ஹாய் சுட்டீஸ்!
“எல்லாரும் எப்படி இருக்கீங்க? நான் உங்க ரோபோ பிண்டு, நானும் என் தோழி அனுவும் உங்களுக்கு ஒரு தந்திரம் (மேஜிக்) செய்து காண்பிக்கப் போகிறோம். அதை நீங்களும் வீட்டிலேயே செய்து பார்க்கலாம்”.
அனு, “அப்படியா பிண்டு, அந்த மேஜிக்கோட பெயர் என்ன?”
“இந்த மேஜிக்கோட பெயர் ‘நடக்கும் நிறங்கள்’. இதற்கு நான் சொல்லும் பொருட்களை ஓடிச்சென்று எடுத்து வா அனு!”
தேவையான பொருட்கள்
ஒளி புகும் நெகிழிக் கோப்பைகள் (ட்ராண்ஸ்பரண்ட் ப்ளாஸ்டிக் கப்) – 7
அக்ரிலிக் பெயிண்ட்/ வாட்டர் கலர்ஸ்/ போஸ்ட்ர் கலர் – சிவப்பு, நீலம், மஞ்சள் மற்றும் இளஞ்சிவப்பு நிறங்கள்
நீளமான திசு காகிதம் (டிஷ்யூ பேப்பர்) – பதினைந்து.
அனு அடுத்த ஐந்து நிமிடங்களில் அனைத்தையும் கொண்டு வந்தாள்.
பிண்டு, “வெரிகுட் அனு, இப்ப வா செய்முறையைப் பார்க்கலாம்!”
செய்முறை
1. முதலில் மூன்று கோப்பைகளை எடுத்துக் கொண்டு, அதை அருகருகே அடுக்கி வை.. பார்க்கலாம்.
2. முதல் கப்பில் முக்கால் பங்கு தண்ணீரோடு, மஞ்சள் நிறம் சேர்த்துக் கலந்து கொள்.
3. இரண்டாம் கப்பைக் காலியாக விடு.
4. மூன்றாம் கப்பிலும் முக்கால்பங்கு தண்ணீரோடு, நீல நிறம் சேர்த்து கலந்து கொள்.
5. அடுத்து நீண்ட திசு காகிதத்தை நீள வாக்கில் மடித்து, அதன் ஒரு முனையை முதல் கோப்பை தண்ணீரில் மூழ்கும் படி வைத்து, இன்னொரு முனையை காலியான கப்பிற்குள் வை பார்க்கலாம்.
6. மீண்டும் இன்னொரு திசு காகிதத்தை எடுத்து, இரண்டாம் கோப்பைக்கு உள்ளும் மூன்றாம் கோப்பைக்கு உள்ளும் இரு முனைகள் இருக்குமாறு வை.
7. ரொம்ப பிரமாதமா பண்ணிட்ட அனு! இந்தச் செய்முறையைத் தொந்தரவு செய்யாமல், அரைமணி நேரம் அப்படியே வைத்திருக்க வேண்டும் அனு. அப்புறம் வந்து பார்க்கலாம்.
அரைமணி நேரம் கழித்து,
அனு, “வாவ் பிண்டு, காலியா இருந்த இரண்டாவது கப்பில் எப்படி பச்சை நிறத் தண்ணீர் வந்துச்சு. என்ன மேஜிக் இது?
பிண்டு, “இதற்கு பெயர் தான் ‘தந்துகி இயக்கம்’ அதாவது கேப்பிலரி ஆக்ஷன்(capillary action). கப்பில் இருந்த தண்ணீர், திசு காகிதத்தின் சிறு துளைகள் வழியாக பயணித்து அதன் முனையில் முடிகிறது, அப்போது தண்ணீர் காலியான கோப்பையில் நிறைகிறது. காலியான கோப்பைக்கு ஒரு புறம் மஞ்சள், மறு புறம் நீல நிறம் இருப்பதால், இரண்டு சேர்ந்து நடுவில் இருக்கும் கோப்பை பச்சை நிறத்தில் ஆனது. சோ சிம்பிள்!”.
“இந்த டெக்னிக் சூப்பரா இருக்கே பிண்டு, இரு வரேன்” என்று ஓடிய அனு, ஒரு கோப்பையில் சிவப்பு நிற நீரையும், இன்னொரு கோப்பையில் நீல நீரையும் வைத்து, நடுவில் காலியான கோப்பையை வைத்து அதை திசு காகித்தத்தால் மற்ற இரண்டு கோப்பைகளையும் இணைத்தாள். அடுத்த சிறிது நேரத்தில் நடுவில் இருந்த கோப்பை, வயலட் நிற தண்ணீரால் நிரம்பி இருந்தது.
அனுவின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
“என்ன குட்டீஸ் அனுவைப் போல உங்களுக்கும் செய்து பார்க்க ஆசையா? இதே போல் ஏழு கோப்பைகளில் வானவில்லைக் காணலாம். கோப்பை ஒன்றில் சிவப்பு, மூன்றில் நீலம், ஐந்தில் மஞ்சள், ஏழில் இளஞ்சிவப்பு வைத்து, இரண்டு நான்கு மற்றும் ஆறாம் கோப்பையை காலியாக வைத்து, ஒவ்வொரு கோப்பையையும் திசு காகிதத்தால் இணைக்கவும். அப்பறம் பாருங்கள் அற்புதம் உங்கள் கண் முன்னே வரும்”.
இந்த செய்முறையை செய்து பார்த்து எனக்கு மறக்காமல் புகைப்படம் எடுத்து அனுப்புங்கள்.
அறிவியல் உண்மைகள்
செல்லக் குட்டீஸ்! இந்த தந்துகி இயக்கத்தை நாம் எங்கெல்லாம் பார்க்கிறோம் தெரியுமா?
1. மண்ணுக்கு அடியில் உள்ள தண்ணீரை உறிஞ்சும் வேர்கள், அதை இலைகளுக்கு அனுப்புவது இதனால் தான்.
2. கோடை வெயிலில் பருத்தி ஆடைகளில் உள்ள துளைகள், நம் உடலின் வியர்வையை இதன் மூலமே உறிஞ்சுகிறது.
“உங்களுக்கு வேறு ஏதாவது உதாரணம் தெரியுமா? கண்டுபிடித்து வையுங்கள். அடுத்த வாரம் இன்னுமொரு சுவாரஸ்யமான மேஜிக்கோடு வருகிறேன். பாய் டாடா!”
அனு, “டாடா ஃப்ரண்ட்ஸ்! என்னை மாதிரியே நீங்களும் செஞ்சு விளையாடுங்க, பாய்!”
மருத்துவம் சார்ந்த துறையில் இளங்கலை மற்றும் முதுகலை முடித்துள்ளேன். ஒரு மருத்துவ கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றுகிறேன்.கடந்த இரண்டு வருடங்களாக சிறுகதைகள் மற்றும் புதினங்கள் எழுதிக் கொண்டிருக்கிறேன். யூ ட்யூப்பில் ஒலி வடிவ கதைக்களுக்கான சானல் ஒன்றையும் நடத்திக் கொண்டு வருகிறேன்.
மேஜிக் நன்றாக இருந்தது.
நானும் செய்து பார்கிறேன்