அந்தோனி லவோசியே – Antoine Lavoisier

உலகம் உள்ளவரை தனது பெயரை நிலைத்து நிற்க செய்து வானத்தை வசப்படுத்திய லவோசியேக்கு உதவிய பண்புகள் கடும் உழைப்பும், விடாமுயற்சியும், புதியனவற்றை தேடிக்கானும் ஆர்வமும், அறிவியலில் அளவிடமுடியாத தாகமும்தான்.

1743 ஆம் ஆண்டு ஆக்ஸ்ட் 26ந்தேதி பாரிஸில் பிறந்தார் அந்தோனி லவோசியே – Antoine Lavoisier. கல்வியில் சிறந்து விளங்கிய அவர் சட்டத்துறையில் பட்டம் பெற்றார். எனினும் அவர் சட்டம் பழகவில்லை. லவோசியேக்கு ஆராய்ச்சிகள் செய்வதிலேயே அதிக ஆர்வம் இருந்தது. அதிலும் குறிப்பாக இரசாயனவியலில் அதிக ஆர்வம் காட்டினார்.

நவீன ‘இரசாயனவியலின் தந்தை’ என்று அவரை போற்றுகிறது வரலாறு.

1766 ஆம் ஆண்டு பாரிஸின் தெருக்களில் விளக்குகளைப் பொருத்த வேண்டும் என்று லவோசியே கருத்துரைத்தார். அதற்காக அவருக்கு தங்கப்பதக்கம் கிடைத்தது. வெடிகுண்டு தூள் அதிகாரியாக அவர் பணியாற்றியபோது வெடித்தல் பற்றியும் எரியும் தன்மை பற்றியும் நிறைய ஆராய்ச்சிகள் செய்தார். ஓர் உலோகத்தை எரித்தால் அதிலிருந்து கிடைக்கும் சாம்பலின் எடை அந்த உலோகத்தின் ஆரம்ப எடையைக் காட்டிலும் அதிகமாக இருக்கும் என்பதை லவோசியே சோதனைகள் மூலம் நிரூபித்துக் காட்டினார். இதேபோன்ற இன்னும் பல முக்கிய கண்டுபிடிப்புகளை அவர் செய்தார்.

நெருப்பு எரிவதற்கு காற்றில் உள்ள பிராணவாயுதான் காரணம் என்பதை லவோசியே கண்டறிந்தார். ஆக்ஸிஜன், நைட்ரஜன் ஆகிய இரண்டு வாயுக்கள் கலந்ததுதான் காற்று என்பதையும், அதேபோல் ஆக்ஸிஜனும், ஹைட்ரஜனும் கலந்ததுதான் தண்ணீர் என்பதையும் ஆதாரங்களுடன் நிருபித்தார். இவையெல்லாம் நமக்கு இப்போது தெரியும் உண்மைகள். ஆனால் லவோசியே கண்டு சொல்லும்வரை அவை அறியப்படாமல் இருந்தன. புதிதாக கண்டுபிடிக்கப்படும் எதனையும் அறிவியல் உலகம் அவ்வளவு விரைவாக ஏற்றுக்கொண்டதில்லை. லவோசியேவின் கண்டுபிடிப்புகளும் அதற்கு விதிவிலக்காக இல்லை. அவர் தனது கண்டுபிடிப்புகளை தகுந்த ஆதாரங்களுடன் எடுத்துக்காட்டியும் அப்போது புகழ்பெற்றிருந்த இரசாயனவியலார்கள் அவரது கருத்துக்களை ஏற்க மறுத்தனர். ஆனால் தான் உண்மை என்று நம்பியவற்றை எடுத்துக்கூறவும், தற்காக்கவும் தயங்கவில்லை லவோசியே.

1789 ஆம் ஆண்டில் லவோசியே Elements of Chemistry என்ற மிகச்சிறந்த பாட நூலை எழுதி வெளியிட்டார். நவீன இரசாயனவியலுக்கு அடிப்படையாக விளங்கும் கொள்கைகளையும், கோட்பாடுகளையும் அந்த பாட நூலில் ஆதாரங்களுடன் விளக்கினார். அதனை படித்த இளைய இரசாயனவியலார் லவோசியேவின் கருத்துக்களை ஏற்க தொடங்கினர். Elementary Substances அதாவது தனிமங்கள் என்று தான் கருதிய பொருட்களின் பட்டியலையும் அந்த பாட நூலில் இணைத்திருந்தார். ஒருசில தவறுகள் நீங்கலாக அவர் கண்டு சொன்ன பெரும்பாலான இரசாயனப்பொருட்கள் இன்றைய நவீன இரசாயனவியலின் பொருட்களின் பட்டியலில் இடம்பெற்றிருக்கின்றன. அவர் அடுத்து இரசாயனவியலுக்கான கலைச்சொல் தொகுதியை நன்கு திட்டமிட்டு உருவாக்கினார். அவர் உருவாக்கி தந்த அந்த கலைச்சொல் தொகுதிதான் இரசாயனவியலுக்கு ஓர் ஒருங்கிணைந்த அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.

உலகம் முழுவதிலும் உள்ள இரசாயனவியலார்கள் ஒரே மாதிரியான கலைச்சொற்களை பயன்படுத்த தொடங்கினார்கள். அதனால் அவர்களால் தங்களது கண்டுபிடிப்புகளை ஒருவொருக்கொருவர் பரிமாறிக்கொள்ள முடிந்தது. இரசசாயனவியல் துறையும் துரிதமாக வளர்ச்சியடையத் தொடங்கியது. மற்ற துறைகளிலும் தனது பங்களிப்பை செய்திருக்கிறார் லவோசியே. உடலியலில் அவர் ஒரு நுட்பமான உண்மையை கண்டுபிடித்துச் சொன்னார். நாம் மூச்சு விடும் செயல் ஸ்லோ கம்பாஷன் (Slow) அதாவது மெதுவாக எரியும் செயலுக்கு சமமானது என்பதுதான் அந்த உண்மை. மனிதனும் விலங்குகளும் தாங்கள் சுவாசிக்கும் பிராண வாயுவைக் கொண்டு உடலுக்குள் கரிமப் பொருளை எரிப்பதன் மூலம் சக்தியைப் பெறுகின்றன என்று கண்டறிந்து கூறினார். முக்கியத்துவம் வாய்ந்த அந்த கண்டுபிடிப்பு உடலில் இரத்த ஓட்டத்தை கண்டுப்பிடித்த வில்லியம் ஹாபியின் கண்டுப்பிடிப்புக்கு சமமானது என்று ஒரு வரலாற்றுக்குறிப்பு கூறுகிறது.

பிரான்ஸ் முழுவதும் Weights & Measurements எனப்படும் எடை மற்றும் அளவுகளை கணக்கிடும் முறையை ஒருங்கிணைக்கும் பணிக்குழு அமைக்கப்பட்டபோது அதில் லவோசியே முக்கிய உறுப்பினராக சேர்த்துக்கொள்ளப்பட்டார். அந்த பணிக்குழு சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில்தான் பிரான்ஸில் மெட்ரிக் அளவுமுறை நடப்பில் வந்தது. சுமார் இருபது ஆண்டுகள் அரசாங்கத்துறையில் விஞ்ஞானியாக பணியாற்றினார் லவோசியே. பொதுச்சேவையிலும் ஈடுபட்டார். பிரெஞ்சு ராயல் அறிவியல் கழகத்தில் முக்கிய உறுப்பினராக இருந்தார். Firm General என்ற அமைப்பின் முக்கிய பொறுப்பாளாராக பணியாற்றியதுபோது அந்த அமைப்பு வரி வசூலிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தது. அதில் ஈடுபாடுதான் அவருக்கு எமனாக அமைந்தது.

புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றியவர்கள்  Firm General அமைப்பைச் சேர்ந்தவர்களை சந்தேகக் கண்ணோடு பார்க்கத் தொடங்கினர். அந்த அமைப்பைச் சேர்ந்த 28 பேர்தான் புரட்சியாளர்களால் கைதுசெய்யப்பட்டு பின்னர் கிளெட்டின் மூலம் சிரச்சேதம் செய்யப்பட்டனர்.

லவோசியே நாட்டிற்கும், அறிவியலுக்கும் ஆற்றியிருக்கும் அரும்பங்கை எடுத்துக்கூறி அவரை விடுவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டபோது நீதிபதி என்ன சொன்னார் தெரியுமா? இந்த நாட்டிற்கு மேதைகள், விஞ்ஞானிகள் தேவையில்லை என்று கூறி மரண தண்டனையை உறுதி செய்தார். அந்த அபத்தமான செயலால் ஒரு மிகச்சிறந்த மாமேதையை இழந்தது உலகம்.

புரட்சியாளர்கள் அவரைக் கொன்றாலும் அறிவியலும், வரலாறும் லவோசியேவுக்கு சாகா வரத்தை தந்துள்ளன. இன்று Chemistry எனப்படும் இராசயனவியலை விரும்பி படிப்பவர்கள் லவோசியேவுக்குதான் நன்றி சொல்ல வேண்டும்.

– ஜெயா சிங்காரவேலு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *