சமையலை முடித்து விட்டு வெளியில் வந்த பிரகதி, தன் தங்கை மகள் ஸ்ருதி மட்டும் வெளியில் சோர்ந்து போய் அமர்ந்திருப்பதைப் பார்த்தவள், அவள் அருகில் போய் அமர்ந்தாள். “என்னடா குட்டி இங்க வந்து உட்கார்ந்து விட்டாய், என் செல்லத்துக்கு என்ன ஆச்சு? அண்ணா அக்காகோட விளையாடலையா?”என்று கேட்டு விட்டுத் திரும்பி தன் குழந்தைகளை அழைத்தாள்.

“இதோ வரோம் மாம்” என்ற சத்தத்துடன் ஆளுக்கொரு போனில் அந்த அபார்ட்மென்ட்  பசங்களுடன், ஆன்லைன் கேம் விளையாடிக் கொண்டே வந்தார்கள். 

“அபிநவ், அபிநயா இரண்டு பேரும் என்ன பண்றீங்க? கிராமத்திலிருந்து ஸ்ருதி குட்டி வந்திருக்கா, அவகூட விளையாடாம இப்படி ஆளுக்கொரு போன்ல விளையாடறீங்களே! பாருங்க ஸ்ருதிகுட்டி பாவமா உட்கார்ந்திருக்கா?இது தான் நீங்க இரண்டு பேரும் அவளைக் கவனித்துக்கொள்ளும் லட்சணமா?” என்று கடிந்து கொண்டார்.

“ஸாரி மாம்! நாங்க ஸ்ருதிய விளையாடக் கூப்பிட்டோம், அவ வரமாட்டேங்கறா. நாங்க என்ன பண்ணட்டும்?” என்றார்கள் இருவரும்.

“அப்படியா? ஏன் ஸ்ருதி உனக்கு அண்ணா , அக்காவோட விளையாட பிடிக்கவில்லையா?” என்றார் பிரகதி. “எனக்கு இந்த விளையாட்டு பிடிக்கவில்லை பெரியம்மா. எங்க ஊரில் நாங்கெல்லாம் எவ்வளவு ஜாலியாக விளையாடுவோம் தெரியுமா? அது தான் பிடித்திருக்கு பெரியம்மா. என்னை எங்க வீட்டில் கொண்டு போய் விடுங்க”,  என்று தயக்கத்துடன் கேட்டாள் ஸ்ருதி.

“அச்சச்சோ என் தங்கம் இதுக்காக எல்லாம் வருத்தப் படக் கூடாது. இப்ப என்ன நீ அது மாதிரி விளையாடனுமா?, இதோ அண்ணாவையும் அக்காவையும் கூட்டிட்டு போய் விளையாடுங்க”, என்றாள்.  “பெரியம்மா அந்த மாதிரி விளையாட நிறைய பேர் வேண்டும்”, என்றாள் ஆர்வத்துடன்.

“அவ்ளோ தானே! அபிநவ்! உன் கூட ஆன்லைன்ல விளையாடறவங்களை எல்லாம் கூட்டிட்டுப் போய் விளையாடுடா. ஸ்ருதிகுட்டிக்கும் ஆசையாக இருக்கும்ல?”  என்று தன் மகளிடமும் மகனிடமும் கண்டிப்புடன் சொல்லவும், அவர்கள் வேறு வழியில்லாமல் போனிலேயே எல்லா நண்பர்களையும் கிரௌண்டிற்க்கு வரச்சொன்னார்கள்.

இவர்களும் ஸ்ருதியை அழைத்துக் கொண்டு கிரௌண்டிற்குச் சென்றார்கள். ஸ்ருதி சந்தோஷத்துடன் பெரியம்மாவிடம் சொல்லிக் கொண்டு சென்றாள்.

கிரௌண்டில் இவர்களுக்கு முன்பே நண்பர்கள் காத்துக் கொண்டிருந்தார்கள். அபிநயா ஸ்ருதிக்கு அவர்களை அறிமுகம் செய்து வைத்தாள்.   “ஆதிரா, சஞ்சய், லக்க்ஷனா, நிறைமதி, இனியா, தியா” என்று அறிமுகம் செய்தவள், “இவள் எங்க சித்தி பொண்ணு. கிராமத்தில் இருந்து வந்திருக்கிறாள்”, என்று தன் நண்பர்களுக்கு அறிமுகம் செய்தாள்.

     “சரி சொல்லு ஸ்ருதி! என்ன விளையாடனும்? உனக்குத் தானே தெரியும்”  என்று சொன்னான் அபிநவ். ஸ்ருதி தயங்கியபடியே, “நாம குலைகுலையா முந்திரிக்கா விளையாடலாம்” என்றாள்.

     “சொல்லு! எப்படி விளையாடனும்”, என்றார்கள். அனைவரையும் வட்டமாக அமரவைத்தவள், “அண்ணா டவல் வேணும்”,  என்று சொன்னாள் ஸ்ருதி. இனியா தன் வீடு கீழே இருந்ததால் ஓடிப்போய் எடுத்து வந்தாள்.

அண்ணா இந்த டவலை எடுத்துக்கொண்டு பாடிக்கொண்டே எல்லாரையும் சுற்றி வரவேண்டும்.

kola kolaya

“நான் ஒரு லைன் பாடுவேன், நீங்க எல்லாரும் சேர்ந்து அடுத்த லைன் பாடவேண்டும்” என்றவள், அந்தப் பாட்டை எல்லாருக்கும் சொன்னாள்.

குலை குலையா முந்திரிக்கா..!

நரியே  நரியே  சுத்திவா..!

ஓட்டு வீட்டுல ஏறுவேன்..!

ஈட்டியால குத்துவேன்..!

பச்சரிசியை தின்பேன்..!

பல்ல உடைப்பேன்..!

புழுங்க அரிசியை தின்பேன்..!

புதுப்பல்ல உடைப்பேன்..!

குலை குலையா முந்திரிக்கா..!

நரியே நரியே சுத்திவா..!

ஏணி மேல ஏறுவேன்

கால உடைப்பேன்

குலை குலையா முந்திரிக்கா

கோவில்பட்டி கத்தரிக்காய்…!

கொள்ளை அடிச்சவன் எங்கே இருக்கான்..!

கூட்டத்தில் இருக்கான் கண்டுபிடி..!

என்று பாடி முடித்தவள், “இதைப் பாடிக்கொண்டே சுத்தி வந்து, யார் மேல டவலைப் போடுறமோ, அவங்க எழுந்து  டவலைக் கையில் எடுத்துக்கொண்டு, டவல் போட்டவங்களைத் துரத்த வேண்டும். அவங்க தொடுவதற்குள் டவல் போட்டவங்க, யார் மேல டவல் போட்டாங்களோ அவங்க இடத்தில் வந்து அமர்ந்து கொள்ள வேண்டும்.

அவங்க அமர்வதற்குள் தொட்டு விட்டால்,  அவுட். தொடவில்லை என்றால், அவர்கள் இந்தப் பாட்டை பாடிக்கொண்டு சுற்ற வேண்டும். கடைசி லைன் பாடும் போது  இரு முட்டிங்கால் நெஞ்சிற்க்குப் பக்கத்தில் வருமாறு வைத்து, காலைச் சுற்றிக் கையைப் போட்டுக் கொண்டு, தலையை இரு முட்டிங்காலுக்கிடையில் விட்டுக் கொள்ள வேண்டும்”,  என்று செய்து காண்பித்தாள். அங்கிருந்த அனைவரும் ஆர்வமுடன் விளையாட வந்தார்கள்.

முதலில் இரண்டு முறை அனைவருக்கும் குழப்பத்திலேயே சென்றது . விளையாட விளையாட அனைவருக்கும் பிடித்துப் போய்விட்டது. “இனிமேல் இந்த மாதிரியே விளையாடலாம் ஸ்ருதி. நீ தான் எங்களுக்கெல்லாம் சொல்லித் தரனும்!”, என்றான் சஞ்சய்.

“சரி..” என்று உற்சாகத்துடன் சொன்னாள் ஸ்ருதி. அவங்க அம்மா அப்பா வந்து அழைக்கும் வரை விளையாடியவர்கள்,  “நாளைக்கு வேற விளையாட்டு சொல்லிக் கொடு ஸ்ருதி!” என்று சொல்லி விட்டுச் சென்றார்கள்.

ஹாய் செல்லங்களா! நீங்களும் இந்த விளையாட்டை விளையாண்டு பார்த்து விட்டு உங்களுக்கு பிடித்திருந்துச்சா என்று  எனக்கு கமெண்ட் பண்ணுங்க கண்ணுகளே! நன்றி செல்லங்களே!

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
2 கருத்துகள்
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments