சிவப்பு நிற மிதிவண்டி

நூல்: சிவப்பு நிற மிதிவண்டி
ஆசிரியர்: சோம. வள்ளியப்பன்
பக்கம்:171
பதிப்பகம்: கிழக்கு
விலை: ₹210

ஒரு சின்னக் குடும்பம். அந்தக் குடும்பத்தில் உள்ள பையன் கபிலன் கடைவீதிக்குச் செல்லும் போது சிவப்பு நிற மிதிவண்டி வேண்டும் என்று ஆசைப்பட்டு அப்பாவிடம் கேட்கிறான். அவனுடைய அக்கா மல்லிகா. நடுத்தர வர்க்க குடும்பத்தில் வாழும் அப்பா தற்போது மிதிவண்டி வாங்க காசு இல்லை என்று கூறுகிறார். மகள் டெபிட் கார்டில் வாங்கச் சொல்கிறாள். தந்தையும் தாயும் குழந்தைகளுக்கு டெபிட் கார்டு என்றால் என்ன? கிரெடிட் கார்டு என்றால் என்ன? என்று விளக்கமாகக் கூறுகிறார்கள். குழந்தைகளுக்குப் புரியும் வகையில் பொருளாதாரம் பற்றிச் சிறப்பாகக் கூறுகிறார் ஆசிரியர் சோம.வள்ளியப்பன். உதாரணத்துடன் விளக்கிச் சொல்வதால் அனைவருக்கும் புரியும் வகையில் உள்ளது.

பங்குச்சந்தை வர்த்தகம், பொருளாதாரம், உணர்வு மேலாண்மை, சுய முன்னேற்றம், நிர்வாகவியல், மனிதவள மேம்பாடு, நிதி நிர்வாகம் உள்ளிட்ட துறைகளில் பல புகழ்பெற்ற நூல்களை எழுதியவர் டாக்டர் சோம. வள்ளியப்பன். துறைகள் சார்ந்த செழிப்பான அனுபவமும் நிபுணத்துவமும் கொண்டிருக்கும் இவர் தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைத்துறை ஊடகங்களில் தொடர்ந்து இயங்கி வருகிறார். எமோஷனல் இன்டலிஜென்ஸில் ஆய்வு செய்து சென்னை பல்கலைக்கழகத்தில் பிஎச்டி பட்டம் பெற்றவர். சொற்பொழிவுகள் மற்றும் பயிற்சி வகுப்புகள் மூலம் பல ஆயிரக்கணக்கான மக்களுடன் தொடர்ந்து உரையாடி வருபவர். இந்நூலுக்காக பல மாணவர்களிடம் நேரடியாக உரையாடி இருக்கிறார். அதோடு பள்ளிகளில் ஆசிரியர்களிடம் பேசி 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களிடம் கேள்விகள் கேட்டு அனுப்பும் படி செய்திருக்கிறார். அந்தக் கேள்விகளை வகைப்படுத்தி,வரிசைப்படுத்தி அவற்றில் பல கேள்விகளுக்கான பதில்களை இந்தப் புத்தகத்தில் கொடுத்திருக்கிறார்.

டெபிட் கார்டில் பொருள் வாங்கும் போது வட்டி கட்ட வேண்டும். அத்தோடு கட்டணம் சரியான நேரத்தில் கட்டவில்லை என்றால் அபராதமும் கட்ட வேண்டும் என்றும் சொல்லும்போது அவசியத்துக்கு மட்டுமே கிரெடிட் கார்டு உபயோகப்படுத்த வேண்டும். அனாவசியமாக எல்லாத்துக்கும் உபயோகித்தால் நாம் தான் கஷ்டப்பட வேண்டும் என்கிறார்.

அடுத்த அத்தியாயத்தில் இளங்கோ குடும்பத்தினர் நல்ல கடன், கெட்ட கடன் பற்றி சுவாரசியமாக கலந்துரையாடல் செய்கிறார்கள். பணம் பற்றி பேசு தமிழ் சொற்களைப் பயன்படுத்த வேண்டிய அவசியத்தையும் கூறுகிறார். குறைந்தபட்சம் கலப்பில்லாத தமிழில் பேச வேண்டும் முடிந்தவரை தமிழில் எழுத வேண்டும் படிக்க வேண்டும் என்று குழந்தைகளுக்கு அறிவுரை வழங்குகிறார் கபிலன் அப்பா. வங்கி என்பது என்ன? அது எவ்வாறு செயல்படுகிறது? காசோலை ஜி பே, நெட் ட்ரான்ஸ்பர், யுபிஐ இவை பற்றியும் பேசுகிறார்.

வங்கி கிட்ட பணம் கொடுத்து வைக்கிறவங்களுக்கு வட்டி கொடுக்கும். பணத்தைக் கடன் வாங்குகிறவர்கள் கிட்ட இருந்து வட்டியை பெற்றுக் கொள்ளும் என்று சுலபமாக புரியும் வகையில் வங்கியின் செயல்பாடுகளை அருமையாக விளக்குகிறார் ஆசிரியர்.

கடனில் இரண்டு வகை இருக்கிறது ஒன்று செலவு செய்ய வாங்குவது, இன்னொன்று முதலீடு செய்ய வாங்குவது என்றும், நிலம், வீடு, தங்கம், வெள்ளி, பங்குகள் போன்ற மதிப்பு உயர்ந்து கொண்டே செல்லும் பொருட்களில் முதலீடு செய்வது நல்ல கடன் என்றும், கல்வி கடன் கூட நல்ல கடனில் தான் வரும் என்றும், தங்களால் கட்டுப்படுத்த இயலாத ஆசைகளுக்காகத் தவிர்க்கக்கூடிய பொருட்களைக் கடன் பெற்று வாங்குவது சரியல்ல! அதுவே கெட்ட கடன் என்றும் கூறுகிறார்.

பணக்காரராவது எப்படி? என்று அத்தியாயத்தில் சேமிப்பு தான் சிறந்த செல்வம். சிறு துளி பெருவெள்ளம், சேமிக்கிற பணத்தோட அளவு மற்றும் சேமித்த பணத்தை அவர் எதில் முதலீடு செய்து பெருக்குகிறார் என்பதையும் பொறுத்து அவர் பணக்காரர் ஆக முடியும். வருமானம் வேண்டும். சொத்து இருந்தாலும் அதனால் வருமானம் இல்லை எனில் சேமிக்க முடியாது. சொத்தை வைத்து வருமானம் பெருக்க வேண்டும் என்கிறார். உதாரணமாக மாடு, ஆடு,கோழி போன்றவை சொத்து வகையில் வரும். அதனை வைத்து வருமானம் பார்க்க இயலும் என்கிறார். அதே இடம் மட்டும் இருந்தால் அது சொத்தாக மட்டுமே இருக்கும். அதில் எந்த வருமானம் இருக்காது என்கிறார்.

திருக்குறளில் பணம் பற்றி பொருள் செயல்வகை என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறியதை எடுத்துக் கொண்டு குழந்தைகளுக்கு கூறுகிறார்.

வங்கியில் கடன் பெறுவது ஒருவரின் சிபில் ஸ்கோர், கந்து வட்டி, ஜி எஸ் டி, மானிய விலை என்று பொருளாதாரத்தில் உள்ள எல்லாவற்றையும் பேசுகிறார்.

டிஜிட்டல் அரஸ்ட் என்பது பொய் என்றும் ஆன்லைன் மோசடிகள் குறித்தும் சொல்லும் போது படிக்கும் நமக்கும் இது முக்கியமானது என்று புரிகிறது.பணவீக்கம் என்றால் என்ன? கருப்பு பணம் என்பது என்ன? கள்ள நோட்டும்,கருப்பு பணமும் ஒன்றா? ஒவ்வொரு நாட்டிற்கும் பணம் ஏன் வேறு வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது? அமெரிக்க டாலரை சர்வதேச பணம் என்று அழைப்பது, பணத்தில் எத்தனை மொழிகள் உள்ளது? ரூபாய் தாள்கள் ஏன் பல நிறங்களில் வெளி வருகிறது என்று கேள்விகள் யாவும் புதிதாகவும் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியதாகவும், சலிப்பு இல்லாமலும் இருக்கிறது.

கதை நாடகம் கவிதை போன்றவற்றை எழுதுவதும் எளிது ஆனால் பொருளாதாரம் பணவீக்கம் கருப்பு பணம் முதலீடு டெபிட் கார்டு கிரெடிட் கார்டு போன்ற விடயங்களை குழந்தைகள் புரிந்து கொள்ளும்படி விளக்குவது கடினம் நூலாசிரியர் இவற்றை அருமையாக செய்திருக்கிறார் இதற்கான அவருடைய முயற்சி பாராட்டப்பட வேண்டிய ஒன்று. இக்காலத்தில் தங்களின் சக்திக்கு மீறி பிள்ளைகளுக்கு பணத்தை பெற்றோர் செலவு செய்கிறார்கள் கடன் வாங்க தயங்குவதில்லை இஎம்ஐ கட்டியே சோர்ந்து போகிறார்கள் வரவுக்கு மீறி செலவு செய்கிறார்கள் தேவைக்கு அதிகமாக பொருட்களை வாங்குகிறார்கள் நுகர்வு கலாச்சாரத்தின் பிடியில் அகப்பட்டு கொண்டு சிரமம் தெரியாமல் குழந்தைகளை வளர்க்கிறார்கள். பெண்களுக்கு மட்டும் இலவச பேருந்து ஏ என்று ஒரு மாணவன் கேள்வி கேட்கிறான். அதற்கு ஆசிரியரின் பதில் சிறப்பு.

குடும்பமாக பேசும் போதும், பள்ளியில் மாணவர்களுடன் பேசும் போதும், அதே பள்ளியில் பெற்றோர்,ஆசிரியர்கள் முன்பு பேசும் போதும் ஒவ்வொரு கேள்விக்கும் நிதானமாக இளங்கோ பதில் சொல்வது சிறப்பாக இருந்தது.

அடிப்படை பொருளாதார அறிவை வளர்க்க உதவும் இந்நூலை பள்ளியில் பாடமாகவும் வைக்கலாம் என்று கருதுகிறேன்.

ங்கு சந்தை முதலீடு குறித்த தெளிவும், புரிதலும் இல்லாததால் தான் பலரும் பணத்தை இழந்தார்கள். இழக்கிறார்கள். ஏமாந்து போகிறார்கள். மொத்தத்தில் சிவப்பு நிற மிதிவண்டி குழந்தைகளும் பெரியவர்களும் விருப்பத்துடன் பயணம் செய்யும் வண்டியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

– ஜெயா சிங்காரவேலு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *