கோடை விடுமுறையில் வெளியூர் எங்கும் போகவில்லை அபிஜித். அவன் அம்மா அப்பா இருவருக்குமே கடுமையான பணிச்சுமை. விடுப்பு ஏதும் அவர்களுக்குக் கிடைக்கவில்லை.
ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று மெரினா கடற்கரை சென்று வந்தார்கள். இன்னொரு முறை அருகில் இருக்கும் ஒரு நண்பர் வீட்டில் விருந்து . ஒரு நாள் கண்டிப்பாக ஒரு பொழுதுபோக்கு பூங்கா அழைத்துச் செல்வதாக அப்பா சொல்லி இருந்தார். அந்த ஒரு நாள் வரவே இல்லை.
கோடை விடுமுறையில் கிராமத்தில் இருக்கும் தாத்தா பாட்டி வீட்டுக்கு செல்லும் சிறார் கதைகள் நிறைய படித்திருக்கிறான் அபிஜித். ஆனால். அவனுக்கு அந்த வாய்ப்பும் இல்லை. அவனது தாத்தாவும் பாட்டியும் அதே வீட்டின் மேல் தளத்தில் தான் இருந்தார்கள்.
அம்மா வேலைக்குக் கிளம்பும் போது அவனும் மாடிக்குச் சென்று விட வேண்டும்.
“கோடை விடுமுறையில் எங்கே போனீங்கன்னு டீச்சர் கேட்டா… மாடிக்குப் போனேன் மிஸ்… இதான் என் பதிலா இருக்குமோ” அபிஜித் தனக்குள்ளே கேட்டுக் கொண்டு அங்கலாய்த்துக் கொள்வான்.
ரங்கா தாத்தா இவனுடன் சிறிது நேரம் விளையாடுவார். ஒரு நாள் சதுரங்கம். ஒரு நாள் பரமபதம். பிறகு, அன்றைய செய்தித் தாளின் தலைப்புச் செய்திகளை இவனை சத்தமாகப் படிக்கச் சொல்வார்.
பெரும்பானமையான நேரம் மங்களாப் பாட்டியுடன் தான் ! ஓவியப் பயிற்சிப் புத்தகங்கள், குறுக்கெழுத்துப் புதிர் புத்தகங்கள், கையெழுத்துப் பயிற்சிப் புத்தகங்கள்… மாற்றி மாற்றி எதையாவது எழுத வைத்து விடுவார் மங்களாப் பாட்டி.

ஆங்கிலத்திலும் தமிழிலும் சிறு சிறு கதைப் புத்தகங்கள் ஏராளமாகவே வாங்கி வைத்திருந்தார். ஒவ்வொன்றையும் அபிஜித் எழுத்துக் கூட்டி வாசிக்க வேண்டும்.
கடினமான சொற்களுக்குப் பொருள் சொல்வார் மங்களாப் பாட்டி. அதை திரும்ப அவர் கேட்கும் போது சரியாகச் சொல்லவில்லை என்றால், அதை பலமுறை எழுத வைத்து விடுவார்.
பாட்டி அவ்வப்போது தரும் தின்பண்டங்களுக்காக அபிஜித் அவர் சொல்வதைக் கேட்டு படிப்பான், எழுதுவான்.
கணக்குப் பாடங்கள் தான் எல்லா நாட்களிலும் விசேஷ கவனம் பெறும். எல்லாக் கணக்குகளையும் அவன் சரியாகச் செய்து விட்டால், இனிப்புகள், கேக், க்ரீம் பிஸ்கெட் நிச்சயம் !
இடமதிப்பு, ஸ்கிப் கௌண்டிங், கூட்டல், கழித்தல் என மங்களாப் பாட்டி டிரில் வாங்கி விடுவார்.
“அஞ்சு கணக்கு குடுத்திருக்கேன். மூணு நிமிஷம் டைம்” என்பார். வேகமாகவும் போட வேண்டும் சரியாகவும் போட வேண்டும்.
ஒரு நாள் கூட்டல் வாய்பாடு நேரம். அபிஜித் சரியாகச் சொல்லவில்லை.
“ம் ! இந்தா ! இந்த வாய்பாட்டை பத்து தரவ எழுது !” என்று விட்டார். கை ஓடிந்து போனது அபிஜித்துக்கு !
இருந்தாலும் எழுதினான்.
“பத்து நிமிஷத்துல எழுதினா, ஜாங்கிரி தருவேன். சொல்லிகிட்டே எழுதணும்”
கூட்டல் கழித்தல் கணக்குகளை மனக்கணக்குகளாகப் போடச் செய்வார் பாட்டி.
“எட்டும் ஏழும்?”
“பன்னெண்டுல நாலு போனா?”
“தெருவுல ஒரு பிஸ்கெட் விக்கறவரு வந்தாராம். கோடி வீட்டுக்கு மூணு பிஸ்கெட் பாக்கெட் வித்தாராம். கிருஷ்ணன் வீட்டுக்கு ஏழு வித்தாராம். பாக்கி இருந்ததை கணேஷுக்கும் ரஞ்சனுக்கும் சமமா கொடுத்து வித்துட்டாராம். கணேஷ் எத்தனை பாக்கெட் பிஸ்கெட் வாங்கினான்?”
“ பாட்டி, அவருகிட்ட மொத்தமா எத்தனை பாக்கெட் இருந்ததுன்னு நீங்க சொல்லவே இல்லயே ?”
“புத்திசாலி ! அவரு கிட்ட மொத்தம் பதினெழு பாக்கெட் இருந்தது”
இப்படித் தான், அபிஜித் தனது கோடை விடுமுறையைக் கழித்தான்.
மாலை வேளைகளில், மங்களாப் பாட்டியும் அவனும் அருகில் இருக்கும் பூங்காவுக்குப் போவார்கள். ஒரு மணி நேரம் போவதே தெரியாது. ஆனந்தமாக இருக்கும். மீண்டும் வீடு. கீழ் தளத்தில் அம்மா அப்பாவுக்காக காத்திருந்து இரவு உணவு சாப்பிட்டு உறங்க வேண்டியது தான்.
பள்ளி திறக்கிறது என்ற செய்தி அபிஜித்துக்கு அத்தனை மகிழ்ச்சியாக இருந்தது. அப்பாடா ! நண்பர்களுடன் ஜாலியாகப் பேசி சிரிக்கலாம்.
பள்ளியில் முதல் நாளே “திறன் வளர் மன்றம்” தொடக்க விழா ! முக்கிய விருந்தினர் பேசும் போது, “இப்போதெல்லாம், பிள்ளைகளுக்கு பிழை இல்லாமல் படிக்கத் தெரிவதில்லை” என்று சொல்லியபடி, அவர் கையில் கொண்டு வந்திருந்த செய்தித் தாளை எடுத்தார்.
“யாராவது இந்த செய்தித் தாளை படிக்க முன் வர வேண்டும்” என்றார்.
அபிஜித் எழுந்து சென்றான்.
“அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் கோடை விடுமறை பயிற்சி முகாம் மிகச் சிறப்பாக நடை பெற்றது.”
“இந்த ஆண்டு மே மாதத்தில் வழக்கத்தை விட வெயிலின் கடுமை குறைந்து இருந்தது. ஜூன் ஜூலை மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது”
மாணவர்களும் , முக்கிய விருந்தினரும் கை தட்டினர்.
“மிக நன்று. மிக நன்று. உன் பெயர் என்ன ?”
“அபிஜித்”
“உங்கள் பள்ளி போன்று சில பள்ளிகளில் உள்ள மாணவர்கள் சிறப்பாகப் படிக்கிறார்கள். இது போல எல்லா மாணவர்களும் படிக்க வேண்டும் “ என்றார்.
தொடர்ந்து பேசும் போது, மனக்கணக்கு போடுவது நினைவாற்றலையும் புத்தி கூர்மையையும் வளர்க்கும் என்று சொன்னார் பேச்சாளர்.
அவர் டக் டக்கென்று கூட்டல் – கழித்தல் கணக்குகளைக் கேட்க கேட்க… அதே ’டக் டக்’ வேகத்தில் அபிஜித் எல்லாக் கணக்குகளுக்கும் சரியான விடை தந்தான்.
கரகோஷம் காதைக் கிழித்தது.
பேச்சாளர் அபிஜித்தையும் பள்ளியையும் வெகுவாகப் பாராட்டினார்.
“அபிஜித் ! ரொம்ப அருமை ! எப்படி இவ்வளவு வேகமா உன்னால சொல்ல முடியுது ? ஏதோ ஸ்பேஷலா பயிற்சி எடுத்த மாதிரி ? யார் சொல்லிக் கொடுத்தாங்க” எனக் கேட்டார் தலைமை ஆசிரியர்.
“எங்க பாட்டி தான் ! மங்களாப் பாட்டி எனக்கு தினமும் பயிற்சி கொடுத்தாங்க” என்றான் அபிஜித்.
“முக்கியப் பேச்சாளர் முன்னால நம்ம பள்ளிகூடத்துக்குப் பெருமை சேத்துட்ட. உனக்கு என்ன வேணும் சொல்லு. இப்பவே வாங்கித் தரேன்”
“எனக்கு… கண்ணாடிக்குப் போடற சங்கிலி வேணும். ‘ஐ க்ளாஸ் செயின்’” என்றான் அபிஜித்.
“கண்ணாடிக்கான செயினா ? நீதான் கண்ணாடியே போடலியே ?”
“மங்களாப் பாட்டி கண்ணாடிய இங்க அங்க வச்சுட்டு தேடிகிட்டு இருப்பாங்க. இந்தச் சங்கிலி வாங்கி அவங்களுக்குக் கொடுக்கலாம்ன்னு…”
“ஆஹா ! க்ரேட் ! அபிஜித் ! என்ன அழகான மனசு உனக்கு !”
கண்ணாடிக்கான சங்கிலியைப் பேரன் கொடுத்ததும், மங்களாப் பாட்டியின் முகத்தில் எத்தனை சந்தோஷம் ! அதை அளப்பதற்கு ஏதேனும் மனக் கணக்கு போடுவாரா பாட்டி?
