வாழ்த்துகள்

திரு. இரவிசங்கர் அய்யாக்கண்ணு அவர்கள்

பூஞ்சிட்டு என்ற பெயரில் குழந்தைகளுக்கான மின்னிதழ் மலர இருப்பதை அறிந்து மகிழ்கிறேன்.
 
கடந்த பிப்ரவரி 2020 முதல், திராவிட வாசகர் வட்டம் சார்பில் அண்ணா நினைவு சிறுவர் கதைப் போட்டி என்னும் போட்டியை நடத்தினோம்.
 
இப்போட்டியில் கலந்து கொண்ட எழுத்தாளர்கள் இடையே ஒரு இயல்பான நட்பு முகிழ்த்து, அவர்கள் இணைந்து சிறுவர்களுக்கான மின்னிதழை வெளியிட முனைந்திருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இதுவே போட்டியை ஒருங்கிணைத்த எங்களுக்கான பரிசாகக் கருதுகிறோம்.
 
என்னுடைய வாசிப்புப் பழக்கம் தொடங்கியதே சிறுவர் நூல்களைப் படித்துத் தான். பள்ளிப் பருவத்தில், சிறுவர் மலர், பாப்பா மலர், அம்புலி மாமா போன்ற பல புத்தகங்கள் வழி இந்த உலகத்தைக் கண்டேன்.
 
அங்கு தொடங்கிய வாசிப்புப் பழக்கம் பிறகு நாவல்கள், புனைவு அல்லாத படைப்புகள், ஆங்கில வாசிப்பு என்று விரிந்தது. வாசிப்புடன் நில்லாமல் கவிதை, கட்டுரை எழுதுதல், பேச்சுப் போட்டி என் திறமைகளை வளர்த்துக் கொள்ள உதவியது. எந்த இதழ்களை எல்லாம் வாசித்து மகிழ்ந்தேனோ, பிறகு அதே இதழ்களுக்கு ஓவியங்கள், துணுக்குகள் அனுப்பி அவை அச்சில் வருவதைக் கண்டு மகிழ்ந்திருக்கிறேன்.
 
வாழ்க்கை முழுதும் தமிழ் மொழியின் மீது பற்று கொள்ள, இலக்கியத்தின் மீது காதல் கொள்ள, நன்னெறிகளின் மீது பிடிப்பு வர இளவயதில் அறிமுகமான சிறுவர் இதழ்களே காரணம்.
 
இன்று இணையம், தொலைக்காட்சி என்று சிறுவர்களுக்குப் பல்வேறு பொழுது போக்குகள் வந்து விட்டாலும்,
 
சிறுவர்களுக்குப் பகுத்தறிவு, கற்பனைத் திறன், நன்னெறிகள், அறிவியல், வரலாறு, நவீன சிந்தனை, சமூக நீதி ஆகியவற்றை அறிமுகப்படுத்தும் இதழ்களின் தேவை தொடர்கிறது.
 
பூஞ்சிட்டு இதழ் இந்தத் தேவைகளைக் கருத்தில் கொண்டு தொடர்ந்து இயங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
 
இதழ் தயாரிப்பில் ஈடுபட்ட ஆசிரியர் குழுவிற்கும், இதழினைப் படித்து மகிழக் காத்திருக்கும் பெற்றோர், ஆசிரியர், சிறுவர்களுக்கும் என் வாழ்த்துகள்.
 
அன்புடன்,
இரவிசங்கர் அய்யாக்கண்ணு,
12 சூலை 2020.

Pages: 1 2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *