு தாத்தான்னு கூப்பிடறோம்..”

“கூப்பிடுங்க பிள்ளைங்களா..” என்று சிரித்தார் தாத்தா.

தாத்தா அவர்களை தினமும் அங்கிருந்த குளத்துக்கு அழைத்துச் சென்றார். அதுதான் அவர்களின் உற்சாகத்துக்கு காரணம்.

அந்தக் குளத்துக்குப் போகும் வழி நெடுகிலும் மல்லிகைத் தோட்டங்கள் நிறைந்திருந்தன. அந்த இடம் முழுதும் மயக்கும் மல்லிகை மணம் நிறைந்து இருந்தது. அதனாலேயே அந்தக் கிராமத்துக்கு பூங்குளம் என்று பெயர் வந்ததாக தாத்தா கூறினார்.

படம் : அப்பு சிவா

மல்லிகை மணத்தை ரசித்தபடியே சென்று குளத்தில் நீந்தி மகிழ்ந்திருந்துவிட்டு வீடு திரும்பும்போது பாட்டி உணவுடன் தயாராக இருப்பார்.

“மீனுப்பாட்டி! இன்னிக்கு என்ன செய்யப் போறீங்க?”

“இன்னிக்கும் உங்களுக்கு பிடிச்சதாதான் செய்வேன்.. குளத்துக்குப் போயிட்டு வந்து பாருங்க..” என்று சொல்லி பாட்டி அவர்களை அனுப்பி வைப்பார்.

அவர்கள் வரும்போது சிறப்பான உணவுப் பண்டங்கள் மீனுப்பாட்டியின் கைவண்ணத்தில் அவர்களுக்காகத் தயாராக இருக்கும்.

நல்ல பசியில் அந்த உணவு மிகவும் சுவையாக இருந்தது அவர்களுக்கு. மேலும் அந்த உணவினைச் சாப்பிட்ட பின் எப்போதும் வருவது போல வயிற்று வலியோ வயிற்றுப் போக்கோ வரவேயில்லை.

அதனாலேயே அவர்கள் மிகுந்த உற்சாகமாக வளைய வந்தார்கள்.

குழந்தைகளுக்கு குளத்துக்குச் செல்லும் வழி நன்றாகப் பழகிவிட்டது. சில நாட்கள் தாத்தாவுக்கு வேறு வேலை இருந்தால் அவர்கள் தனியாகவே குளத்துக்குச் செல்வார்கள். தன் வேலையை முடித்துக் கொண்டு தாத்தா குளத்துக்குச் சென்று குழந்தைகளுடம் வீட்டுக்குத் திரும்புவார்.

குளத்தின் ஆழம் அதிகம் இல்லை என்பதாலும் அந்த ஊரில் மிகச் சிலரே இருந்தாலும் எல்லாரும் ஒருவரை ஒருவர் நன்கு அறிந்தவர்கள்தான்; அதனால் ஊர்க்காரர்களின் கண்காணிப்பு குழந்தைகள் மேல் இருக்கும் என்பதாலும் தாத்தா குழந்தைகளை தனியாகச் செல்ல தைரியமாக அனுமதித்தார்.

ஒருநாள் காலை,

“தாத்தா! நாங்க ரெடி! குளத்துக்கு போலாமா?” என்று குழந்தைகள் தயாராக நின்றார்கள்.

“அர்ஜுன், கிஷோர், கிரீஷ், வர்ஷா குட்டி.. இன்னிக்கு தாத்தாவுக்கு முக்கியமான வேலை இருக்கு.. நம்ம மலைக்கோயில் தர்மகர்த்தா இப்ப என்கிட்ட பேசறதுக்கு வரேன்னு சொல்லியிருக்கார்.. அதனால நீங்க முன்னால போங்க.. அவர் வந்து போனதும் நா வந்து உங்களோட சேர்ந்துக்கறேன்.. சரியா?” என்றார்.

“சரி தாத்தா! நாங்க முன்னால போறோம்.. நீங்க பின்னால வாங்க.. பை பாட்டி!” என்று பாட்டிக்கு டாட்டா காட்டிவிட்டு குளத்தில் விளையாடுவதற்காக கிளம்பிச் சென்றார்கள் குழந்தைகள்.

அன்று அவர்கள் செல்லும் போது வழியில் ஏதோ மினுமினுப்பது போல வர்ஷாவின் கண்களுக்குத் தெரிந்தது.

அவள் குனிந்து அதைக் கையில் எடுத்தாள்.

அது ஒரு மயிலிறகு.

“ஹே! இங்க பாருங்க! மயிலோட ஃபெதர்தானே இது?” என்று அவள் கேட்க,

“ஆமா வர்ஷா! இது எங்க கெடச்சது உனக்கு?” என்று கேட்டான் கிஷோர்.

“இங்கதான்டா! கீழ கெடந்தது!” என்றாள் வர்ஷா.

சிறுவர்கள் மூவரும் அதை அவள் கையிலிருந்து வாங்க, வர்ஷாவின் விரல்களில் அந்த மயிலிறகின் நீல நிறம் ஒட்டிக் கொண்டது.

“என்ன இது? என் கையில அதோட கலர் ஒட்டிகிச்சு!” என்றாள் வர்ஷா.

உடனே அதை வாங்கிய கிஷோர் தன் கையைப் பார்த்தான். அவன் கை விரல்களிலும் நீல நிறம் ஒட்டிக் கொண்டிருந்தது.

“ஏ! ஆமாடீ! என் கையிலயும் இந்த கலர் ஒட்டிகிச்சு.” என்றான்.

“சரி விடுங்க. குளத்தில குளிக்கறப்ப கலர் போய்டும்..” என்றான் அர்ஜுன்.

நால்வரும் பேசியபடியே குளத்தருகே சென்றனர்.

குளத்தின் மேலே பல வகையான வண்ணத்துப் பூச்சிகள் பறந்து கொண்டிருந்தன.

“என்ன இன்னிக்கு? இவ்ளோ பட்டர்ஃப்ளை பறக்குது?” என்று கேட்டாள் வர்ஷா.

“அதானே? இத்தன நாளா இங்க நம்ம இவ்ளோ பட்டர்ஃப்ளை பாக்கலயே!” என்றான் கிரீஷ்.

அப்போது, அவர்களுக்கு எதிரில் குளத்துக்கு அருகிலிருந்து ஒரு குரல் கேட்டது.

“அதெல்லாம் உங்களப் பாக்கதான் வந்திருக்கு.. அதுக்கு ஹலோ சொல்லுங்க!” என்று கூறினார் ஒரு பாட்டி.

“நீங்க யாரு?”

“நாங்க உங்கள இங்க பாத்ததே இல்லையே!”

என்று அர்ஜுனும் வர்ஷாவும் கேட்டார்கள்.

“நாந்தான் நிலாப்பாட்டி!” என்றார் பாட்டி.

“நீங்க இவ்ளோ நாளா எங்க இருந்தீங்க?” கிரீஷ் கேட்டான்.

“நா இங்கதான் இருந்தேன்.. என் தோட்டம் இதுதான். என் தோட்டத்தைக் கடந்துதான் நீங்க இந்த குளத்துக்கு உங்க தாத்தாவோட வருவீங்க. ஏன்? என்ன நீங்க பாத்ததில்லையா?” என்று கேட்டார் பாட்டி.

“இல்லையே!” என்றான் கிஷோர்.

“நான் இந்த குளத்துக்கு அந்த பக்கத்தில இருக்கேன். அதோ பாருங்க.. அந்த குகை தெரியுதுல்ல.. அங்கதான் என் வீடு இருக்கு..” என்று தூரமாகக் கை காட்டினார் பாட்டி.

“என்ன பசங்களா? குளிக்கலாமா?” என்று கேட்டுக் கொண்டே தாத்தா அங்கே வந்தார்.

“சொக்குத் தாத்தா! இந்த நிலாப் பாட்டிய உங்களுக்கு தெரியுமா? இந்த ஊர்க்காரவுங்களா?” என்று அர்ஜுன் கைகாட்ட, அவ்வளவு நேரம் அங்கே நின்றிருந்த நிலாப்பாட்டியைக் காணவில்லை.

குழந்தைகள் நால்வரும் அதிர்ந்தனர்.

– தொடரும்….

அன்னபூரணி தண்டபாணி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *