வேண்டா சுமை

அம்மா புவனேஸ்வரி அனிதாவை சமாதானப்படுத்தும் நோக்கத்தில்,
“விடு! இதைப்பற்றியே நினைத்துக்கொண்டு இருக்காதே. வீண் மனக்கசப்பும், வேதனையும் தான் மிஞ்சும்.” என்றாள்.
“அது எப்படி? சுபா செய்தது தவறு இலையா? ‘ஐ ஹேட் ஹர்'” என்று விசும்பினாள்.
விஷயம் இதுதான். அனிதாவின் தோழி, சுபா அவளைத் தவிர்த்துவிட்டு, அவள் அறியாமல் வேறு ஒரு சிநேகிதிகளின் குழாத்தோடு சர்க்கஸ் சென்றுவிட்டிருந்தாள். அனிதா இது பற்றிக் கேட்கவும், மழுப்பலாக பதில் சொல்ல, தான் தனித்து விடப்பட்டதாக உணர்ந்தாள். அனிதாவிற்கு சுபாவின் மேல் வெறுப்பின் கசப்பும், சொல்லொணா கோபமும் , ஆற்றாமையும் ஏற்பட்டது.

புவனேஸ்வரி இதை மாற்ற ஒரு திட்டம் வகுத்தாள். சிறிதாய் ஒரு கோலிக்குண்டை உள்ளங்கையில் கொடுத்து, கை மூடி இருக்குமாறு பணித்தாள். சிறிது நேரத்தில் அனிதாவுக்கு கை வலித்தாற் போல இருக்க,

படம் – அப்பு சிவா


“அம்மா! கையை விரிக்கலாமா?” என்று கேட்டாள். புவனேஸ்வரி தலையசைத்து மறுக்கவே,
“அம்மா! ரொம்ப வலிக்கிறது. கோலி குண்டு இவ்வளவு கனமாக இருக்குமா?” என்று வினவினாள்.
“கோலிக்குண்டு கனமில்லை. அதைக் கையில் வைத்திருப்பது தான் இடர். வெறுப்பும் அதே போல் தான். வெறுப்பை மனதில் ஏற்றி வைத்திருப்பதுதான் இடறல். இப்போது கோலிக்குண்டை தூக்கிப் போடு. கை வலி தணியும். அதே போல் தான் சுபாவின் மேலிருக்கும் வெறுப்பை மனதிலிருந்து வெளியே தூக்கி எறி. மனம் இறகு போல் லேசாகும். வெறுப்பை சுமக்க, சுமக்க, மனம் பாரம் தாங்காமல் துன்புறும். அது தன்னம்பிக்கையை குறைத்து, பொறாமைக்கு வித்திடும்.” என்று பேசிக்கொண்டே வாசல் பக்கம் பார்த்தவள்,
“வா! சுபா!” என்றாள். சுபா அனிதாவிடம் வந்து ஏதோ சொல்ல முயன்றாள். அவள் மேல் இருந்த வெறுப்பை வெளியே தூக்கி எறிந்த அனிதா அவளைப் பேசவிடாமல்,
“வா நாம் போய் ஊஞ்சல் ஆடலாம்.” என்று அழைக்க, மனக்கீறல் இருந்த இடம் தெரியாமல் மறைந்தே போயிற்று.

– சசிகலா விஸ்வநாதன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *