ஹாய் சுட்டீஸ்!
எல்லாரும் எப்டி இருக்கீங்க? இந்த மாத சுத்திச் சுத்தி வந்தீக பகுதியில நாம என்ன பார்க்க போறோம் தெரியுமா?
அதுக்கு முன்னாடி, முக்கனிகள் என்னென்னன்னு நான் உங்களுக்கு சொல்லி குடுத்திருக்கேன்தானே? அது உங்களுக்கு ஞாபகம் இருக்கும்னு நினைக்கிறேன். என்னன்னு சொல்லுங்க பாக்கலாம்? மா, பலா மற்றும் வாழை! கரெக்ட். அதில மா மற்றும் வாழை பற்றி முந்தைய பதிவுகளில் நாம பாத்துட்டோம். இப்ப நாம பலா பற்றிய தகவல்களைத் தான் தெரிஞ்சிக்க போறோம்.
நீங்கல்லாம் பலாப்பழம் பார்த்திருக்கீங்கதானே?
பச்சை நிறத்தில பானை மாதிரி பெரிய சைஸ்ல இருக்கும் இந்தப் பழம். பழத்தோட வெளிய இருக்கற தோல் பகுதி முழுக்க முள்ளு முள்ளா இருக்கும். ஆனா உள்ளுக்குள்ள இருக்கற ஒவ்வொரு சுளையும் நல்லா இனிப்பா இருக்கும்.

யாருக்கெல்லாம் பலாப் பழம் சாப்பிடப் பிடிக்கும்.
பலாப்பழம் (Artocarpus heterophyllus / ஆர்டோகார்பஸ் ஹெட்டோரோபில்லஸ்) இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டது. குறிப்பாக தென்மேற்கு இந்தியாவில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைகளின் மழைக்காடுகளில் வளரும் மரமாகும். இது 3,000 முதல் 6,000 ஆண்டுகளாக இப்பகுதியில் பயிரிடப்படுகிறது. கேரளா மற்றும் தமிழ்நாடு போன்ற தென் மாநிலங்களில் ஒரு முக்கிய உணவாகும்.
பலா மரம் வெப்பமண்டல தாழ்நிலங்களுக்கு மிகவும் பொருத்தமானது. உலகின் வெப்பமண்டலப் பகுதிகளில், குறிப்பாக தெற்காசியாவிலிருந்து தென்கிழக்கு ஆசியா மற்றும் ஓசியானியா வரை பரவலாக பயிரிடப்படுகிறது.
இதை பசுமையான மரம் அதாவது எவர்கிரீன் மரம்ன்னு சொல்வாங்க. ஏன் தெரியுமா?
பசுமையான மரம் அப்டீன்னா இலையுதிர் மரங்களைப் போல பருவகால மாற்றத்தில் உதிர்ந்து போகாது. வருஷம் முழுவதும் அதோட இலைகளை மரத்தில நம்மால பாக்க முடியும். ஒரு இலை பழுத்து உதிர்ந்தா அடுத்ததா புதில அங்க வளர்ந்துடும். அதனால அவை தொடர்ந்து ஒளிச்சேர்க்கை / photosynthesis நடக்க தடை வரவே வராது. அதனால பலாமரம் வருஷம் முழுவதும் பசுமையாகவே இருக்கும். இததான் எவர்கிரீன் மரம்னு சொல்வாங்க.
உங்களுக்கு தெரியுமா சுட்டீஸ்? பழங்களிலேயே பலாப்பழம்தான் ரொம்ப பெரிய பழம். இது 55 கிலோ (120 பவுண்டுகள்) எடை, 90 செ.மீ (35 அங்குலம்) நீளம் மற்றும் 50 செ.மீ (20 அங்குலம்) விட்டம் கொண்டது. ஆச்சர்யமா இருக்குல்ல!
அதே மாதிரி இன்னொரு ஆச்சர்யம் தெரியுமா? ஒரு பலாமரம் வருடத்திற்கு சுமார் 200 பழங்களை உற்பத்தி செய்யுமாம். அடேங்கப்பா!
பல வருடப் பழைய மரங்கள் ஒரு வருடத்தில் 500 பழங்கள் வரை தாங்கும்.
உண்மையில நாம பாக்கற அந்த பெரிய பழம் ஒரு பழமில்ல.. ஆனா பல பழங்களின் தொகுப்பு. பல பழங்கள் ஒன்றா இணைந்து ஒரு பெரிய பழமா நமக்கு காட்சியளிக்கிது. ஆங்கிலத்தில அதை காம்பவுண்ட் ஃப்ரூட் / compound fruit ன்னு சொல்வாங்க.

அதாவது நூற்றுக்கணக்கான முதல் ஆயிரக்கணக்கான தனிப்பட்ட பூக்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஒரே பழமா வளருவதைதான் காம்பவுன்ட் ஃப்ரூட் அல்லது கூட்டுப்பழம் அப்டின்னு சொல்வாங்க.
தனி பழம், கூட்டுப் பழம் பத்தியெல்லாம் நீங்க பெரிய வகுப்புகளில் படிப்பீங்க.
பலாப்பழத்தில் என்னென்ன சத்துக்கள் இருக்குன்னு பாக்கலாமா!
பலாப்பழத்தில நிறைய ஊட்டச்சத்து இருக்கு சுட்டீஸ்.
இதில நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் வைட்டமின்கள் ஏ மற்றும் சி இருக்கு. இது உணவு செரிமானம் அதாவது டைஜெஷனுக்கு ரொம்ப நல்லது. இரத்த சர்க்கரை கட்டுப்பாடு, இதய ஆரோக்கியம் மற்றும் அதிகரித்த நோய் எதிர்ப்பு சக்தி உள்ளிட்ட பல ஆரோக்கிய நன்மைகளை குடுக்குது.
இது எடை மேலாண்மைக்கு அதாவது. weight management க்கு ஏத்த நல்ல உணவாகும். ஏன்னா இதில குறைந்த கலோரி, அதிக நார்ச் சத்து உள்ளது. இயற்கையாகவே இறைச்சிக்கு மாற்றாக இது செயல்படுகிறது. இது தோல் ஆரோக்கியத்திற்கு உதவி செய்யும்.
பலா மரத்தின் இலைகள் நல்லா பெரிசா நீள்வட்ட வடிவுல அடர் பச்சை நிறத்தில தடியா இருக்கும். இலை மேல எண்ணைப் பசை இருக்கறதால வழவழன்னு இருக்கும்.
உங்களுக்கு தெரியுமா? என்னோட தாத்தா, இந்த பலா இலைகளை பறிச்சி கிண்ணம் (அந்த கிண்ணத்துக்கு தொன்னைன்னு பெயர்.) மாதிரி செய்து குடுத்து அதில கஞ்சி ஊத்தி குடிக்க சொல்வாரு. வாழை இலையில சாப்பிடறது எவ்ளோ நன்மையோ அதே மாதிரிதான் இந்த பலா இலையில கஞ்சி குடிக்கறதும்ன்னு சொல்வாரு. அந்த பலா இலையில செய்த தொன்னையில கஞ்சி குடிக்கறப்ப அது கீழ சிந்தாம குடுக்கறதுதான் எங்களோட பெரிய டாஸ்க். 🤭🤣

கேரளாவில இந்த பலாயிலை தொன்னை வெச்சு இட்லி மற்றும் அடைகள் செய்வாங்க. மங்களூரு மற்றும் கொங்கணி பகுதிகளிலும் பண்டிகைகளுக்காக விசேஷ இனிப்புகள் இந்த தொன்னை வெச்சுதான் செய்வாங்க சுட்டீஸ்!
பயன்கள்:
பலா மரம் தேக்கு மரத்த மாதிரியே நீடித்த, உயர் தரமான கடின மரமாகும். மஞ்சளும் பழுப்பும் கலந்த நிறத்தில இந்த மரம் இருக்கும். இந்த மரத்தை கரையான் எதிர்ப்பு மரம்னு சொல்லலாம். ஏன்னா கரையான்களால இந்த மரத்தை அவ்ளோ ஈசியா அரிச்சிட முடியாது.
பலவிதமான கலைப் பொருட்கள், இசைக்கருவிகள் மற்றும் கட்டுமானப் பொருட்களுக்கு இது பயன்படுத்தப்படுது.
நீடித்த கதவுகள், ஜன்னல்கள் மற்றும் கோயில் கலைப் பொருட்கள் மற்றும் பூஜைகள் மற்றும் சடங்குகள்ல பயன்படுத்தப்படும் முக்காலிகள் போன்ற புனிதப் பொருட்களை செய்யவும் பலா மரம் பயன்படுத்தப்படுது.
இனிமையான இசையெழுப்பக் கூடிய வீணை என்ற இசைக்கருவி பலாமரத்திலதான் செய்யப்படுகிறது சுட்டீஸ்.

பலா மரத்தை கரையான் அரிக்காதுன்னு சொன்னேன்ல.. உப்பும் புளியும் கூட சில பொருட்களை அரிக்கும் தன்மை கொண்டதில்லையா. ஆனா பலா மரத்தை உப்பும் புளியும் கூட அரிக்க முடியாதாம் சுட்டீஸ்! 😮 அதனாலதான் பழங்காலத்தில உப்பையும் புளியையும் போட்டு வெச்சிக்க பலா மர ஜாடிகள் பயன்பட்டிருக்கு. எவ்ளோ ஸ்ட்ராங்கான 💪 மரம்ல சுட்டீஸ்.

பழுத்த பலாப்பழத்தின் சுளைகளை அப்டியே சாப்பிடலாம். பழுக்காத பலாச்சுளைகளை வறுவலாகவும் பொரியலாகவும் செய்து சாப்பிடலாம்.
முழுசா விளையாத பலாக்காயை பலா மூஸ் என்று சொல்வாங்க. அதைதான் இப்பல்லாம் இறைச்சிக்கு பதிலா பிரியாணில போடறாங்க.
யாருக்கெல்லாம் பலாக்காய் பிரியாணி பிடிக்கும். கமென்ட்ல சொல்லுங்க.
பலாக் கொட்டைகளையும் கூட சுட்டும் வேகவைத்தும் நம்ம விருப்பப்படி சாப்பிட முடியும் சுட்டீஸ்.
பலா மரம் மொரோசீயே என்ற குடும்பத்தைச் சேர்ந்த தாவரம். இந்த குடும்பத்தைச் சேர்ந்த மற்ற மரங்களைப் பத்தி தெரிஞ்சா உங்களுக்கு ரொம்ப ஆச்சர்யமா இருக்கும் சுட்டீஸ்.
அது என்னென்னன்னு சொல்லட்டுமா?
அத்திமரம், ஆலமரம், அரச மரம், ரப்பர் மரம் இதெல்லாம் பலா மரத்தின் குடும்பத்தைச் சேர்ந்த பெரிய மரங்கள்.
மல்மெரி என்று சொல்லப்படும் இனிப்பான பழங்களைக் கொண்ட செடிகளும் இந்த மெரேசியே குடும்பத்தைச் சேர்ந்த தாவரம்தான். இந்த மல்மெரி இலைகளைதான் பட்டுப்புழுக்களுக்கு உணவாகத் தருவார்கள்.
பழங்காலத்தில் காகிதம் தயாரிக்கவும் துணிகள் தயாரிக்கவும் பயன்பட்ட பேப்பர் மல்மெரி என்ற தாவரமும் இந்த மொரேசியே குடும்பத்தைச் சேர்ந்த தாவரம்தான்.
இந்தக் குடும்பத்தின் தாவரங்கள் லேட்டக்ஸ் எனப்படும் பால் நிறைந்ததாக உள்ளது. இந்த தாவரப் பால் தான் ரப்பராகவும் காகிதமாகவும் துணிகளாகவும் இன்னும் பல முறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது.
என்ன சுட்டீஸ்!
பலா மரத்தைப் பத்தி இன்னிக்கு நிறைய தகவல்கள் தெரிஞ்சிக்கிட்டீங்களா?
அடுத்த பதிவுல இன்னொரு தாவரத்தைப் பத்தின தகவலகளோட வரேன். அதுவரை சமத்தா இருக்கணும். சரியா?
டாட்டா! பை! பை!
👋👋👋👋👋👋
– அன்னபூரணி தண்டபாணி
