மித்து என்கிற மித்தேஷ் மூன்றாம் வகுப்பு படிக்கிறான். படிப்பில் கெட்டி.  மிகவும் சுட்டி. அவனுடைய அப்பா அரவிந்த் ஒரு வங்கி அதிகாரி. அவனுடைய அம்மா மீனாட்சி ஒரு பள்ளி ஆசிரியை.  சென்னை வேளச்சேரியில் ஒரு அடுக்கு மாடிக் குடியிருப்பில் அவர்கள் வசிக்கிறார்கள். அவர்கள் வீடு, மூன்றாம் தளத்தில் உள்ளது.  அவனுடைய பக்கத்து வீட்டில் பார்வதிப் பாட்டியும் பட்டாபி தாத்தாவும் வசிக்கிறார்கள். மித்துவும் பட்டாபி தாத்தாவும் நெருங்கிய நண்பர்கள். அவன் அவரை பட்டு என்றுதான் அழைப்பான். பட்டு தாத்தா அவனுக்கு நல்ல நல்ல கதைகளை கற்பனை வளத்துடன் கூறி அவனுடன் விளையாடுவது வழக்கம். அதோடு கூட தினமும் கதை சொல்லும் போது அந்தக் கதை சம்மந்தமான குட்டி குட்டி பொருட்களை அந்தக் கதை மாந்தர்களே தருவது போல அவனுக்குத் தெரியாமலேயே பரிசாக வழங்குவார்.

சுட்டி மித்துவும் பட்டு தாத்தாவும் தினமும் தங்கள் கற்பனையில் வெவ்வேறு உலகத்துக்கு போய் வருவார்கள். இது அவர்களுக்கு மிகவும் பிடித்த விளையாட்டு. இன்றும் அவர்கள் எங்கே போகிறார்கள் என்று பார்க்கலாமா!

இறகு

மித்து ஆன்லைன் வகுப்பு முடிந்து கணிணி முன்னாலிருந்து எழுந்து வீட்டு ஹாலுக்கு வந்தான்.

அம்மா கொடுத்த சிற்றுண்டியைச் சாப்பிட்டுவிட்டு தன் வீடியோ கேம்ஸை கையில் எடுக்க, அவனுடைய அம்மா,

“நோ மித்து! சும்மா வீடியோ கேம்ஸ் விளையாடாத.. இவ்ளோ நேரம் கம்ப்யூட்டர் பார்த்தல்ல.. கண்ணு கெட்டுப் போகும்..” என்றாள்.

“ம்மா.. ம்ச்..” மித்து தன் கோபத்தைக் காட்ட, பக்கத்து வீட்டு பட்டாபி தாத்தா தன் வீட்டு பால்கனியிலிருந்து அவனைச் சைகை செய்து அழை்தார்.

அவன் மெதுவாக தன் வீட்டு பால்கனிக்குச் சென்று என்னவென்று கேட்டான்.

“மித்து.. நம்ம ரெண்டு பேரும் வௌாடலாமா..” என்று யாருக்கும் கேட்டு விடாமல்  கிசுகிசுப்பான குரலில் தாத்தா கேட்க, மித்து குதூகலமானான்.

“ம்..” என்று தலையாட்டிவிட்டு, “இருங்க.. அம்மா கிட்ட சொல்லிட்டு வரேன்..” என்று அவரைப் போலவே மெல்லிய குரலில் கூறிவிட்டு ஓடினான்.

தாத்தா தன் கையில் எதையோ தயாராய் வைத்துக் கொண்டார்.

“ம்மா.. நா ட்ராயிங் வரைய போறேன்.. என்ன டிஸ்டப் பண்ணாதீங்க..” என்று சொல்லிவிட்டு மீண்டும் பால்கனிக்கு ஓடினான்.

“பட்டு.. நா வண்ட்டேன்..” என்று கூறி பால்கனியின் மூலையில் சென்று அமர, தாத்தா தன் வீட்டு பால்கனியிலிருந்து அவனருகே எதையோ தூக்கிப் போட்டார். அவன் அதை கப்பென்று சரியாய் கேட்ச் பிடித்தான்.

“சூப்பர்டா சுட்டிப்பையா!” என்றார் தாத்தா.

மித்து தன் காலரைத் தூக்கி விட்டுக் கொண்டான்.

“ஆரம்பிக்கலாமா..” தாத்தா திரும்பவும் கிசுகிசுப்பாகக் கேட்க,

“ஓகே பட்டு!” என்று மித்து ஒப்புதல் வழங்கினான்.

தாத்தாவும் அவர் வீட்டு பால்கனியின் மூலையில் வசதியாக அமர்ந்தார்.

“மித்து! ஸ்டார்ட்!” குரல் கொடுத்தார்.

“ட்ர்.. ர்ர்.. ர்ர்..” மித்து தாத்தா தூக்கி எறிந்த பொருளை தன் வாயருகே பிடித்துக் கொண்டு தன் வாயினால் இஞ்சின் கிளம்புவது போல் சத்தமிட,

“ட்ர்.. ர்ர்.. ர்ர்..” என்று பதிலுக்கு தாத்தாவும் சத்தமிட்டார்.

“இன்னிக்கு நாம எங்க போறோம்!” மித்து கேட்டான்.

“இன்னிக்கு நாம பேர்ட்ஸ் (bird) பாக்கப் போறோம்!” தாத்தா பதில் சொன்னார்.

“ஹை.. சூப்பர்..”

“கண்ண மூடிக்கோ..” தாத்தா சொல்ல, மித்து கண்ணை மூடிக் கொண்டான்.

“இப்ப வானத்தில கலர் கலரா பலூன் பறந்து வருது பாரு.. அதுல உனக்கு பிடிச்ச கலர பிடிச்சுக்கோ மித்து..” பட்டு தாத்தா சொல்ல, மித்துவின் கண்களுக்குப் பல வண்ண பலூன்கள் பறந்து வருவதைப் போலத் தோன்ற, அதில் அவனுக்குப் பிடித்த பலூனை எம்பிப் பிடித்தான்.

“என்ன கலர் மித்து..”

“ப்ளூ கல்ர்..”

“சூப்பர்.. நா ரெட் கலர்.. இல்லல்ல.. யெல்லோ கலர்..” தாத்தா குழம்பினார். மித்து சிரித்தான்.

இருவரும் பலூனைப் பிடித்ததும் தாத்தா ஒரு மந்திரத்தைச் சொல்ல இருவரும் பலூனுக்குள் சென்றனர்.

ஒரு ஏரோப்ளேன் ஓட்டுவது போல அந்த பலூனுக்குள் அவர்கள் இருவருக்கும் இருக்கைகள் இருந்தது. அதில் இருவரும் அமர்ந்து கொண்டு அந்த பலூனை அவர்களே ஓட்டினர்.

“ம்.. ரெடி.. ஒன்.. டூ.. த்ரீ..” சொல்லி பலூன் கிளம்பியது. அது மெல்ல மெல்ல எழும்பி மேகத்தைத் தாண்டி வானத்தில் பறந்தது.

“எந்த பக்கம் போனா பேர்ட் (bird)  வரும் பட்டு.” மித்து கேட்க,

“எல்லா பக்கமும் வரும்.. நாம ரைட் சைட் போலாம்!”

இருவம் தங்கள் பலூன்களில் உள்ள ஸ்டியரிங் வீலைத் திருப்ப, இருவருடைய பலூன்களும் வலது பக்கமாகப் பறந்தது.

வழியில் அவர்கள் இருவரும் நிறைய பறவைகளைப் பார்த்தனர்.

“இது என்ன பேர்ட்..”

“அது என்ன பேர்ட்..”

மித்து கேள்வி கேட்டுக் கொண்டே வந்தான்.

“இதான் குருவி! இது இல்லன்னா நம்ம இகோ சிஸ்டமே பாதிக்கும்.. பாவம் இதுங்கல்லாம் இப்ப செல் போன் டவர்கள்ல இருந்து வர ரேடியேஷன்னால நிறைய அழிஞ்சி போய்டுச்சி..” தாத்தா விவரம் சொன்னார்.

“இது தேன் சிட்டு.. அழகா கூடு கட்டும்.. ரொம்ப அழகா பாடும்..”

“இது பாத்தியா.. இதான் மைனா.. அதாவது குயில்.. அழகா கூவுது பாரு..”

“கூஊஊ..” குயில் கூவ, மித்துவும் பதிலுக்கு கூவினான்.

“கூஊஊ..”

“இது பாத்தியா.. இதான் கழுகு.. அதோட கண்களைப் பாத்தியா.. எப்டி ஷார்ப்பா இருக்குன்னு.. அது மாதிரி நம்மளோட டார்கெட் நோக்கி நாம ஃபோகஸ்டா இருக்கணும்..”

தாத்தா, குருவி, மைனா, தேன் சிட்டு, நாரை, மயில், கிளி, மீன்கொத்தி, மரங்கொத்தி, கொக்கு, புறா, காக்கை போன்ற நிறைய பறவைகளைக் காட்டினார். 

எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டே வந்தான் மித்து.

“பட்டு.. பேர்ட்ஸ் எல்லாம் எங்க தூங்கும்..”

“மரத்து மேல கூடு கட்டி அதுக்குள்ள தூங்கும்..”

“ஏன் மரத்து மேல கட்டுது..”

ஏன் குச்சி வெச்சி கட்டுது..”

“ஏன் நம்மள மாதிரி பெட் ரூம் கிச்சன் ஹால் பால்கனி வெச்சி கட்டல..”

இப்படி நிறைய கேள்விகள் கேட்டான். தாத்தா எல்லாவற்றுக்கும் பதில் சொல்லிக் கொண்டே வந்தார்.

“மித்தூ.. சாப்ட வா..” உள்ளறையிலிருந்து அம்மா குரல் கொடுத்தாள்.

“பட்டு பசிக்கிது..”

“சரி.. நாளைக்கு வேற வேர்ல்டுக்குப் போலாம்!”

“ம்..” என்று மித்து சொல்ல, அவனுடைய பலூனின் மீது ஒரு குயில் வந்து அமர்ந்தது.

மித்து அதைப் பிடிக்கப் போக, அது பறந்து போனது. அப்போது அதன் இறகு ஒன்று அவன் கையில் வந்து விழுந்தது. அதை எடுத்து, தொட்டுப் பார்த்தான்.

பட்டு போன்று மிருதுவாக இருந்தது.

“பட்டு.. இத பாருங்க..”

“ஆமா.. அந்த பேர்ட் உனக்கு கிஃப்ட் கொடுத்திருக்கு.. பத்திரமா வெச்சுக்கோ..”

“கிஃப்ட்டா.. எனக்கா?!” கண்களை விரித்து ஆச்சர்யமாய்க் கேட்டான்.

“ஆமா.. உனக்குதான்.. எனக்கு தரவேல்ல பாரு.. நா பாவம்தானே..” தாத்தா அழுவது போலக் கேட்க,

“நாம நெக்ஸ்ட் டைம் வரும் போது உங்களுக்குத் தரச் சொல்லிக் கேக்கறேன்..” வெள்ளந்தியாகப் பதில் சொன்னான் மித்து.

“ம்.. தேங்க்யூ..”

“மித்தூ.. சாப்ட வாடா..” அம்மா மீண்டும் அழைத்தாள்.

“சரி.. நாம வீட்டுக்கு போலாம்..”

“ட்ர்.. ர்ர்.. ர்ர்..” இருவரின் பலூன்களும் அவர்களைக் கீழே இறக்கி விட்டு விட்டு வானில் பறந்தது. இருவரும் மெல்ல மெல்ல கண் விழித்தனர்.

WhatsApp Image 2020 07 15 at 9.54.52 AM

“பை பட்டு..” என்று சொல்லிக் கொண்டே தாத்தா தூக்கியெறிந்ததை அவரிடமே எறிந்தான்.

அவர் அவதை பிடிக்கத் தெரியாமல் தவற விட்டு மித்துவிடம் பல்பு வாங்கிக் கொண்டு தன் வீட்டுக்குள் போனார்.

மித்து எழுந்து உள்ளே போகும் போது திரும்பிப் பார்த்தான். அங்கே ஒரு இறகு கிடந்தது. அதைப் பார்த்தவன் விழிகள் ஆச்சர்யத்தில் விரிந்தன.

அதை எடுத்து ஆசையாக முத்தமிட்டு பத்திரமாகத் தன் புத்தகத்திற்குள் வைத்துவிட்டு சாப்பிடப் போனான்.

தன் வீட்டு உள்ளறையின் ஜன்னல் வழியாக அவனுடைய மகிழ்ச்சியைப் பார்த்த பட்டாபி தாத்தா புன்னகைத்துக் கொண்டு நிம்மதியாக சாப்பிடப் போனார்.

அவர் வைத்து விட்டுப் போன அந்த ரகசியப் பொருளை எடுத்துப் பார்த்தார் பார்வதிப் பாட்டி.

“என்ன இந்த மனுஷன்.. தீப்பெட்டியில நூலக் கட்டி வெச்சிருக்காரு.. கிறுக்குதான் பிடிச்சிருக்கு இந்த மனுஷனுக்கு..” என்று தன் தலையில் அடித்துக் கொண்டு தாத்தாவைத் திட்டிக் கொண்டே உள்ளே சென்றார் பாட்டி.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
1 கருத்து
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments