பால்கனியிலிருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த நிர்மலனை தோட்டத்தில் இருந்த மாமரத்தில் ஏற்பட்ட சலசலப்பு ஒன்று ஈர்த்தது. விசித்திரமான நீல பறவை ஜோடி’ சிவ் சிவ்’ என்று தமக்குள் ஏதோ பேசிவிட்டு இங்கும் அங்கும் வேகமாக இயங்கிக் கொண்டு இருந்ததைப் பார்த்தாள். இப்போதுதான் காய்ந்த சுள்ளிகளால் அழகாக பின்னப்பட்ட கூடை போலொரு கூட்டில் செக்கசெவேலென சிவந்த செப்பு போல வாயை திறந்தும் மூடியும் கொண்டிருப்பதைக் பார்த்தான். சற்றே பழுப்பு நிற விழிகளில் நீலமணி பதித்தாற்போல் இருந்த கண்ணின் கருமணிகளை உருட்டி உருட்டிப் பார்த்தது அத்தனை அழகாகவும் , வினோதமாகவும் இருந்தது.
அப்பா பறவை என்று நிர்மலனுக்குத் தோன்றிய பறவை ஒரு சிறிய பறவையிடம் ஏதோ சொல்ல, அது தயக்கத்துடன் கூட்டின் விளம்புக்கு தத்தித் தத்தி வந்ததும், பெரிய பறவை அதை அலகால் கொத்த, அது பறக்க எத்தனித்த அந்த நிமிடம்; அந்த சிறு பறவையை பயமுறுத்த எண்ணம் கொண்ட நிர்மலன், தன் கவட்டையை எடுத்து சிறு கல்லால் குறி பார்த்து அடித்தான். அது பெரிய பறவைக்கும் பறக்க முயற்சிக்கும் பறவைக்கும் இடையே விழட்டும்; என்றுதான் கவண்கல்லை அடித்தான். ஆனால் அது அப்பா பறவையின் மேல் பட்டுத் தெறிக்க அது அடிபட்ட வேகத்தில் கீழே விழ, அந்த இன்னொரு பறவை எழுப்பிய குரல் அது அழுவது போல் இருந்தது. சிறு பறவைகள் ஒன்றும் புரியாமல் , சட சடவென இறக்கைகளை அடித்துக் கொண்டன.
நிர்மலனுக்கு தான் செய்த செய்கையின் விபரீதம் புரிய ஒரு வினாடி தான் ஆயிற்று. மனத்தில் திகிலும்,கலவரமும். பெரிய தவறு செய்த ஒரு அவமான உணர்வும், பச்சாதாபமும் அவனை ஆட்கொண்டது.

அவன் தன்னையும் அறியாமல் திரும்ப, கையில் பால் டம்ளருடன் அவன் அம்மா; சுரேஸ்வரி.’ஆஹா! என்னடா பண்ணி வைச்சுருக்கே? அந்தப் பறவை உன்னை என்ன பண்ணிற்று? அந்த குஞ்சு பறவைகளுக்கு அப்பா இல்லாமல் ஆயிடுத்தே! இதென்ன விபரீத விளையாட்டு.’ என்று அரற்றினாள்.
அவன் பக்கத்தில் வந்த சுரேஸ்வரி,’ நிர்மல்! உனக்கு இந்தப் பெயர் ஏன் அம்மா வைத்தேன் என்று தெரியுமா? நீ பிறந்த நிமிடம் உன் முகம் ஒரு களங்கமும் இல்லாமல் நிர்மலமாக இருந்தது. அதனால்தான் உனக்கு நான் நிர்மலன்னு பெயர் வைத்தோம். விதி அவருக்கு பறக்கும் பட்டத்தின் மாஞ்சா கயிறாக வந்து மாட்டியது.உன்னை மாதிரி ஒரு விளையாட்டுப் பையன் தெரியாமல்தான் செய்தது, உனக்கு அப்பா இல்லாமல் போய்விட்டார்.’ என்று வேதனையுடன் சொல்ல; நிர்மலன் சுவற்றில் சரிகை மாலையுடன் எப்போதும் புன்சிரிப்புடன் இருக்கும் அப்பாவின் முகம் இப்போது வேதனையிலும், சற்று சினத்திலும், இருப்பதுபோல் நிர்மலனுக்குத் தோன்றியது.
தன் கவட்டையை அம்மாவிடம் கொடுத்து ‘ இதை நான் கையால் தொடக்கூட மாட்டேன். தூக்கிப் போட்டுடுங்கம்மா’ என்று சொல்லி விக்கி, விக்கி அழ ஆரம்பித்தான்.
