ஹாய் சுட்டீஸ்!

எல்லாருக்கும் ஆண்டுத் தேர்வு நெருங்கிட்டிருக்கும். அதனால எல்லாம் புத்தகமும் கையுமா இருப்பீங்கல்ல! அதனால உங்கள அதிகமா தொந்திரவு செய்யாம சுத்திச் சுத்தி வந்தீக பகுதியில உங்க எல்லாருக்கும் நன்கு பரிச்சயமான தாவரத்தைப் பற்றிய தகவல்கள் மட்டும் சொல்லிடலாம்னு வந்தேன்.

இந்த மாதம் நாம பார்க்கப் போறது வேம்பு என்று சொல்லப்படுகிற வேப்பமரம்.

அநேகமா வேப்பமரத்தை நீங்க எல்லாருமே பார்த்திருக்கலாம். உங்க வீடுகளில் பள்ளிக்கூடத்தில் கோவில்களில் சாலையோரங்களில் என்று நம்மைச் சுற்றி எல்லா இடத்திலயும் வேப்பமரங்கள் நீக்கமற நிறைஞ்சிருக்கு.

Courtesy – Internet

இந்தியாவைத் தாயகமாகக் கொண்டது வேம்பு.

வேம்பில் கருவேம்பு, மலைவேம்பு, நிலவேம்பு, சர்க்கரை வேம்பு எனப் பல வகைகள் இருந்தாலும், சாதாரண வேப்பமரமே (கருவேம்பு) மருத்துவ குணங்களுக்குப் பெயர் பெற்றது.
கருவேம்பு : இதுதான் வீடுகள் மற்றும் சாலை ஓரங்களில் அதிகமாக வளரும், கசப்புத் தன்மை கொண்ட, அதிக மருத்துவப் பயன்கள் கொண்ட மரம்.
மலைவேம்பு : இது வேகமாக வளரக்கூடியது, நேராக உயரமாக வளரும், கட்டுமானப் பணிகளுக்கும், மரச்சாமான்கள் செய்யவும் பயன்படுகிறது.
நிலவேம்பு : இது ஒரு சிறு செடி வகை (சிறிய மரம்), காய்ச்சல் மற்றும் டெங்கு போன்ற நோய்களுக்குச் சிறந்த மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.
சர்க்கரை வேம்பு : இது கசப்புத் தன்மை குறைவாக இருக்கும் வேம்பு வகை.

வேம்பின் பயன்கள்: வேப்பமரத்தோட வேர்கள், தண்டு, இலைகள், பூக்கள், காய் மற்றும் கனிகள், வேப்பங்கொட்டைகள் என்று அதன் அனைத்து பகுதிகளும் பயனுள்ளவைதான்.

இது மருத்துவப் பயனுள்ள தாவரமாகும். வேப்பமரத்தை சர்வ ரோக நிவாரணின்னு சொல்வாங்க. அதாவது எல்லா நோய்களையும் குணப்படுத்தக் கூடிய மருந்துன்னு பொருள். வேம்பின் இலைகள், பட்டை, விதைகள், எண்ணெய் மற்றும் பூக்கள் அனைத்தும் கிருமிநாசினியாகவும், தோல் நோய்கள், சர்க்கரை நோய், குடல் புழுக்கள் மற்றும் காய்ச்சல் போன்ற பல்வேறு நோய்களுக்கான ஆயுர்வேத மருந்துகளில் பயன்படுத்தப்படுகின்றன.

Courtesy – Internet

நீங்க மாரியம்மன் கோயில்களிலும் மாரியம்மனுக்கு செய்யப்படும் பூஜைகளிலும் வேப்பிலைகள் அதிகம் பயன்படுத்துவதைப் பார்த்திருப்பீங்க.

இது எதுக்குன்னா வேப்பிலைகள் அதிக குளிர்ச்சியைக் கொடுக்கும்; அதிக ஆக்சிஜனைக் கொடுக்கக் கூடிய தாவரம். அதனாலதான் வேப்பிலைகளை புனிதமான பொருளாகக் கருதி பூஜைகளில் ஒரு முக்கியமான பொருளாக சேர்த்திருக்காங்க.

வேம்பின் தாவரவியல் பெயர் அசாடிராக்டா இண்டிகா (Azadirachta indica) என்பதாகும். இது மெலியேசீ (Meliaceae) குடும்பத்தைச் சேர்ந்த தாவரமாகும்.

இந்த மெலியேசீ குடும்பத்தின் தாவரங்களை பொதுவாக மாஹாகோனி என்று அழைப்பார்கள்.

இந்தக் குடும்பத்தின் தாவரங்கள் எல்லாம் நல்ல வாசனையுடன் இருக்கும். கசப்பு சுவையுடன் இருக்கும். இதன் மரம் (wood / timber) மரச்சாமான்கள் செய்யப் பயன்படும். மற்றும் இக்குடும்பத்தின் பொரும்பாலான தாவரங்கள் மருத்துவப் பயன்பாடு உடையவை.

சில தாவரங்கள் நல்ல நறுமணத்துடன் இருப்பதால் வாசனை திரவியங்கள் தயாரிப்பிலும் அலங்காரப் பொருட்கள் தயாரிப்பிலும் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

வேப்பம் பூவுக்கு ஒரு தனிப்பட்ட வாசம் உண்டு. அது காற்றில் பரவும்போது அந்த இடம் முழுதுமே சுத்தமான காற்றால் நிரம்பிவிடும்.

அதே போல வேப்பங்கொட்டைகளிலிருந்து வேப்பெண்ணெய் தயாரிப்பது உண்டு. வேப்பெண்ணெயால் விளக்கேற்றி வைத்தால் கொசுக்கள் அவ்விடத்திலிருந்து ஓடிவிடும். இது ஒரு சிறந்த இயற்கை கொசு விரட்டியாகச் (mosquito-repellent) செயல்படுகிறது.

என்ன சுட்டீஸ்! வேப்ப மரத்தைப் பற்றி இன்னிக்கு நிறைய விஷயங்கள் தெரிஞ்சிகிட்டீங்கதானே!

அடுத்த பதிவுல இன்னொரு தாவரத்தைப் பத்தின சுவாரசியமான தகவல்களோட வரேன். அதுவரை சமத்தா இருக்கணும். சரியா?
டாட்டா! பை! பை!
👋👋👋👋👋👋

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *