ஒரு பெரிய காடு.
அந்த காட்டில் எல்லா விதமான விலங்குகளும் வாழ்ந்து வந்தன. அந்தக் காட்டில் இருந்த யானைக்கு நிறைய மூங்கில் சாப்பிட வேண்டும் என்று ஆசை.
கழுகிற்கு பெரிய பறவையாக மாறி பெரிய்ய விலங்குகளைப் பிடித்துத் தின்ன ஆசை.
வெட்டுக்கிளிக்கு டீவி பார்க்க வேண்டும் என்று ஆசை.
ஒரு நாள் காட்டில் ஒரு கல் ஒளிர்ந்தது.
அதை யானை ஆர்வத்தோடு தொட்டது. உடனே அதற்கு உண்ண நிறைய மூங்கில் செடிகள் கிடைத்தன. இதைப் பார்த்த வெட்டுக்கிளி அதுவும் போய் அந்த மந்திரக் கல்லைத் தொட்டது. உடனே அதற்கு ஒரு டீவி கிடைத்தது.
இதைப் பார்த்த கழுகு “இந்த மந்திரக் கல்லுல ஏதோ சக்தி இருக்கு” என நினைத்து அதைத் தூக்கிக் கொண்டது. உடனே கழுகு ரொம்ப பெரிதாக வளர்ந்து விட்டது.

அது உடனே யானையைச் சாப்பிடப் போனது. யானையின் மீது கழுகின் நிழல் விழுந்தது. யானை நிமிர்ந்து பார்த்தது. ஆனால், மீண்டும் குனிந்து மூங்கிலைத் தின்னத் துவங்கி விட்டது.
“என்ன! நான் இவ்ளோ பெரிசா இருக்கேன். என்னைப் பார்த்து உனக்கு பயமா இல்லையா?” எனக் கேட்டது கழுகு.
“அடேய் கழுகே! அந்தக் கல்ல நான் தான் என் சக்தியால உருவாக்கினேன். அந்தக் கல்லுக்கே அவ்ளோ சக்தி இருந்தா எனக்கு எவ்ளோ சக்தி இருக்கும்?” என அலட்சியமாக சொன்னது.
இதைக் கழுகு நம்பி விட்டது.
“அய்யோ யானை அண்ணே, என்னை மன்னிச்சிடுங்க. நான் சும்மா காமெடி பண்ணேன்.” என சொல்லி விட்டு பறந்தே போய் விட்டது.
கழுகு சென்றதும், யானைத் தன் அம்மாவிடம் சென்றது.
“அம்மா உங்களுக்கு ஒன்னு தெரியுமா? பெரிய இராட்சச கழுகு என்ன சாப்பிட வந்தது. நான், நாந்தான் அந்த கல்ல உருவாக்கினேன்னு நம்புற மாதிரி சொன்னேனா.. கழுகு பயந்து ஓடிடுச்சு.” என்றது.
“புத்திசாலி!” என பாராட்டியது அம்மா யானை.
இரண்டும் சிரித்தன.
– கதை: சு.ரா.கவின்கிருஷ்ணா, 3ம் வகுப்பு
– எழுத்து: ராஜலட்சுமி நாராயணசாமி
